ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் - காஞ்சி காமகோடி பீடத்தின் 59வது பீடாதிபதியாக இருந்தவர். (1638 - 1692).
காஞ்சிபுரத்தில் மண்டனமிஸ்ரர் அக்ரஹாரத்தில் வசித்து வந்த கேசவ பாண்டுரங்கர் - சுகுணா தம்பதியினருக்கு 1638ஆம் வருடம் பிறந்த குழந்தைக்குப் புருஷோத்தமன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். அப்போது 58வது பீடாதிபதியாக இருந்த ஆத்ம போதேந்திரர் என்கிற விஸ்வாதிகேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் உதவியாளராக இருந்தவர் கேசவ பாண்டுரங்கர்.
தந்தையுடன் அடிக்கடி ஸ்ரீமடத்திற்கு வந்த பாலகனான புருஷோத்தமனின் பக்தி, சாதுர்யம் இவற்றைக் கவனித்த சுவாமிகள், புருஷோத்தமனை ஸ்ரீமடத்திற்கு எடுத்துக் கொண்டார். ஏழு வயதில் உபநயனம். 16 வயது முடிவதற்குள் வேதம், சாஸ்திரம், வேதாந்தம் அனைத்தையும் கற்றுணர்ந்தார் புருஷோத்தமன். பின்னர் 59வது பீடாதிபதியாகப் பட்டம் சூட்டி ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற பெயரையும் சூட்டினார், பெரிய சுவாமிகள்.
பகவானின் கருணையை எளிதில் பெற நாம சங்கீர்த்தனமே உயர்ந்த வழி எனப் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது. திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாளுடன் சேர்ந்துகொண்டு பல ஊர்களுக்குச் சென்று நாம சங்கீர்த்தனங்கள் செய்தார். பெருமளவு மக்கள் கலந்துகொண்டு சந்தோஷப்பட்டனர்.
நாம சங்கீர்த்தனத்தில் வெகுவாகத் தனது மடாதிபதி பதவியையும் துறந்தார். ஸ்ரீதர ஐயாவாள், மஹாலிங்கசுவாமி கருவறையில் ஐக்கியமானதிலிருந்து, மௌனமாகி, கோவிந்தபுரத்திலேயே தங்கி, நாமஜெபம் செய்து கொண்டிருந்தார்.
கோடைகாலத்தில், காவிரி ஆறு நீரற்று மணல் படுகையாக இருக்கும். அதில் சிறுவர்கள் விளையாடிச் சந்தோஷப்படுவார்கள். அவர்களுக்கு இணையாக சுவாமிகளும் விளையாடுவார். ஒரு நாள் மணல் நிறைந்த பகுதி ஒன்றில் குழி தோண்டி, இறங்கி நின்று கொண்டார் சுவாமி. மேலே மணலைப் போட்டு மூடுமாறு சிறுவர்களுக்கு உத்தரவிட்டார். இதுவும் ஒரு விளையாட்டு எனக் கருதிய சிறுவர்கள், அவ்வாறே செய்தனர்.
மறுநாள் குருவைக் காணாது, சிஷ்யர்கள் கவலையுற்று இருக்க, சிறுவர்கள் மூலம் விஷயமறிந்து, தேட ஆரம்பித்தனர். மணலைத் தோண்டித் தேடுபவர்களிடம் தான் ஜீவசமாதியான விஷயத்தை அசரீரியாகக் கூறி, தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொண்டார். இப்போதும் அதிகாலை வேளையில் அவர் நடக்கும் பாதகுறடு சத்தமும், ராமநாம ஒலியும் கேட்பதாகச் சொல்கின்றனர்.
1692ஆம் வருடம் (பிரஜோத்பத்தி) புரட்டாசி மாதம் பௌர்ணமி திதியில் சுவாமிகள் ஆற்றுக்குள் இறங்கி, மணலுக்குள் ஐக்கியமாகி ஜீவ சமாதியானார்.
சுவாமிகள் வழங்கிய நூல்கள்:
ராமாமிர்த ரஸோதயம், ராம ரசாயனா, ராம சூர்யோதயா, நாம தரங்கா, நாம அர்ணவா, ஹரிஹர போதாதிகாரா, ஹரிஹர அத்வைத பூஷணா, மூர்த்த பிரம்மா விவேகா ஆகிய நூல்கள்.