மூலவர்: சந்திரமௌலீஸ்வரர், அம்பாள்: அமிர்தாம்பிகை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக, ஒரு மும்முக லிங்கமாக எழுந்தருளியுள்ளார் மூலவரான சந்திரமௌலீஸ்வரர்.
வடக்கே வாமதேவ முகம் - சூரியனுக்கு, தெற்கே அகோர முகம் - அக்னிக்கு, (நம்மை நோக்கி) கிழக்கே தத்புருஷ முகம் - சந்திரனுக்கு, என மும்முகம் கொண்டு அருள் பாலித்ததாக ஐதீகம்.
நடைமுறையில் சந்திரமௌலீஸ்வரர் என்றும், திருமுறையில் சந்திரசேகரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
தெற்கு பார்த்த தனி சந்நிதியில் அம்பாள் அமிர்தாம்பிகை எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். அம்பாள் கோவிலை அடுத்து தீபலட்சுமியை தரிசிக்கலாம்.
கருவறையின் வலப்புறத்தில் 16 பட்டைகளுடைய ஷோடஸ லிங்கமும், இடப்புறத்தில் வீரபத்ரரையும் தரிசிக்கலாம்.
ஆலயத்தினுள் நுழைந்ததும் இடப்பக்கமாக உள்ள மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள வக்ர காளி மீண்டும் மீண்டும் தரிசிக்க தூண்டும் புதுமையான திருவுருவமாக காட்சி தருகிறாள். மிகுந்த வரப்ரசாதி.
தீச்சுடரை பின்னணியாக கொண்ட தலை, மண்டை ஓட்டு கிரீடம், வலது காதில் சிசுவின் பிரேத குண்டலம், இடது காதில் ஓலைச் சுருள், கபாலங்களைக் கோர்த்த முப்புரிநூல், இவற்றை அலங்காரங்களாகக் கொண்டும், மிரட்டும் பெரிய விழிகள், கோரைப்பற்கள் ஆகியன கொண்டும், அஷ்டபுஜங்களில் ஆயுதங்களை ஏந்தியும், எட்டாவது கரத்து ஆள்காட்டி விரலால், பாதத்தை சுட்டிக் காண்பிக்கும் பாவத்திலும் தரிசனம் தருகின்றாள்.
பக்கத்திற்கு இரண்டாக நான்கு துவார பாலகிகள் மற்றும் விசாலமான முற்றத்தில் சப்த மாதாக்களை தரிசிக்கலாம்.
வக்ர காளி சந்நிதி பிரதட்சிணம் செய்யும் வகையில் அமைந்துள்ளது. யோகேஸ்வர லிங்கமும், வலம்புரி விநாயகரும் சந்நிதிக்குள் எழுந்தருளியுள்ளனர். வக்கிராசுரனின் சிலையையும் காணலாம்.
மேற்கு பார்த்து தரிசனம் தரும் ஆத்மலிங்கம், கண்டலிங்கம் என போற்றப்படும் வக்ரலிங்கம். மழை காலத்தில் லிங்கத் திருமேனி மீது, முத்து முத்தாக நீர்த்துளிகள் காணலாம். கோடை காலத்தில் குளிர்ச்சியாக இருக்கும் லிங்கம்.
இத்தலத்தில் எல்லாமே ஒன்றை விட்டு ஒன்று விலகி, வக்ர நிலையில் இருக்கின்றது. த்வஜஸ்தம்பத்திற்கு நேராக இல்லாமல் நந்தி சற்று விலகி வக்ரமாக உள்ளது. விரித்த சிகை இல்லாமல் கூர்மசடையாகக் கொண்டு வக்ர தாண்டவம் ஆடும் நடராஜர், கையில் சங்கு-சக்கரம் கொண்ட வித்தியாசமான விஷ்ணு துர்க்கை, வலப்புறமாக இல்லாமல் காகத்தை இடப்புறமாக கொண்ட சனீஸ்வரன் போன்ற வித்தியாசமான திருவுருவங்களை இத்தலத்தில் தரிசிக்கலாம்.
பிரயோக சக்கரத்துடன் வரதராஜப் பெருமாள், சஹஸ்ரலிங்கம், குண்டலினி சித்தர் ஆகியோர்க்கு சந்நிதிகள் உள்ளன.