அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோவில், திருவாலங்காடு

God Name : வடாரண்யேஸ்வரர்

Call : +91-

சிவபெருமான் - தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளியிருந்த காலத்தில், மன்மதன் பாணம் வீசியதால், சுட்டெரித்து, பின்னர் யோகத்தை முடிக்க, உகந்த இடம் இதுவென, இங்கு எழுந்தருளியதாக கூறுவர். ‘நிசும்பன்’, ‘சும்பன்’ எனும் இரண்டு அசுரர்கள், தேவர்களையும் - முனிவர்களையும் துன்புறுத்தி வந்தனர். இதிலிருந்து விடுபட அவர்கள் ‘பரமேஸ்வரியிடம்’ முறையிட்டனர். பரமேஸ்வரி தனது குருதியின் மூலம் உருவாக்கப்பட்ட ‘காளி தேவியை’ ஏவி, அசுரர்களின் கொட்டத்தை அடக்கி, அவர்களை சம்ஹாரம் செய்தாள். அசுரர்களின் ரத்தத்தைக் குடித்ததால் அசுர குணம் கொண்ட காளி, ரத்த வெறி கொண்டு, அட்டகாசம் செய்யலானாள். இதனைக் கண்டு பயந்த மகரிஷிகள், சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். கோர வடிவம் ஒன்றை எடுத்து காளியை அடக்க, திருவாலங்காட்டை அடைந்தார் சிவபெருமான். சூழ்ச்சியால் வெற்றி கொள்ள எண்ணிய காளி, சிவபெருமானை நடன போட்டிக்கு அழைத்தாள். சிவபெருமான் ‘ஊர்த்துவ தாண்டவம்’ ஆடி, காளியை வெற்றி கொண்டார் என ஸ்தல வரலாறு. முக்தி தீர்த்தக் கரையில், ‘சுனந்த முனிவரும்’, ‘கார்க்கோடகனும்’ பார்க்கும் வண்ணம் நடனப் போட்டி ஆரம்பமானது. சிவபெருமானது கங்கணமாயிருந்த கார்க்கோடகன், கையில் விஷத்தை கக்கியதால், சாபம் பெற்று, விமோசனம் வேண்டி, பூலோகம் வந்தான். இவ்விறைவனை வழிபட வந்த இடத்தில், சுனந்த முனிவருடன் சேர்ந்து, இந்த நடனத்தை காணும் பாக்யம் கிட்டியது. ஊர்த்துவ தாண்டவம் ஆட முடியாத காளி, தனது தோல்வியை ஒப்புக் கொண்டாள். ஆலயத்தின் இடது பக்கம், காளிக்கு இடம் தந்து, அவளுக்கு பூஜை செய்த பிறகே, தனக்கு பூஜை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். சுனந்த முனிவர் தவம் செய்து கொண்டிருக்கையில், அவர் மீது புற்று ஒன்று உண்டாகி, முனிவர் மீது முஞ்சம்புல் முளைத்ததனால், அவருக்கு ‘முஞ்சிகேசி’ என்ற பெயர் உண்டானது. கோவிலின் மேற்கே ‘முக்தி தீர்த்தம்’ எனும் குளமும், அதன் வடகிழக்கு மூலையில் பத்ரகாளி கோவிலும் உள்ளன. காளியை முதலில் வழிபட்டு பின்னர் ஆலங்காட்டு அப்பனை வணங்க வேண்டும். சுகந்த முனிவர் மற்றும் கார்க்கோடகன் வழிபட்ட ஸ்தலம். பரணி நட்சத்திரக்காரர்களுக்கு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், காரைக்கால் அம்மையார், பட்டினத்தார், வள்ளலார், அருணகிரிநாதர், கச்சியப்பர், பாம்பன் ஸ்வாமிகள் - ஆகியோரின் பாடல்கள் பெற்ற ஸ்தலம்.
தேவாரத் திருத்தலம், பஞ்ச சபைகளில் ஒன்று - ரத்தின சபை - ஊர்த்துவ தாண்டவம். கிழக்கு நோக்கிய ராஜகோபுரம். இடது புறமாக அழகிய சித்தி விநாயகர் சந்நிதி. மூலஸ்தானத்து வாசலின் இரண்டு பக்கங்களிலும் ‘மூஷிக கணபதியும்’, ‘சிகிஸ்கந்தரும்’ எழுந்தருளி உள்ளனர். மூலஸ்தானத்தில் ‘வடாரண்யேஸ்வரர்’ சிவலிங்க ஸ்வரூபமாக தரிசனம் தருகின்றார். கம்பீரமான பாணமும், ஆவுடையும் கொண்ட அழகிய ஒளி வீசும் லிங்கம். ருத்ராட்ச விதானம் கொண்ட கருவறை. இவருக்கு ‘ஆலங்காட்டு அப்பரர்’, ‘ஊர்த்துவ தாண்டேஸ்வரர்’, ‘தேவர் சிங்கப் பெருமான்’ போன்ற திருநாமங்களும் உண்டு. இரண்டாம் பிரகாரத்தில் தனி சந்நிதி கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள் அம்பிகை ‘வண்டார்குழலியம்மை’. ‘பிரம்மரலிகாம்பாள்’ என்றொரு பெயரும் உண்டு. ரத்தின சபை: சிவபெருமான், இத்தலத்தில், சுனந்தன முனிவர்க்கு ‘சண்ட தாண்டவம்’ ஆடிக் காட்டினார். எல்லா தாண்டவங்களுக்கும் இதுவே மூலம் என்பர். உலகம் இயங்க வேண்டி இறைவன் நடிக்க வேண்டியதை விளக்கும் நடனம் எனக் கூறுவர். எண்கரங்கள் கொண்ட ‘ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி’ - தனது இடது காலைத் தூக்கி (அதுவும் உடலோடு ஒட்டாமல்) ஆடுகின்ற தோற்றத்தில் காட்சி தருகின்றார். ‘அநுக்ரஹ தாண்டவம்’ என்பர். இடதுபுறத்தில் ‘சமீப மீனாம்பிகை’ எனும் அம்பிகை எழுந்தருளியுள்ளார். ‘சமீ’ என்றால் ‘சமீபம்’ - ‘சினம்’ என்றால் ‘வியப்பு’. ரத்ன சபையை தனியாக பிரதக்ஷிணம் செய்யும் வகையில் அமையப் பெற்றுள்ளது. ஊர்த்துவ தாண்டவம் என்றால் ‘காலை மேலே தூக்கி ஆடுவது’ - இதனை ‘லலாட திலகம்’ என்று கூறுவார்கள். அதாவது காலைத் தூக்கி நெற்றியில் திலகமிடுவது எனப் பொருள். காதுக் குழையை காலால் கழற்றி அணிந்தது - இந்த ஸ்தலத்தில்தான். பிரகாரத்தில் ‘அஷ்ட கணபதிகள்’, நாய் வாகனமில்லாத ‘பீஷண பைரவர்’ மற்றும் உபதேச கோல ‘தட்சிணாமூர்த்தி’, ‘சிவசூரியன்’, ‘அதிகார நந்தி’ ஆகிய மூர்த்தங்களைக் காணலாம். ஆஜானுபாகு தோற்றத்தில் ‘அகோர வீரபத்ரர்’, ‘ஸ்ரீ தேவி பூ தேவி சமேத விஜயராகவப் பெருமாள்’ ஆகியோரின் திருவுருவங்களை தரிசிக்கலாம். சனியின் மகனான ‘மாந்தியையும்’, மாந்தி வழிபட்ட ‘மாந்தீஸ்வரரையும்’ தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.