அருள்மிகு உத்ராபதீஸ்வரர் திருக்கோயில் (திருச்செங்காட்டங்குடி)

God Name : மூலவர்: கணபதீஸ்வரர், உற்சவர்: உத்ராபதீஸ்வரர், சிறப்பு மூர்த்தம்: வாதாபி கணபதி

திருக்கழுக்குன்றம் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

மாகதன் எனும் முனிவருக்கும் விபுதை எனப்படும் அசுரப் பெண்ணுக்கும் பிறந்தவன் கஜமுகாசுரன் எனும் அரக்கன். யானை முகத்துடன் பிறந்ததால் கஜமுகாசுரன் எனப்பட்டான். தேவர்களாலோ, ஆயுதங்களைக் கொண்டோ தனக்கு மரணம் நிகழக்கூடாது என்ற வரங்களைப் பெற்று, மமதை கொண்டு அலைந்தான். இவனால் இம்சிக்கப்பட்ட தேவர்களும், முனிவர்களும் இறைவனிடம் சென்று முறையிட்டனர். யானைமுகத்துடன் அவதரித்த சிவகுமாரரான விநாயகர் தமது பூத கணங்களுடன் சென்று கஜமுகாசுரனிடம் போரிட்டார். தனது வலது தந்தத்தை உடைத்து அவன் மேலெறிந்து அவனை சம்ஹாரம் செய்தார். அந்தக் கொம்பும் விநாயகரின் திருக்கரத்தை வந்தடைந்தது. விநாயகக் கடவுள், கஜமுகாசுரனைக் கொன்ற பொழுது ரத்தம் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இவ்வூர் முழுவதும் செங்காடாய் (செந்நிறமாய்) மாறிவிட்டதால் இத்தலத்திற்கு திருச்செங்காட்டான்குடி எனப் பெயர் வந்தது. கஜமுகாசுரனைக் கொன்ற பாவம் தீரும் பொருட்டு சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து பூஜித்தார் கணபதி. இதனால் சுவாமிக்கு கணபதீச்சரர் என்று திருநாமம். சிவபக்தியில் காலத்தைக் கழிக்கும் சத்யாஷாட முனிவர் இங்கு நீண்ட காலம் தவமிருந்து, பிரத்யட்சமான இறைவனிடம் அருளாசியைப் பெற்றார். இதனால் மூலவர்க்கு சத்யபுரீஸ்வரர் என்ற பெயர் வந்தது. சமுத்ர ராஜன் வழிபட்டு பிரதிஷ்டை செய்த லிங்கம் சமுத்ரராஜ லிங்கம். பிரம்மனுக்காக பொய்யுரைத்த தாழம்பூ அந்தப் பாவத்தைப் போக்கிக் கொள்ள, இங்கு ஆத்தி மரமாக முளைத்து தவம் செய்ததால் ஆத்திவனம் எனப் பெயர் கொண்டது. செங்காட்டான்குடியில் பிறந்து வளர்ந்த பரஞ்சோதியார் என்பவர், தனது குலத்திற்கேற்ப ஆயுர்வேதக் கலை பயின்றதோடல்லாமல், படைக்கலங்களைக் கையாள்வதிலும், குதிரை-யானை ஏற்றங்களிலும் நன்கு பயிற்சி பெற்றிருந்தார். இவரது போர் புரியும் திறமை மற்றும் புகழ் அனைத்தையும் அறிந்திருந்த பல்லவ மன்னன், வட நாட்டைச் சேர்ந்த அரசன் இரண்டாம் புலிகேசியின் மீது போர் புரிய இவரை பயன்படுத்திக் கொண்டான். வாதாபி போரில் வெற்றி கண்ட பரஞ்சோதி அங்கிருந்த கணபதியை இங்கு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தார். அவரே வாதாபி கணபதி. இங்குள்ள கணபதியைப் போற்றி முத்துசாமி தீட்சிதரால் பாடப்பட்ட 'வாதாபி கணபதிம் பஜேஹம்' என்ற பாடல் பிரசித்தமானது எனக் கூறப்படுகின்றது. சிவனடிமைத்திறன் கொண்டவரை போருக்குப் பயன்படுத்தி வீணடித்து விட்டோமே என மனம் வருந்திய மன்னன், பரஞ்சோதியாரைச் சிவத்தொண்டு செய்ய அனுப்பி விட்டான். சிவனடியார்களுக்கும் தொண்டு செய்வதைப் பெரும்பணியாக ஏற்று மகிழ்வோடு செய்து வந்த பரஞ்சோதி, சிறுத்தொண்டர் என அழைக்கப்படலானார். சிறுத்தொண்டரின் பக்தியைச் சோதிக்கவும், அவரது பெருமையை அனைவர்க்கும் தெரியப்படுத்தவும், பைரவ வேடம் கொண்டு உத்ராபதியார் எனும் பெயரில் இங்கு வந்தார் சிவபெருமான். இடுப்பு வளைந்து இரு பாதங்கள் பூமியில் ஊன்றி சமபாத நடனத்துடனும் பேரெழிலான வடிவத்துடனும், சிறுத்தொண்டரின் வீட்டிற்குச் சென்றார். அங்கே சிறுத்தொண்டர் இல்லாததால் ஆலயத்திற்குள் வந்து ஆத்தி மரத்தடியில் அமர்ந்தார். சிவனடியார் ஒருவர் வந்திருப்பதை கேள்வியுற்ற சிறுத்தொண்டர், ஆலயத்தின் ஆத்திமரத்தடியில் அமர்ந்திருக்கும் உத்ராபதியாரைத் தனது வீட்டிற்கு வந்து அமுதுண்ணுமாறு அழைத்தார். வந்தவரோ தனக்குப் பிடித்த நர மாமிசம் படைத்தால் வருவதாகக் கூறினார். பெற்றோர்க்கு ஒரே பிள்ளையாயும், உறுப்பில் குறை ஏதும் இல்லாதவனாகவும் உள்ள சிறுவனை - தாய் பிடித்துக் கொள்ள, தந்தையார் அவனை வெட்டி கறி சமைத்து, மனமுவந்து பரிமாறினால் அதை ஏற்று உண்பேன் என மேலும் கூறினார். சிவனடியார்களை மகிழ்விப்பதைத் தொண்டாகச் செய்து வரும் சிறுத்தொண்டர், தனது மனைவியான திருவெண்காட்டு நங்கையின் ஒப்புதல் பெற்று, தனது மகன் சீராளனை வெட்டி கறி சமைத்து, வந்திருக்கும் சிவயோகியான பைரவருக்குப் பரிமாறினார். சாப்பிட அமர்ந்த உத்ராபதியார், என்னுடன் சேர்ந்து சாப்பிட யாராவது சிவனடியாரை அழைத்து வாருங்கள் என்றார். வேறு யாரும் கிடைக்கவில்லை என வருந்தி நின்ற சிறுத்தொண்டரிடம், உங்களது பிள்ளையையாவது அழைத்து வாருங்கள் என்றார். செய்வதறியாது அழுது புலம்பிய சிறுத்தொண்டரிடம், வெளியே போய் கூப்பிட்டுப் பாருங்கள் என்றார். அவ்வாறே சிறுத்தொண்டரும் செயல்பட, ஓடி வந்தான் சீராளன். மகன் மீண்டும் உயிர் பெற்று ஓடி வருவதைக் கண்டு ஆனந்தித்த பெற்றோர்கள், திரும்பிப் பார்த்தபோது சாப்பிட அமர்ந்த பைரவரைக் காணவில்லை. இலையிலிருந்த உணவும் மறைந்து விட்டது. சிறுத்தொண்டரும் அவரது மனைவியும் சீராளனும் வியப்பில் ஆழ்ந்திருக்க, உமையன்னையுடனும் முருகனுடனும் காட்சி தந்த சிவபெருமான் அவர்களைக் கயிலைக்கு அழைத்துச் சென்றார், என ஸ்தல வரலாறு. இக்காட்சி கருவறையின் வடபுறச் சுவரில் இருக்கின்றது. ஸ்ரீ ஐயடிகள் காடவர்கோன் எனும் அரசன் காஞ்சிபுரத்தை ஆண்டு வந்தான். சிறுத்தொண்டரின் கதையையும் உத்ராபதியாரைப் பற்றியும் கேள்விப்பட்டு, திருச்செங்காட்டங்குடிக்கு வந்து, தனக்கும் அதே கோலத்தைக் காட்டியருள வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடினான். ஆலயத் திருப்பணி செய்து, பின்னர் ஆலய கும்பாபிஷேகத்தை முடித்து, உத்ராபதியாரின் திருவுருவம் ஒன்றையும் செய்து முடித்தால் உனது ஆசை நிறைவேறும் என்றார் கணபதீச்சரர். சிற்பக்கலையில் விற்பன்னர்களைப் பணியிலமர்த்தி உத்ராபதியாரின் திருவுருவத்தைச் செய்து முடிக்குமாறு பணித்தான் அரசன். எவ்வளவு முயன்றும் திருவுருவச் சிலை சரியாக அமையவில்லை. செய்வதறியாது துக்கத்தில் ஆழ்ந்திருந்தான் அரசன். அப்போது சிவயோகி ஒருவர் சிற்பக் கலைக்கூட உலைக்களம் வந்து குடிக்கத் தண்ணீர் கேட்டார். விரக்தியிலிருந்த சிற்பிகள், கொதி உலையைக் காண்பித்தனர். இதுதான் வேண்டும் எனக் கூறி கொதிக்குழம்பை எடுத்துக் குடித்து விட்டார் சிவயோகி. பின்னர் உத்ராபதியாரின் அழகிய திருவுருவச் சிலையாக நின்றார். அந்தச் சிலை மீது சிற்பியின் உளி பட்டதும் ரத்தம் பீறிட்டது. பச்சைக் கற்பூரம் வைத்து அழுத்தியதும் ரத்தம் கொட்டுவது நின்றது. மூல லிங்கத்தின் பக்கத்திலுள்ள சந்நிதியில் நாம் காணும் உத்ராபதியாரின் திருவுருவம் இப்படி அமைந்ததுதான் என ஸ்தல வரலாறு. சிவபெருமான் - உத்ராபதீச்வரராகத் தோன்றி, சிறுத்தொண்டர் இல்லம் முதலாக ஆலயத்துள்ளிருக்கும் கணபதீச்வரர் சந்நிதி மற்றும் ஆத்தி மரம் வரை, தனது பொற்பாதங்களைப் பதித்துள்ளார். அந்தப் புண்ணிய தடத்தில் செல்லும் பாக்கியம் நமக்குக் கிடைக்கின்றது. கஜமுகாசுரனை வதைத்த பிறகு கணபதி, சிவபெருமானை வழிபடும் ஐதீகத்தை ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில், பூர்வ பட்சமும்-சதயமும்-சஷ்டியும் கூடிய தினத்தன்று நடத்திக் காட்டுகின்றனர். சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் 6ஆம் நாளன்று, பிட்சாடனர் உற்சவம் நடைபெறும். அன்று அமுது படையல் விழாவென - சிறுத்தொண்டர் வீட்டில் நடந்த நிகழ்வையும், சிறுத்தொண்டரைக் குடும்பத்துடன் கயிலைக்குக் கூட்டிச் செல்லும் நிகழ்வையும் நடத்திக் காட்டுவார்கள். தெற்கு வீதியின் மேல்கோடியில், சிறுத்தொண்டரின் மடம் இருக்கின்றது. இதுவே அவரது பழைய வீடு என்கின்றனர். அங்கே வாசலில் சிறுத்தொண்டரின் உருவமும், அமுதுண்ணச் சென்ற உத்ராபதியாரின் திருமேனியும், உணவு பரிமாறும் திருவெண்காட்டு நங்கையின் உருவமும் உள்ளன. சித்திரை பரணியில் அமுது படையல் விழா நடைபெறும். ஐயடிகள் காடவர்கோனின் உருவமும் சிறுத்தொண்டர் திருவுருவமும் கோவிலில் காணலாம். தேவாரத் திருத்தலம்
மூலவர்: கணபதீச்சரர், உற்சவர்: உத்தராபதீஸ்வரர், அம்பாள்: ஸ்ரீ வாய்த்த திருக்குழலி நங்கை எனப்படும் சூளிகாம்பாள். சிறப்பு மூர்த்தம்: வாதாபி கணபதி. மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளி அருள் புரிகிறார் மூலவரான கணபதீச்சரர். சத்தியபுரீசர் என்ற பெயரும் உண்டு. கணபதீச்சரமுடைய மகாதேவர் என கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. மூலவர் சற்று பள்ளத்தில் வீற்றிருக்கிறார். மேலே உள்ள கருங்கல் கொடுங்கையில் வாத்தியங்களை வாசித்துக் கொண்டிருக்கும் பலவிதமான பூதங்களின் உருவங்களைக் காணலாம். கணபதீச்சரர் மண்டபத்தில் டிண்டி, முண்டி எனும் இரு துவாரபாலகர்கள் காவல் புரிகிறார்கள். விநாயகப் பெருமான் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம் என்பதால், கணபதீச்சரர் எனும் திருநாமம் கொண்டார். தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் அம்பாள் ஸ்ரீ வாய்த்த திருக்குழலி நங்கை எழுந்தருளி தரிசனம் தருகிறாள். திருக்குழல் உமை நங்கை என்றும் கூறுவர். வடமொழியில் சூளிகாம்பாள் என்பர். கருவறையை ஒட்டி கிழக்கு பார்த்து அமைந்துள்ள சந்நிதியில் சண்டிகேஸ்வரியை தரிசிக்கலாம். சிவயோகியாக பிட்சாடன கோலத்தில் எழில் வடிவமாக இருப்பவர் உத்தராபதீஸ்வரர். பைரவ வேடம். வலக்கரத்தில் டமருகமும், இடக்கரத்தில் கபாலமும், தோளில் சூலம் தாங்கியும், கஞ்சுகம், சிலம்பு, பொக்கணம், மாணிக்க கந்தை, காதில் மணிக்குழை ஆகியன அணிந்தும், சங்கு மேனியெல்லாம் திருநீறு பூசியும், நீண்ட வரிசடையுடனும், காஷாய உடுப்புடனும் காட்சி தருகிறார். வடக்கே இருந்து வந்ததால் உத்தராபதீஸ்வரர் என்று அழைக்கிறார்கள். வலச்சுற்றில் - சமுத்ரராஜ லிங்கம், அதிகார நந்தி, பைரவர், பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், விநாயகர், சுப்பிரமணியர், நால்வர், சந்தன நங்கை, வெண்காட்டு நங்கை, சீராளன், சிறுத்தொண்ட நாயனார், மற்றும் சங்கநிதி, பத்மநிதி, சூரியன் ஆகியோரின் திருவுருவங்களைக் காணலாம். சத்யாஷாட லிங்கம் பிரகாசமாக இருக்கிறது. சிறுத்தொண்டர் எனப்படும் பரஞ்சோதியாரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட வாதாபி கணபதி தனி சந்நிதி கொண்டு தரிசனம் தருகிறார். இரு கரங்களையும் தொடையில் இருத்தி சம்மணம் போட்டு அமர்ந்த கோலம். இடப்புறமாக சுழித்த துதிக்கை கொண்டுள்ளார். அஷ்டமூர்த்தி மண்டபம் எனப்படும் நவதாண்டவ மண்டபத்தில் புஜங்கலலிதர் (பாம்பாரணர்), கஜசம்ஹாரர், ஊர்த்துவ தாண்டவர், கால சம்ஹாரர், திரிபுர சம்ஹாரர், கங்காளர், பிட்சாடனர், பிரம்ம சிரம் கொய்த பைரவர், உத்தராபதியார் ஆகியோரின் எழில் வடிவங்களைக் காணலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.