அருள்மிகு மயூராநாதர் திருக்கோவில் (மயிலாடுதுறை)
God Name : மயூராநாதர்
ரஞ்சன்குடி கோவில்
பெரம்பலூர்
Call : +91-
சூதவனம், பிரம்மபுரம் என்றெல்லாம் ஆதியில் போற்றப்பட்ட இந்த க்ஷேத்திரம் - காசிக்கு சமமாக கருதப்படும் ஆறு சிவஸ்தலங்களுள் ஒன்று. உமையன்னை மயிலுருவில் சிவபெருமானை வழிபட்ட ஸ்தலமாதலால் மாயூரம் என்று வட மொழியிலும், மயிலாடுதுறை என்ற தமிழிலும் அழைக்கப்படுகின்றது.
ஒரு சமயம், கயிலையில் பஞ்சாட்சரத்தின் பொருளை உமையவளுக்கு விளக்கிக் கொண்டிருந்தார் சிவபெருமான். அங்கு ஆடிக் கொண்டிருந்த மயிலின் மீது உமையவளின் கவனம் சென்றது. இதனால் கோபமுற்ற சிவபெருமான், அவளை மயில் உருவம் கொள்ளும்படி சபித்து விடுகிறார்.
மாயூரத்திலும், மயிலாடுதுறையிலும் மயிலுருவில் தவம் கடந்து தம்மை அடையும்படி ஆக்ஞாபித்தார் இறைவன். அவ்வாறே உமையவள் மயிலுருவில் தவம் செய்து அபயாம்பிகையாக மாறி சிவபெருமானை அடையப் பெற்ற ஸ்தலம் என்பதால் கௌரி மாயூரம் எனப்படுகிறது. சிவபெருமானும் ஆண் மயிலாக வந்து அம்பாளுடன் ஆனந்த தாண்டவம் ஆடிய ஸ்தலம்.
அம்பாளின் பிரார்த்தனைப்படி துலா மாதத்தில் இங்கே காவிரியில் ஸ்நானம் செய்பவர் இறைவன் அருளைப் பெறுவர் என ஸ்தல புராணம் கூறுகின்றது.
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புண்ணிய நதிகளிலும் ஸ்நானம் செய்த மக்களின் பாவங்கள் படிந்ததினால், சண்டாள கன்னிகைகளாக வடிவம் கொண்டு துயருற்று திரிந்தனர். கண்வ முனிவரின் யோசனைப்படி மாயூரம் வந்து, துலா மாதம் காவிரியில் மூழ்கி, பாவங்களை தொலைத்து சுய உருவம் பெற்றனர்.
துலா காவிரி ஸ்நானம் மாயூரத்தல் விசேஷம். 14 லோகத்திலுள்ள 63 கோடி தீர்த்தங்களும் அப்போது காவிரியில் கலப்பதாக ஐதீகம். ஐப்பசி கடைசி நாள் கடைமுகம் அன்று ஏராளமானவர்கள் நீராடுவர். அந்நாளில் நீராட வந்த நாதசர்மா-அநவித்யை தம்பதியினர் வருவதற்குள் கடைமுழுக்கு முடிந்துவிட்டது. மிகவும் வருத்தத்துடன் அன்றிரவு அங்கேயே தூங்கிய தம்பதியனரின் கனவில் தோன்றிய சிவபெருமான் மறுநாள் காலை சூரிய உதயத்திற்குள் குளித்தால் துலா மாத புண்ணியம் கிடைக்கும் என்று கூறினார். தம்பதிகளுக்காக வழக்கமான நேரத்தை முடக்கி வைத்ததால் முடமுழுக்கு எனப் பெயர் கொண்டது. (இங்கு காவிரி ஆறு குறுகலாக ஓடுகின்றது - 200 அடி அகலம் (அக்டோபர்-நவம்பர் மாதங்களில்) நிறைந்து ஓடும்.)
ஆடிப் பூர அம்மன் - ஆடிப் பூரத்தன்றும், ஆடி வெள்ளிகளிலும் காவிரிக்கரை வருவாள்.
வசந்த காலத்தில் 10 நாட்கள் சைத்ரோத்ஸவம் நடைபெறும். வைகாசியில் பிரம்மோற்சவம்.
துலா மாத உற்சவத்தின் 5ஆம் நாள் அம்பாள் மயிலாக இருந்து ஆடிய மயூர நடனமும், 7ஆம் நாள் திருக்கல்யாணமும் நடைபெறும். அன்றிரவே மயிலம்மையும் மயூரநாதரும் சேர்ந்து ஆடும் மயூர தாண்டவமும் ஐதீகமாக ஆடிக் காட்டுவார்கள்.
அம்பாள் வீதி உலா வருகையில், பலவித அலங்காரங்களுடனும், வகிட்டின் இருபுறமும் சூரிய பிரபை - சந்திர பிரபை மின்ன, சிகப்பு பட்டு உடுத்தி பவனி வருவது கண்கொள்ளா காட்சி.
அந்தணர்களை வேலை வாங்கி, பொருள் தராது ஏமாற்றிய பாவத்தால் ஒருவன் அவனது மறு பிறவியில் நரியாகப் பிறந்து சுடுகாட்டில் அலைந்தான். இங்கு வந்து ரிஷப தீர்த்தத்தில் நீராடி இவ்விறைவனை வழிபட்டு சுய உருவம் பெற்றான் என ஸ்தல வரலாறு.
தேவாரத் திருத்தலம்.
மூலவர்: மயூரநாதர், அம்பாள்: அபயாம்பிகை
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் மூலவரான மயூரநாதர். ஒளி வீசும் அழகிய தேஜோமய லிங்கம். சுயம்பு லிங்க மூர்த்தம். திரிதள விமானம் கொண்ட கிழக்கு பார்த்த சந்நிதி.
சாந்த ஸ்வரூபியாக, சர்வாலங்கார பூஷிதையாக தரிசனம் தரும் அன்னை அபயாம்பிகை மிகுந்த வரப்பிரசாதி என்று போற்றப்படுபவள். சங்கு-சக்கரம் ஏந்திய மேற்கரங்கள், வலது கீழ்க்கரம் கிளி ஒன்றை ஏந்தியும், மற்றது அபய முத்திரை கொண்டும் காட்சி தரும் அழகிய திருவுருவம்.
கோஷ்ட மூர்த்தங்களுள் நடராஜர் பாதமருகே ஜ்வரஹரேஸ்வரர் இருப்பது வித்தியாசமானது. சண்டிகேஸ்வரர் இரண்டு: சிவசண்டிகேஸ்வரர் மற்றும் தேஜஸ் சண்டிகேஸ்வரர்.
பிரகார வலச் சுற்றில் அஷ்டவசுக்கள் வழிபட்ட லிங்கங்கள், நர்த்தன கணபதி, கங்காவிசர்ஜனர், ஆலிங்கன மூர்த்தி, பிட்சாடனர், அஷ்டலட்சுமி, சட்டைநாதர் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் வடிவத்தின் மரத்தில் இரண்டு மயில்கள் இருப்பது வித்தியாசமானது. அநவித்யாம்பிகை சந்நிதியிலுள்ள தட்சிணாமூர்த்தி வடிவத்தில் புலி, சிங்கம், பாம்பு ஆகியன இடம் பெற்றுள்ளன.
அம்பாள் சந்நிதியின் தென்புறம் இருக்கும் அநவித்யாம்பிகை சந்நிதியில் ஒரு சிவலிங்கம் உள்ளது. இந்த லிங்கம், நாதசர்மா என்பவரின் துணைவி அநவித்யை பூஜித்தது. இவள் சிறந்த சிவபக்தை. அவள் பூஜித்த லிங்கத்திற்குள் ஐக்கியமானவள். இந்த லிங்கத்திற்கு புடவை சார்த்தப்படுகிறது.
அகத்திய சந்தன விநாயகர், களஞ்சிய விநாயகர், கணக்கடி விநாயகர் மற்றும் முக்குறுணி விநாயகர் என அநேக விநாயகர்கள் எழுந்தருளி ஆசி வழங்குகின்றனர்.
மயூரநாதர் சந்நிதியின் பின்புறம் குமரக்கோவில் உள்ளது. வள்ளி - தெய்வயானை உடனாய முருகப் பெருமான் எழுந்தருளியுள்ளார். கந்த சஷ்டியின்போது மற்றைய சிவாலயங்களில் முருகப்பெருமான் அம்பிகையிடம் வேல் வாங்குவது சம்பிரதாயம். இங்கு சிவனிடமே வேல் வாங்குவது வித்தியாசமான மரபு.
வடக்கு பிரகாரத்தில் பழைய கோவில் எனப்படும் பிரம்மபுரீசர் சந்நிதி இருக்கின்றது. குதம்பை சித்தர் ஜீவ சமாதி கொண்டுள்ளார் என்பதை நினைவுபடுத்த குதம்பை சித்தரின் சிலை வடிவம் உள்ளது. ஸ்தல விருட்சத்தின் அடியில் ஆதி மயூரநாதர் கோவில் கொண்டுள்ளார். இறைவன் லிங்க வடிவிலும், அம்பிகை மயில் வடிவிலும் தரிசனம் தருகின்றனர். செப்பில் உருவான மயில் ஒன்றும் காணலாம். எதிரேயிருப்பது மயிலம்மன் சந்நிதி.
தலையில் அக்னியுடன் வித்தியாசமாக தரிசனம் தரும் ஜ்வாலா சனி திருவுருவமும், அதனருகிலேயே சிவபூஜை செய்யும் சனீஸ்வரரின் மற்றொரு திருவுருவமும் அபூர்வமானது. சனி தோஷம் உள்ளவர்கள் பிரார்த்திக்கின்றனர்.
பார்வதி மயில் உருக் கொண்டு இறைவனை வழிபடும் கோலத்தை கீழைக் கோபுரத்தில் அழகாக சித்தரித்து உள்ளனர். வெளிக் கோபுரத்தில் காணப்படும் பல அழகிய வண்ண சுண்ணச் சிலைகளுள் சிவபெருமான் தேவியை ஆலிங்கனம் செய்யும் பாவத்திலுள்ள சிலை அபூர்வமானது. 9 அடுக்குகள் கொண்ட கிழக்கு வாசல் கோபுரம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.