தேவர்களின் மேன்மைக்குக் காரணம் வேதங்களே என எண்ணிய சோமுகாசுரன், நான்கு வேதங்களையும் அபகரித்துக் கொண்டு, கடலுக்கடியில் ஒளிந்து கொண்டான். மச்சாவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, கடலுக்கடியில் சென்று, அவனை சம்ஹாரம் செய்து வேதங்களை மீட்டு வந்தார்.
பின்னர் இத்தலத்தில், அரவணையில் சயனித்து, இளைப்பாறியவாறு, நான்முகனுக்கு மீண்டும் வேதோபதேசம் செய்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
தேவர்களின் பிரார்த்தனைப்படி, அர்ச்சாவதாரமாக இங்கேயே சேவை சாதிக்க சம்மதித்த பெருமாள், விஸ்வகர்மாவை அழைத்து, பாற்கடலில் தான் பள்ளிக் கொண்டிருக்கும் கோலத்தை நிர்மாணிக்கச் செய்தார்.
தன்னொளி இழந்த சந்திரன், இத்தலத்தில் தீர்த்தம் ஒன்றை உருவாக்கி, பெருமாளை வழிபட்டு நலம் பெற்றான் என ஸ்தல வரலாறு.
சுருதகீர்த்தி எனும் மன்னன் புத்திர பாக்கியம் வேண்டி பிரார்த்தித்து, இவ்வரங்கனின் கிருபையால் புத்திரர்களைப் பெற்றான் என ஸ்தல வரலாறு மேலும் கூறுகிறது.
தென்பெண்ணை ஆற்றின் கரையில் இவ்வாலயம் அமைந்திருப்பதும், அருகேயுள்ள ஜம்பை எனும் ஸ்தலத்தில் நீருக்கடியில் ஜம்புநாத ஈஸ்வரர் எழுந்தருளியிருப்பதும், பெண்ணையாற்றின் தென் கரையிலுள்ள கள்ளிப்பாடி எனும் ஊரில் மாத்ருபூதேஸ்வரர் இருப்பதும் ஸ்ரீ ரங்கத்தை போலவே இருந்தாலும், ஆதிதிருவரங்கமே மிகப் பழமையானது என்பர்.
திரேதா யுகத்து மத்ஸ்ய அவதார நிகழ்வுகளைக் கொண்ட ஸ்தலம் என்பதால் ஆதி திருவரங்கம் எனப் போற்றப்படுகிறது.