அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் (திருவண்ணாமலை)

God Name : அண்ணாமலையார்

ரஞ்சன்குடி கோவில்

வேலூர்

Call : +91-

உலகமனைத்தும் தன்னுடைய சிருஷ்டியில் உண்டானதெனக் கர்வம் கொண்ட பிரம்மா, 'யானே பரம்' என விஷ்ணுவிடம் தர்க்கம் செய்தார். 'எனது உந்தித்தாமரையில் உதித்த நீ, அதை மறந்து தர்க்கம் செய்கிறாய். யானே பரம்' என்றார் விஷ்ணு. இவர்கள் இருவரும் வார்த்தையோடிராமல் சண்டையிட முற்பட்டனர். விவாதம் பண்ணிக் கொண்டிருந்த அவர்களின் இடையே, அக்னி ஸ்தம்பமாய், அனல் பிழம்பாய், மலையாக நின்றார் சிவபெருமான். பிரம்மாண்டத்தைப் பிளந்து வெளிப்பட்ட தேஜோலிங்கத்தின் பிரகாசத்தால், ஸ்தாவர ஜங்கமங்கள் எல்லாம் சிவந்து காணப்பட்டன. 'இம்மலையின் தோற்றம் எது? முடிவு எது?' எனத் திகைத்த இருவரும், தங்களது சண்டையை நிறுத்திவிட்டு, 'அதன் அடியை அல்லது முடியைக் காண்பவரே நம்மில் பெரியவர்' எனப் பேசிக்கொண்டனர். மலையின் உச்சியைத் தாம் கண்டு வருவதாகக் கூறி, பிரம்மன் அன்னப்பட்சி வடிவம் கொண்டு உயரப் பறந்தார். மலையின் அடியைக் காண, விஷ்ணு வராஹ வடிவம் கொண்டு பூமியைத் துளைத்துச் சென்றார். மலையின் அடிப்பகுதியைக் காண முடியாமல் களைத்துப் போன விஷ்ணு, முயற்சியில் வெற்றி கிட்டாது பூமியின் மேற்பரப்பிற்கு வந்தார். அன்னப்பட்சியாகப் பறந்த பிரம்மன், உச்சியைக் காண முடியாமல், மனம் தளர்ந்து, நொந்து போன சமயத்தில், மேலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த தாழம்பூ ஒன்றைக் கண்டார். 'சிவபெருமான் முடியிலிருந்து தவறி விழுந்து நாற்பதினாயிரம் வருஷமாக வந்து கொண்டிருக்கிறேன். இன்னும் பூமிக்கு வந்தபாடில்லை' என்றது தாழம்பூ. அந்த அக்னி ஸ்தம்பம் சிவபெருமான் என்று இப்போது புரிந்துகொண்ட பிரம்மன், தான் சிவபெருமானின் சிரசைக் கண்டுவிட்டதாகப் பொய்யுரைக்கப் போவதாகவும், அதற்குத் தாழம்பூ பொய் சாட்சி சொல்ல வேண்டும் எனவும் தாழம்பூவிடம் கூறினார். பூமியை வந்தடைந்த பிரம்மன், விஷ்ணுவிடம், அந்த அக்னி ஸ்தம்பம் சிவபெருமான் எனவும், தான் சிவபெருமானின் சிரசைக் கண்டு வந்ததாகவும் பொய்யுரைத்தார். தாழம்பூவும் 'உண்மைதான்' எனக் கூறியது. பிரம்மன் பொய்யுரைத்த அடுத்த விநாடி, அக்னி ஸ்தம்பமாய் நின்ற மலை வெடித்து, அதினின்று சிவபெருமான் எழுந்தருளினார். பொய் சொன்ன பிரம்மாவிற்கு 'பூவுலகில் கோவில் இல்லாது போகட்டும்' என்று சாபம் கொடுத்தார். பொய் சாட்சி சொன்ன தாழம்பூவை 'இனி தீண்டுவதில்லை' என்று விலக்கி விட்டார். விஷ்ணு, பிரம்மா இருவருமாக வேண்டியதாலும், தேவர்கள் அனைவருடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்யவும் இங்கு கோவில் கொண்டார். 'இந்த அக்னி மலை சிறிய வடிவில் இங்கு நிலைத்து நிற்கும் எனவும், ஆண்டுதோறும் மலை உச்சியில் ஜோதி வடிவாய் காட்சி தருவேன்' எனவும் கூறி ஆசி வழங்கினார். ஆதி அந்தம் இல்லாமல் தீப்பிழம்பாய் வியாபித்த உருவத்தை, தேவர்கள் தாங்க முடியாமல் அலறவே சிவபெருமான் மலையாக நின்றுவிட்டதாக வரலாறு. கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், தற்போது (கலி யுகத்தில்) கல் மலையாகவும் இருப்பதாக ஐதீகம். உலகம் தோன்றியதிலிருந்து இருக்கும் மலை. 'அருணன்' என்றால் சூரியன், 'அசலம்' என்றால் மலை எனப் பொருள். சிவந்த நிறத்தையுடைய மலை, ஆகவே அருணாசலம் எனப் பெயர் கொண்டது. 'அண்ணுதல்' என்றால் நெருங்குதல், 'அண்ணா' என்றால் நெருங்க முடியாத என்று அர்த்தம். அடியையும், முடியையும் நெருங்க முடியாத மலை என்றும் கொள்ளலாம். கயிலாயத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் உரையாடிக் கொண்டிருந்தபோது, 'சூரியன் - சந்திரன் இருவரும் எனது இரு கண்கள்' என சிவபெருமான் கூற, தேவியும் விளையாட்டாகப் பொத்த, உலகங்கள் இருண்டன. செய்த தவற்றிற்குப் பிராயச்சித்தம் தேடி, இத்தலம் வந்து பவழக் குன்று மலையில் பர்ணசாலை ஒன்றை அமைத்து, தவம் மேற்கொண்டாள். தனது சூலத்தால் பூமியைப் பிளந்து ஒன்பது தீர்த்தங்களை வரவழைத்து, ஸ்வாமியை வழிபடலானாள். இடையூறுகள் விளைவித்த மகிஷாசுரனை துர்க்கையாக வதம் செய்து, தவத்தை முடித்தாள். தவத்தினால் பிரீதியடைந்த தேவி, கண்களை மூடியதால் கொண்ட தோஷத்தை விலக்கினார். 'நம்மிருவருக்கும் ஒருவரை ஒருவர் பிரியாத நிலை வேண்டும்' என தேவி வேண்டினாள். அருணகிரிபதியும் தேவியை தன் அர்த்த-பாகமாக்கிக் கொண்டு, தேவியின் பிரார்த்தனையை நிறைவேற்றினார். கார்த்திகை மாதம் பௌர்ணமியும் கிருத்திகை நட்சத்திரமும் கூடிய நன்நாளில், பிரதோஷ காலத்தில் மலைமேல் ஜோதியாக தரிசனம் தந்தான். கார்த்திகை தீபத்தன்று மாலை 6.00 மணிக்கு அர்த்தநாரீஸ்வர மூர்த்தி உலா காணலாம். கார்த்திகை தீபத்தின் மூன்றாம் நாளும், மாட்டுப் பொங்கலன்றும், ஸ்வாமியும் அம்பாளும் கிரிவலம் வருவார்கள். தீபத்திருநாளன்று அதிகாலையில் மலையடிவாரத்தில், 110 கிலோ இரும்பு, 92 கிலோ செப்பு கொண்டு உருவாக்கிய கொப்பரையில், 200 கிலோ நெய், 1 டன் திரி ஆகியவை பயன்படுத்தி பரணி தீபம் ஏற்றுகின்றனர். மாலையில், மலை உச்சியில் மகா தீபம் ஜோதி தரிசனம் பார்க்கலாம். சக்தி பீடங்களுள் அருணை பீடம், பஞ்சபூத ஸ்தலங்களுள் - அக்னி (தேயு), விராட்புருஷனின் மணிபூரக ஸ்தானம், விநாயகரின் முதல் படை வீடு ஆகிய பெருமைகளுக்குரிய ஸ்தலம்.
25 ஏக்கர் விஸ்தீரணத்தில் ஒன்பது கோபுரங்கள், ஏழு பிரகாரங்கள், மற்றும் எண்ணற்ற மண்டபங்களை உள்ளடக்கிய கோவில். கோவிலுக்குள் ஐந்து பிரகாரங்களும், மாடவீதி ஆறாவது பிரகாரமாகவும், கிரிவலப் பாதை ஏழாவது பிரகாரமாகவும் கணக்கிடுவர். அண்ணாமலையின் கிழக்கே உள்ள ஆலயம். மூலஸ்தானத்தில் அண்ணாமலையார் தேஜோமய லிங்கமாக, சுயம்பு மூர்த்தமாக, அக்னி தத்துவமாக, நெருப்பு பிழம்பாக, ஜோதி மயமாக திவ்ய தரிசனம் தருகின்றார். இந்த தேஜோலிங்கமே ஸர்வ லோகங்களுக்கும் ஆதிமூலம். பூமியில் அருணாத்ரி எனும் பெயருடன் விளங்கும் லிங்கம். சூரிய-சந்திர-அக்னி மூன்றும் ஒன்றாக சேர்ந்து கோணத்திரய வடிவமான மலையே சிவலங்கமாக காட்சி தருகிறது. இவருக்கு அருணாசலேஸ்வரர், லிங்கோத்பவ மூர்த்தி, அர்த்த நாரீஸ்வரர், அதிரும் கழலன், சோணாத்ரீசன், தேவாதீசன் என்று அநேக திருநாமங்கள். ஆணவத்தை விட்டொழித்தவர்க்கு அண்ணாமலையான் தரிசனம் எளிது என்பர். உண்ணாமுலை அம்மனுக்கு தனி சந்நிதி வடபுறமாக உள்ளது. அபிதகுஜாம்பாள், திருக்காமக் கோட்டமுடைய தம்பிராட்டியார் போன்ற பல பெயர்கள் உண்டு. அண்ணாமலையில் தவம் செய்து அந்த தவத்தின் பயனாய் என்றும் மாறாத இளமை கொண்டதால், உண்ணாமுலை என்று அழைக்கப்படுகிறார். ஐந்தாம் பிரகாரத்தில் - ஆயிரங்கால் மண்டபமும், அதன் எதிரே சிவகங்கை தீர்த்தமும், மேற்புறமாக பாதாள லிங்கமும், வல்லாள மகராசன் கோபுரத்தையொட்டி சுப்ரமண்யஸ்வாமி, கல்யாண சுந்தரேஸ்வரர், மங்கை பிள்ளையார் ஆகிய மூர்த்திகளையும் தரிசிக்கலாம். சிவகங்கை குளத்தினருகே உள்ள கம்பத்து இளையனார் சந்நிதியில் வில்லேந்திய முருகன், மயில் மீது கால் ஊன்றி நிற்கும் திருவுருவம் அற்புதமான அழகுடன் உள்ளது. 16 கால் மண்டபத்தின் ஒரு தூணில், அருணகிரிநாதருக்கு காட்சி தந்த கோலத்தில் காணப்படுகின்றார். நான்காம் பிரகாரத்தில் - பிரம்ம தீர்த்தம், அடுத்து படிகளேறி கிளிக் கோபுரம் காணலாம். அருணகிரிநாதர் கிளி வடிவில் கந்தரனுபூதி பாடிய இடமே கிளி கோபுரம். படிக்கட்டு அருகே திறை கொண்ட விநாயகர் சந்நிதி உள்ளது. அல்லல் போக்கும் விநாயகர் - விநாயகரின் முதல் படைவீடு என்பர். கிளி கோபுரத்தின் எதிரேயுள்ள நந்தி மண்டபத்தில் பிரம்மாண்டமான நந்தி தரிசிக்கலாம். மூன்றாம் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் அண்ணாமலையார் அருணகிரி யோகியாக சூட்சும வடிவில் இருக்கிறார். பஞ்ச மூர்த்தி மண்டபங்கள், மற்றும் ஸ்தல விருட்சமான மகிழ மரம் காணலாம். மகிழ மரத்தின் அருகே நின்று பார்த்தால் ஒன்பது கோபுரங்களையும் தரிசிக்கலாம். மேலக்கோபுரத்தையொட்டியுள்ள பிரகாரத்தில் ஸ்தூல சூட்சும லிங்கம் மிகப் பெரிய லிங்கம், அதன் மேல் அன்னபட்சி, கீழே வராஹம், நடுவே சிவபெருமான் அம்பிகையுடன் ரிஷப வாகனராக காட்சி தருகிறார். இரண்டாம் பிரகாரத்தில் - அஷ்டதிக் பாலகர்களின் லிங்கங்கள், வேணுகோபாலர், திருமகள், நால்வர், அறுபத்திமூவர், உற்சவ மூர்த்திகள் ஆகிய சந்நிதிகளை காணலாம். ஆயிரத்தெட்டு லிங்கங்கள், நூற்றியெட்டு லிங்கங்கள், ஜ்வரஹரேஸ்வர லிங்கம், பதஞ்சலீஸ்வரர் லிங்கம், பைரவர், நடராஜர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். அர்த்தநாரீஸ்வரரின் பஞ்சலோக படிமம் பேரெழிலுடன் இருக்கின்றது. முதல் பிரகாரத்தில் லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிரதோஷ நந்தி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். கிரிவலப்பாதை: மலை சுற்றும் வீதிக்கு திரு விக்ரம பாண்டியன் ஏழாம் திருவீதி என்று பெயர். மலையின் எட்டு திக்கிலும் எட்டு சிவலிங்கங்கள், அஷ்டதிக் பாலகர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் சித்தர்கள், ஞானிகள், நாகலோகத்தினர் ஆகியோர் பிரதிஷ்டை செய்த லிங்கங்களைக் காணலாம். 1. இந்திர லிங்கம் - கிழக்கு திசை - இந்திரன் பிரதிஷ்டை செய்தது. சூரியன் மற்றும் சுக்கிரன் கிரகங்களாக உள்ளனர். தரிசிப்பவர்களுக்கு நீண்ட ஆயுளும், புகழும் கிடைக்கும். வீண் அபவாதத்திலிருந்து விடுபடலாம். கிரிவலப் பாதையில் முதலில் வருவது, (கடைத்தெரு) தேரடி அருகே உள்ளது. 2. அக்னி லிங்கம் - தென்கிழக்கு திசை - அக்னி பிரதிஷ்டை செய்தது. சந்திரனை கிரகமாக கொண்டது. தரிசிப்பவர்கள் நோய் மற்றும் பயம் நீங்கப் பெறுவார்கள். ஒழுக்கத்தில் சிறந்து விளங்கலாம். மலையடிவாரத்தின் சற்று உட்புறமாக உள்ளது. 3. யம லிங்கம் - தெற்கு திசை - யமன் பிரதிஷ்டை செய்தது. செவ்வாயை கிரகமாக கொண்டது. மரண பயம் நீங்கவும், ஆயுள் நீடிக்கவும் தரிசிக்க வேண்டும். கிரிவலப் பாதையில் மூன்றாவது. 4. நிருதி லிங்கம் - தென்மேற்கு திசை. அசுரர்களின் அரசனான நிருதி பிரதிஷ்டை செய்தது. ராகுவை கிரகமாக கொண்டது. உடல் நலம், செல்வம், குழந்தைப்பேறு பெறுதல் ஆகியவற்றிற்கு தரிசிக்கின்றனர். ஏழைக் குழந்தைகளுக்கு உணவிடுதல் (குழந்தை பாக்யம்). கிரிவலப் பாதையில் நான்காவது (உட்புறம்). 5. வருண லிங்கம் - மேற்கு திசை - வருணனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சனியை கிரகமாக கொண்டது. நீரினால் ஏற்படும் நோய்கள் நீங்க பிரார்த்திக்கின்றனர். கிரிவலப் பாதையில் ஐந்தாவது. 6. வாயு லிங்கம் - வடமேற்கு திசை - வாயு பகவான் பிரதிஷ்டை செய்தது. கேது பகவானை கிரகமாக கொண்டது. சுவாச தொடர்பு பிணிகள் நீங்க, இதயம், வயிறு சம்பந்தமான நோய்களிலிருந்து விடுபட பிரார்த்திக்கின்றனர். கிரிவலப்பாதையில் ஆறாவதாக வருவது. 7. குபேர லிங்கம் - வடக்கு திசை - குபேரன் பிரதிஷ்டை செய்தது. குரு பகவானை கிரகமாக கொண்டது. வளமான செல்வம் பெற பிரார்த்திக்கின்றனர். கிரிவலப் பாதையில் ஏழாவது. 8. ஈசான்ய லிங்கம் - வடகிழக்கு திசை - ஈசான்ய தேவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. புதனை கிரகமாக கொண்டது. மன அமைதி பெறவும், ஏழரை சனி பாதிப்பிலிருந்து விடுபடவும் பிரார்த்திக்கின்றனர். முக்ய பாதையிலிருந்து விலகி தனியே உள்ளது. (சுடுகாடு அருகில்) ஒவ்வொன்றின் அருகிலும் அதனதன் பெயரிலேயே தீர்த்தமும் அமைந்துள்ளது. நேர் அண்ணாமலைக்குப் பக்கத்தில் ஆஞ்சநேயஸ்வாமியை தரிசிக்கலாம். மலை சுற்றின் தெற்கு பாதையில் ஆஸ்ரமங்கள் இருக்கின்றன. கிரிவலப் பாதையிலுள்ள இடுக்குப் பிள்ளையார் விசேஷமானவர். பின் வாசல் வழி நுழைந்து, 2ம் வாசல் கடந்து, முதல் வாசல் வழி ஒருக்களித்தவாறு குனிந்து போக வேண்டும். கௌதம முனிவரின் ஆஸ்ரமத்தின் எதிரில் மலை மூன்று பிரிவுகளாக காட்சி தரும். இதை திரிமூர்த்தி தரிசனம் என்பர். (சிவன், விஷ்ணு, பிரம்மா) இங்கு விழுந்து வணங்க வேண்டும். சேஷாத்ரி ஸ்வாமிகள் தவமிருந்த இடம் அருகே உள்ளது. நிருதி லிங்கமருகே, தெற்கிலிருந்து மேற்கே திரும்பும் வளைவில், மலையை அண்ணாந்து பார்த்தால் மலைமுகட்டில் ரிஷபத்தின் தலை தெரியும். செங்கம் பாதையில் இருந்தும் இக்காட்சியைக் காண முடியும். வடகிழக்கு முனையிலிருந்து பார்த்தால் ஐந்து சிகரங்கள், ஐந்து முகங்களாக தெரியும். இதுவே பஞ்சமுக தரிசனம். விழுந்து வணங்க வேண்டும். தேவாரத் திருத்தலம் - அருணை சக்தி பீடம் - பஞ்சபூத ஸ்தலங்களுள் - அக்னி (தேயு), விநாயகரின் முதல் படை வீடு - சக்தி ஸ்தலங்களுள் அருணை சக்தி பீடம், விராட்புருஷனின் மணிபூரக ஸ்தானம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.