அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவில் (காஞ்சி)

God Name : ஸ்ரீ வரதராஜப் பெருமாள்

தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்

Call : +91-

லட்சுமி - சரஸ்வதி இருவரும், யார் சிறந்தவர் எனத் தர்க்கம் செய்து, பிரம்மாவிடம் நியாயம் கேட்டனர். அவர் லட்சுமியே சிறந்தவர் எனக் கூறிவிட்டார். இதனால் கோபமுற்ற சரஸ்வதி, பிரம்மாவின் சிருஷ்டி தண்டத்தைப் பறித்துக்கொண்டு, அவரை விட்டுப் பிரிந்து சென்றாள். இதனால் படைப்புத் தொழில் ஸ்தம்பித்தது. படைப்புத் தொழில் தடைபடாமலிருக்கவும், படைப்புத் தொழிலில் தனக்கு ஏற்பட்ட ஞாபக மறதியைப் போக்கிக்கொள்ளவும், மகாவிஷ்ணுவை வேண்டி தவமிருந்து காஞ்சியில் பெரிய யாகம் ஒன்றைச் செய்தார் பிரம்மா. யாகத்திற்கு சரஸ்வதி வர மறுத்ததால், சாவித்திரியைத் துணைகொண்டு யாகம் நடத்தினார். மேலும் கோபம் கொண்ட சரஸ்வதி தேவி, யாகத்தைத் தடுக்க பல இடையூறுகள் செய்தார். இறுதியில் சரஸ்வதி, வேகவதி ஆறாகப் பெருக்கெடுத்து வேகமாக வந்து யாகத்தை அழிக்க முயன்றாள். ஓடி வந்த ஆற்றுக்கு அணை போல் சயனித்த திருமால், வெள்ளத்திலிருந்து யாகத்தைக் காத்தார். திருமாலின் அருளால் தடைகளைத் தடுத்து நிறுத்தி, யாகத்தைப் பூர்த்தி செய்தார் பிரம்மா. யாகத்தின் முடிவில் ஹோம குண்டத்திலிருந்து தோன்றிய பெருமாள், பிரம்ம தேவனுக்குக் காட்சி தந்து அவரது ஞாபக மறதியைப் போக்கினார் என்றும், சிருஷ்டி தண்டத்தை பிரம்மனுக்கு வழங்கி அருள்புரிந்ததாகவும் ஸ்தல வரலாறு கூறுகிறது. தனக்குக் காட்சி தந்த கோலத்திலேயே இங்கு எழுந்தருள வேண்டும் என்று பிரம்மா கோரிக்கை வைத்ததின்பேரில் இத்தலத்தில் கோவில் கொண்டார் பெருமாள். இவரே ஸ்ரீ வரதராஜர். லட்சுமி, சரஸ்வதி இருவரும் யார் சிறந்தவர் எனத் தர்க்கம் செய்து, தேவேந்திரனிடமும் நியாயம் கேட்டனர். இந்திரனும் லட்சுமியே சிறந்தவர் எனக் கூறிவிட்டார். இதனால் கோபமுற்ற சரஸ்வதி, இந்திரனைக் காட்டானையாக மாறும்படி சபித்துவிட்டாள். சாபம் கொண்ட இந்திரன் இத்தலம் வந்து நரசிங்கப் பெருமாளைக் குறித்துத் தவம் மேற்கொண்டான். பிரத்யட்சமான நரசிம்மர் இந்திரனுக்குச் சாப விமோசனம் அளித்தார் என்றும், பின்னர் குகை நரசிம்மராகக் கோவில் கொண்டார் என்றும் ஸ்தல வரலாறு. யானை வடிவில் இந்திரன் வழிபட்டதால் 'அத்தி வரதர்' என்றானார். எம்பெருமானை ஐராவதமே மலையுருவில் தாங்கியதால் 'அத்திகிரி' எனப் பெயர் கொண்டது இத்தலம். திரேதா யுகத்தில் கஜேந்திரனுக்கும், துவாபர யுகத்தில் ப்ரஹஸ்பதிக்கும், கலியுகத்தில் ஆதிசேஷனுக்கும் காட்சி அளித்தார் பெருமாள் எனப் புராணக் குறிப்பொன்று தெரிவிக்கின்றது. லட்சுமி தேவி, ப்ருகு முனிவரின் புத்திர காமேஷ்டி யாகத்தினால், பெருந்தேவி தாயாராக அவதரித்து ஸ்ரீ வரதராஜரைப் பூஜித்து, அவரையே திருமணம் செய்துகொண்டதாக வரலாறு. ராபர்ட் க்ளைவ் துரைக்கு ப்ரத்யட்சமான வரதராஜப் பெருமாள், அவரது குளிர் ஜ்வரத்தையும் போக்கி, அவர் நடத்தப் போகும் போரில் வெற்றி பெறவும் அருளாசி வழங்கினார் என்றும், அதற்கு நன்றி கடனாக க்ளைவ் துரை பெருமாளுக்கு மரகத மகர கண்டிகையை அனுப்பிவைத்தார் என்றும் குறிப்பொன்று கூறுகிறது. அத்தி வரதர்: யாகத்தீயிலிருந்து தோன்றியதால், திருமேனி உஷ்ணத்தால் தகிப்பதாகவும், எல்லா நேரங்களிலும் திருமஞ்சனம் செய்ய வேண்டும் என்றும், அர்ச்சகரின் கனவில் தோன்றிய மூலவர் கட்டளையிட்டதால், எல்லா நேரங்களிலும் திருமஞ்சனம் செய்தபடியிருப்பது சிரமம் என்று, வெள்ளிப் பேழையில் வைத்து அமிர்த சரஸ் என்னும் திருக்குளத்தில் இறக்கிவிட்டதாக ஐதீகம். 40 வருடங்களுக்கு ஒரு முறை குளத்திலிருந்து வெளியெடுத்து, ஒரு மண்டலம் ஆராதனை செய்து, பின்னர் மீண்டும் குளத்தில் இறக்கி விடுவது சம்ப்ரதாயம். இந்த ஒரு மண்டல ஆராதனை காலத்தில் சேவார்த்திகள் சேவிக்கலாம். கடந்த 1979ஆம் வருடம் தரிசனம் கிடைத்தது. இனி 2019ல் தான். (15.7.2019) அனந்த சரஸ்: நூற்றுக்கால் மண்டபத்தின் இடது புறம், நடுவில் நீராழி மண்டபத்துடன் கூடிய திருக்குளம். ஆதிசேஷன் இதில் நீராடி பெருமாளின் அருள் பெற்றுள்ளார். இதனால் இது அனந்த சரஸ் என்றும், சேஷ தீர்த்தம் என்றும் பெயர் கொண்டது. குளக்கரையில் சக்கரத்தாழ்வார் சந்நிதியில் ஷட்கோணத்தின் நடுவே சுதர்சனசக்ரத்தாழ்வார் நின்ற திருக்கோலம். நான்கு மூலைகளிலும் ஜ்வாலை வீசும் சிற்பத்தின் அமைப்பு. பதினாறு கரங்களும், மூன்று கண்களும் கொண்ட அழகிய திருமேனி. எல்லாக் கரங்களிலும் ஆயுதங்கள். சிலா ரூபத்தின் பின்புறம் யோக நரசிம்மர். இவரை ஆதிசேஷன் தாங்குவது போல் அமைப்பு. குளத்தின் வடகரையில் ஸ்ரீ ரங்கநாதர், மேற்கில் வேணுகோபாலன், பூவராஹர் ஆகியோரை சேவிக்கலாம். தங்க பல்லி / வெள்ளி பல்லி: வரதரின் மூலஸ்தான பிரதட்சிண சுற்றின் போது தரிசிக்கலாம். சகரனுடைய பிள்ளையும், அவன் மனைவியும் சாபத்தினால் பல்லிகள் ஆனார்கள். உபமன்யு முனிவர் ஸ்ரீ வரதனை சேவை செய்து வைத்ததினால் அவர்கள் சாப விமோசனம் பெற்றனர். பல்லிகளின் சரீரங்கள் பிரதான விதானத்தில் இருக்கட்டும். அவற்றைத் தொடுவோர்க்கு சகல நோய்களும் நீங்கும் என ஸ்ரீ வரதர் அருள்புரிந்ததாக ஐதீகம். பொய்கையாழ்வார், ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அவதரித்த ஸ்தலம். பிரம்மா, தேவேந்திரன், ஆதிசேஷன், ப்ரஹஸ்பதி, லட்சுமி தேவி, திருக்கச்சி நம்பிகள், கூரத்தாழ்வார் ஆகியோர் வழிபட்ட ஸ்தலம். சிறப்பு விசேஷங்கள்: உஷத் காலத்தில் பெருமாளை சேவிப்பது கூடுதல் விசேஷம். சித்ரா பௌர்ணமி இரவு பிரம்மா இவரை வழிபடுவதாக ஐதீகம். வைகாசியில் பிரம்மோத்சவம், பங்குனியில் திருக்கல்யாணம். ராபர்ட் க்ளைவ் என்னும் ஆங்கிலத்துரை ஸ்ரீ வரதரின் அருளால் தனது நோய் நீங்கப் பெற்றதால் மகரப்பதக்கம் செய்து பெருமாளுக்கு அணிவித்துள்ளார். பிரம்மோத்சவத்தின் 6ஆம் நாள் ஸ்ரீவரதராஜர் வீதி உலா முடிந்து திரும்புகையில், ரத்னக்கம்பள விரிப்புடன் நாதஸ்வரம் முழங்க அசைந்து வரும் நடையழகு பிரசித்தம். பிரம்மோத்ஸவத்தின் மூன்றாம் நாள் கொண்டாடப்படும் கருடசேவை விமரிசையானது. அதிகாலை நான்கு மணிக்கே ஆலயக் கதவுகள் திறக்கப்பட்டு, சேவார்த்திகள் வரிசையாக உள் சென்று தங்க கருடசேவையை சேவிக்கின்றனர். தங்க கருடன் கோபுர வாசலை அடைந்ததும், நேராகப் பிடித்திருந்த குடையைத் தாழ்த்திப் பிடித்து பெருமாளை மறைத்து விடுவர். மறைத்த நேரத்தில் சோளிங்கரின் தொட்டாச்சார்யாருக்கு சேவை சாதிப்பதாக ஐதீகம். மீண்டும் கருடசேவை தொடரும். வைகாசி கருடோத்ஸவத்தன்று 'தொப்ப ஆரம்' எனும் ஆபரணம் அணிவிப்பார்கள். கோவிலின் இட்லி பிரசாதம் பிரசித்தி பெற்றது. முக்தி தரும் ஏழு ஸ்தலங்கள்: காஞ்சி, அயோத்யா, மதுரா, மயா, காசி, அவந்தி, த்வரகா. 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.
ஸத்யவ்ரத க்ஷேத்ரம், பஞ்சாமிர்த க்ஷேத்ரம், முக்தி தரும் ஏழு ஸ்தலங்களுள் ஒன்று. மூலவர்: ஸ்ரீ வரதராஜப் பெருமாள். தாயார்: ஸ்ரீ பெருந்தேவி. விஷ்ணு காஞ்சியில் அமைந்துள்ள இவ்வாலயம் ஐந்து பிரகாரங்களுடனும், வாரணகிரி, அத்திகிரி என்னும் இரண்டு தளங்களுடன் கூடிய கட்டுமலை அமைப்புடனும் உள்ளது. நான்கு மாடங்களுடனும், வீதிகளுடனும் கூடிய வெளி பிரகாரம். 'மரியாதை வாயில்' என்ற மேல் வாயில் வழியாக கோவிலுக்குள் நுழைந்து செல்கின்றனர். காயத்ரியின் 24 அட்சரங்களைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ள 24 படிகளைக் கடந்து மேலேறிச் சென்றால் வரதகிரியை அடையலாம். இதன் மேலுள்ள பிரதான பிரகாரத்தின் முக மண்டபம் அடைந்து அங்கிருந்து 6 படிகள் ஏறிச் சென்றால் வரதரின் மூலஸ்தானம் அடையலாம். எம்பெருமானை ஐராவதமே மலையுருவில் தாங்கியதால் 'அத்திகிரி' எனப் பெயர் கொண்டது. மூலஸ்தானத்தில் புண்யகோடி விமானத்தின் கீழ், மூலவர் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் மேற்கே திருமுக மண்டலம் கொண்டு, வரத ஹஸ்தத்துடன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஆஜானுபாகுவான தோற்றம். இவருக்கு ஸ்ரீ தேவராஜர், அத்தி வரதர், பேரருளாளன், யக்ஞோத்பவர் ஆகிய திருநாமங்களும் உண்டு. ப்ருகு முனிவர், நாரதர், ஆதிசேஷன், பிரம்மா, கஜேந்திரன் ஆகியோர்களுக்கு ப்ரத்யட்சம் ஆனதாக ஐதீகம். சித்ரா பௌர்ணமியை அடுத்து வரும் நாட்களில் சூரியனின் ஒளிக்கிரணங்கள் பெருமாள் மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. உற்சவரான ஸ்ரீ வரதராஜர் பேரழகு வாய்ந்தவர். சற்று பின் சாய்ந்து மிடுக்காக நிற்கும் தோரணையில் காட்சி தருகின்றார். திருமுகத்தில் ஏராளமான வடுக்கள் காணப்படுகின்றன. உற்சவரின் இரண்டு பக்கங்களிலும் பூமி பிராட்டியே எழுந்தருளியுள்ளார். மூலஸ்தானத்தை பிரதட்சிணமாக வருகையில், வடகிழக்கு கோடியின் மேல் கூரையில் தங்க பல்லியை தரிசிக்கலாம். தாயார் பெருந்தேவி தனி சன்னதியில் கல்யாண கோடி விமானத்தின் கீழ் எழுந்தருளியுள்ளார். மிகுந்த வரப்ரசாதி எனப் போற்றுவார்கள். கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு அமர்ந்த திருக்கோலம். அபய - வரத ஹஸ்தங்களுடனும், தாமரை மலர்களை இருகரங்களில் கொண்டும்காட்சி தருகின்றார். இவருக்கு மஹாதேவி, அரித்ரா தேவி ஆகிய திருநாமங்களும் உண்டு. தாயாருக்கு திருவீதி புறப்பாடு இல்லை. வெள்ளிக்கிழமைகளில் பிரகாரத்துள் உலா வருவார். எனவே 'படிதாண்டாப் பத்தினி' என்பர். உற்சவத் தாயார் மிகவும் அழகாக இருக்கின்றார். தாயார் சந்நிதியிலிருந்து இறங்கி வந்தால் பெரிய திருவடியை சேவித்து விட்டு பின் எதிரிலுள்ள குகா நரசிம்மரை சேவிக்கலாம். யோகாசனராய் வீற்றிருக்கின்றார். திருமங்கை மன்னரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். தென் மேற்கு மூலையில் வலம்புரி விநாயகரையும், கருடாழ்வார், அழகிய சிங்கர், ஆண்டாள், ஸ்ரீ ராமர், கருமாணிக்கப் பெருமாள், வேணுகோபாலன், பூவராஹன், சக்கரத்தாழ்வார் என அனேக மூர்த்தங்களையும், ஆழ்வாராதிகளையும் சேவிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.