பஞ்ச பூத ஸ்தலங்களுள் இத்தலத்தை ப்ருத்வி ஸ்தலமாக போற்றுகின்றனர். முக்தி அளிக்கும் ஏழு ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. பூமி தேவியின் உந்தித் தானமாக விளங்கும் ஸ்தலம்.
சிவபெருமானுடைய கண்களை உமா தேவியார் விளையாட்டாக தனது கைகளால் மூடினார். அதனால் சூரிய-சந்திரர்கள் மறைந்து எல்லா லோகங்களிலும் இருள் சூழ்ந்தது. விளையாட்டு வினையாகி, கயிலையிலிருந்து காஞ்சி வந்த பார்வதி இங்குள்ள கம்பை ஆற்றங்கரையில் மணலினால் சிவலிங்கம் ஒன்றை உருவாக்கி வழிபட்டு வந்தாள். இத்தலத்தில் தவம் மேற்கொண்டிருந்த அம்பிகையின் முன்னால் தோன்றிய சிவபெருமான், பார்வதியை சோதிக்க எண்ணி, தன் ஜடாமுடியிலிருந்து கங்கையை வெளிப்படுத்தி, கம்பை ஆற்றில் வெள்ளப் பெருக்கை உண்டாக்கினார்.
வெள்ளத்தைக்கண்டு பயந்த அன்னை, தான் பூஜை செய்யும் மணல் லிங்கம், ஆற்றுப்பெருக்கில் அடித்து செல்லாமல் இருக்க அதை தாவி கட்டிக் கொண்டார். இறுகத் தழுவிக் கொண்டதால் இறைவனுக்கு தழுவக் குழைந்த நாதர் என்னும் பெயர் வந்தது. வளைத் தழும்பும், முலைத் தழும்பும் தழுவிய சுவடுகளாக நிலைபெற்று காட்சி தந்தவர் வெள்ளக் கம்பர் என்றும், பின்னர் அம்பிகைக்கு அருள்புரிந்தவர் நல்லக் கம்பர் என்றும், அம்பிகை பூஜை செய்யும் அழகை மறைவாக கண்காணித்தவர் கள்ளக்கம்பர் என்றும் பெயர்களைக் கொண்டனர். இவர்களின் சந்நிதிகள் இங்கே உள்ளன.
திருவொற்றியூர் எல்லையைக் கடந்தவுடன், இரண்டு கண்களின் பார்வையை இழந்த சுந்தரமூர்த்தி நாயனார், இத்தலம் வந்து தனது இடது கண் பார்வையை, இவ்விறைவன் அருளால் பெற்றார் என ஸ்தல வரலாறு. கண்பார்வையில் கோளாறு உள்ளவர்கள் இத்தலத்தில் பிரார்த்தனை செய்து நலம் பெறலாம் என அர்ச்சகர் தெரிவிக்கின்றார்.
கிருஷ்ண தேவ ராயரால் கட்டப்பட்ட 192 அடி உயர ராஜ கோபுரமும், ஐந்து பிரகாரங்களை உள்ளடக்கியும், நான்கு மாட வீதிகளையும் கொண்டுள்ள மிகப் பெரிய கோயில்.
கரிகால சோழன் திருப்பணி செய்த ஸ்தலம். பல சிவாலயங்களுக்கு திருப்பணி செய்தவரும், ஸ்தலத்திற்கு ஒரு வெண்பா வீதம் க்ஷேத்ர வெண்பாக்களைப் பாடியவருமான ஐயடிகள் காடவர் கோன் அரசாட்சி செய்த ஸ்தலம்.
ஐயடிகள் காடவர் கோன் நாயனார், திருக் குறிப்புத் தொண்ட நாயனார், சாக்கிய நாயனார் ஆகியோர் சிவ பெருமான் அருள் பெற்று முக்தியடைந்த ஸ்தலம்.
பங்குனி உத்திரத்தன்று அன்னையை திருமணம் செய்து கொண்டதால் இது திருமணத்தலமாக விளங்குகிறது. தேவாரத்திருத்தலம், பஞ்ச பூதஸ்தலங்களுள் ஒன்று, முக்தி ஸ்தலங்கள் ஏழினுள் ஒன்று.
பஞ்ச பூத ஸ்தலங்கள்:
1. காஞ்சிபுரம் - ஏகாம்பரேஸ்வரர் - நிலம் (ப்ருத்வி)
2. திருவானைக்காவல் - ஜம்புகேஸ்வரர் - நீர் (அப்பு)
3. திருவண்ணாமலை - அண்ணாமலையார் - நெருப்பு (அக்னி)
4. காளஹஸ்தி - காளத்திநாதர் - காற்று (வாயு)
5. சிதம்பரம் - மூலட்டானேஸ்வரர் - ஆகாயம் (ஆகாஷ்)
சப்த முக்தி ஸ்தலங்கள்:
அயோத்தி, மதுரா, மாயை, காசி, காஞ்சி, அவந்திகை, துவாரகை.
மூலவர்: ஏகாம்பரேஸ்வரர், அம்பாள்: காமாட்சியம்மை.
மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள ஏகாம்பரேஸ்வரர் பெரிய ஆவுடையாருடன் கூடிய சிவ லிங்கத் திருமேனி.
காமாட்சி அன்னை மணலால் உருவாக்கி, பூஜித்த லிங்கம், ஆதலால் குவளை அணிவிக்கப்பட்டு, புனுகு சட்டம் சாத்துகின்றனர். ஆவுடையாருக்குத்தான் அபிஷேகம் செய்கின்றனர்.
அன்னையால் உருவாக்கப்பட்டதால் இது ஒரு சக்தி லிங்கமாக கருதப்படுகின்றது. தழுவக்குழைந்த நாதர் எனும் திருநாமத்தையும் கொண்டுள்ளார். ரத சப்தமி அன்று சூரியனின் ஒளிக்கிரணங்கள் ஸ்வாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன.
இந்த லிங்கத்தின் பின்புற சுவரில் திருவேகம்பர் (ஏகம்பர்) காமாட்சி அன்னை மற்றும் குமரனுடன் காட்சி தருவது சோமஸ்கந்தர் அமைப்புடன் விளங்குகிறது.
அம்பாள் காமாட்சியம்மைக்கு ஏலவார் குழலியம்மை என்ற திருநாமமும் உண்டு. மிகுந்த வரப்பிரசாதி. ஷோடஸ கௌரிகளுள் அம்பாள் சத்ய வீர கௌரி ஆவாள்.
இத்தலத்தினுள் நல்லக் கம்பம், வெள்ளக் கம்பம், கள்ளக் கம்பம், திரு மயானம், வாலீச்சரம் எனும் ஐந்து தலங்கள் உள்ளன. இவைகள் முறையே பிரம்மன், மஹாவிஷ்ணு, ருத்ரன், வண்டாசுரன், வாலி ஆகியோரால் பூஜிக்கப்பட்டவை.
மாவடிக்கு கீழ் உள்ள சிவ பெருமானின் திருநாமம் ஏகம்பர். ஒற்றை மாமரத்தின் கீழ் இருப்பவர் என்று பொருள். ஆம்ரம் என்றால் மாமரம். இதை விருட்சமாக கொண்டதால் ஏகாம்பரம் என்பர்.
ஏக - அம்பர் ஒற்றை அம்பை உடையவர். அதாவது திரிபுராதிகள் மீது ஒற்றை அம்பை ஏவி முப்புரங்களை எரித்தவர் என்ற பொருள் வருவதால், ஏகம்பர் எனும் பெயர் பொருத்தமாக உள்ளது.
மாவடியில், (மாமரம்) சக்தி தேவி - லிங்கத்தை வழிபடும் கோலம் மிகவும் அற்புதமாக உள்ளது. உமாதேவியார்க்கு இந்த மாமரத்தினடியில்தான் சிவபெருமான் காட்சி தந்துள்ளார். இந்த வேத மாமரத்தடியில் பார்வதி தேவியும் சிவபெருமானும் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றனர்.
3500 வருடங்களுக்கு முற்பட்ட மா மரம். நான்கு கிளைகளும் வேதங்களாக இருப்பதால் இதை வேத மாமரம் என்பர். நான்கு வித ருசியுடைய கனிகள் தரும் மரம். இதன் கனியை புசிப்பவர்களுக்கு புத்ர பாக்கியம் கிடைக்கும்.
மாவடிக்கு நேரே வள்ளி - தெய்வானை சமேத ஆறுமுகன் மயில் வாகனத்தில் வலம் வரும் காட்சி மிக அழகானது.
திருமாளிகை பத்திமேடையின் மீது அஷ்ட புஜங்களுடன் கூடிய பிரளயபட்சிணி வீராவேசமாக காட்சி தருகிறாள். காஞ்சி மாநகரத்து காவல் தெய்வமான பிரளயபட்சிணி, கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தப்போது தனது கரத்திலுள்ள கபாலத்தில் அடக்கியவள்.
சஹஸ்ரலிங்கம், பிரளயம் காத்த நாதர், ரிஷபேஸ்வரர் என அநேக மூர்த்தங்களை காணலாம்.
மாவடியைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் 136 சிவலிங்கங்கள் இருக்கின்றன. 108 லிங்கங்களைக் கொண்ட ஒரே சிவலிங்கத்தையும், 1008 லிங்கங்களைக் கொண்ட ஒரே சிவலிங்கமாக சஹஸ்ர லிங்கத்தையும் தரிசிக்கலாம்.
பஞ்சமுக விநாயகரின் திருவுருவம் அழகாக இருக்கிறது.
ஆயிரங்கால் மண்டபம் அருகே வீற்றிருக்கும் விகடசக்ர கணபதியின் வீற்றிருக்கும் கோலம் மிக அழகாக உள்ளது. விஷ்ணுவிற்கு சக்கரத்தை தந்தவர் என்பதால் விகட சக்கர கணபதி என்பர். கோபுர வாசலருகே மயில் மீதமர்ந்த கணபதியின் வித்தியாசமான தோற்றத்தை தரிசிக்கலாம்.
அறுபத்து மூவர்க்கு முன்பாக அகத்தியர் நிறுவிய அகத்தியலிங்கம் உள்ளது. இதனருகே விஷ்ணு ஸ்தலமும் உள்ளது.
ஏகாம்பரேஸ்வரர் கோவிலிலுள்ள தூண்களில் யோனி தக்ஷிணாமூர்த்தி, யோக தக்ஷிணாமூர்த்தி மற்றும் வீணா தக்ஷிணாமூர்த்தி ஆகியோரின் திருவுருவங்களை செதுக்கியுள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.