தட்சனின் சாபத்திற்கு ஆளான சந்திரன் க்ஷயரோகம் கொண்டு கஷ்டப்பட்டான். இத்தலத்திற்கு வந்து பெருமாளை சேவித்து, நோய் நீங்கப் பெற்றான். இந்து என்பது சந்திரனின் மற்றொரு பெயர். இந்து வழிபட்டு சாபவிமோசனம் பெற்றதால் இவ்வூர் இந்தளூர் என அழைக்கப்படலாயிற்று.
மது, கைடபர் எனப்படும் இரண்டு அசுரர்களிடம் அகப்பட்டுக் கொண்ட வேதங்கள் நான்கும் துர்கந்தம் அடைந்தன. தாங்கள் கொண்ட துர்நாற்றம் நீங்கப் பெற, காவிரியில் நீராடி, பரிமள ரங்க நாதரை வேண்டி சுகந்தம் பெற்றன. இதனால் பெருமாளுக்கு பரிமள ரங்கர் எனும் திருநாமம்.
அம்பரீஷன் எனும் அரசன், ஏகாதசி விரதம் பூண்டு, விரத நெறிமுறைகளை முறையாக பின்பற்றுபவன். ஏகாதசி விரதம் முடித்து துவாதசி நேரம் முடிவதற்குள் உண்ணுவது வழக்கம். இந்த விரதத்தை தடுத்து அவனை பங்கப்படுத்த விரும்பினார் துர்வாச முனிவர்.
தான் நீராடிவிட்டு வந்து உணவு உட்கொள்வதாக கூறிச் சென்ற துர்வாசர், வேண்டுமென்றே தாமதப் படுத்தினார். விரதபங்கம் ஏற்படாதிருக்க பெரியவர்களின் யோசனைப்படி, உள்ளங்கையில் தீர்த்தம் வைத்து மூன்று முறை அருந்துகிறான்.
இதை கேள்வியுற்ற துர்வாசர், பூதத்தை அம்பரீஷன் மீது ஏவுகிறார். ரங்கனிடம் தஞ்சம் புகுந்தான் அம்பரீஷன். துர்வாசரின் கர்வத்தை அடக்கி அம்பரீஷனுக்கு உதவுகிறார் பெருமாள். அம்பரீஷன் 100 விரதங்களை நிறைவு செய்கிறான்.
தம்மை ஒரு கைங்கர்யத்திற்கும் நியமித்தருளாத பெருமாள் - பாராமுகம் கொண்டவர் என நிந்தித்து பதிகம் பாடுகிறார் திருமங்கை ஆழ்வார். நீ நிந்தித்தாலும் பரவாயில்லை பாடிக் கொண்டே இரு என அரங்கன் அமைதியாக இருக்கிறார்.
'பரிமளரங்கநாதம்' எனத் தொடங்கும் முத்துஸ்வாமி தீட்சிதரின், அமீர் கல்யாணி ராகத்தில் பாடப்படும் கீர்த்தனை பரிமளரங்கநாதரை நமது நெஞ்சில் நிறுத்தும்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று - பஞ்சரங்க க்ஷேத்திரங்களுள் ஒன்று.