அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில் (திருவோத்தூர்)
God Name : மூலவர்: வேதபுரீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
வேலூர்
Call : +91-
தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் இறைவன் வேதம் ஓதுவித்த ஸ்தலம் என்பதால், திருவோத்தூர் எனும் ஸ்தலப் பெயர் உருவானது. தேவாரக் காலத்துப் பெயர். பின்னர் திருவத்திபுரம் எனவும் பெயர் மாற்றம் கண்டுள்ளது. மக்கள் வழக்கில் செய்யாறு என்பர்.
சோமுகாசுரன் எனும் அசுரன் வேதங்களை களவாடி சென்று விட்டான். யாகங்கள் தடைபட்டன. முனிவர்கள் வேதங்களை மறக்கலாயினர். இந்த தருணத்தில், வயது முதிர்ந்த வேதியர் வடிவில், சிவபெருமானே வந்து, முனிவர்களுக்கு வேதங்களை ஓதுவித்தார். இதனால் ஸ்வாமிக்கு வேதபுரீஸ்வரர் என்று பெயர் வந்தது.
சிவபெருமானை விலக்கி, தட்சனால் செய்யப்பட்ட யாகத்திற்கு சென்ற பாவம் கொண்ட தாட்சாயினி, இமவான் மகளாக பிறந்த பின்னரும், விடாது பற்றிக் கொண்டது பாவம். அந்த பாவத்திலிருந்து விடுபட இத்தலத்தில் தவம் மேற்கொண்டாள். பெதும்பை பருவத்தில் இருந்த ஹிமவான் மகளை இறைவன் மணந்து கொண்டார். இதனால் இளமுலை நாயகி (பாலகுஜாம்பிகை) எனப் பெயர் கொண்டாள்.
மதுரையை ஆண்ட கூன்பாண்டியன் சிவத்தை மறந்து, சமணத்தை தழுவிய காலத்தில், திருஞானசம்பந்தர் மதுரை சென்று, சமணர்களை வாதத்தில் வென்று, மன்னனை மீண்டும் சைவ சமயத்திற்கு அழைத்து வந்து, அரசனது உடற்கூனையும் சரி செய்தார்.
திருவோத்தூர் தலம் வந்த திருஞானசம்பந்தர், இங்குள்ள மடத்தில் தங்கிக் கொண்டு, சிவ தொண்டு ஆற்றி வந்தார். சிவனடியார்கள் பலரும் கூட்டம் கூட்டமாக அவரைக் காண மடத்திற்கு வந்தனர். இதனால் பொறாமை கொண்ட சமணர்கள், அபிசார வேள்வி ஒன்று நடத்தி, கொடிய ஐந்து தலை நாகம் ஒன்றை எழுப்பி, ஞானசம்பந்தரைக் கொல்ல ஏவினர்.
தோட்டீரே துத்தி ஐந்தலை நாகத்தை ஆட்டீரே அடியார் வினை
ஓட்டீரே உம்மை ஏத்துதும் ஓத்தூர் நாட்டீரே அருள் நல்குமே
எனப் பதிகம் பாடி இறைவனை வேண்டினார் திருஞானசம்பந்தர்.
பாம்பாட்டி சித்தர் வேடம் பூண்டு, வேதநாயகனே, மகுடி ஒன்றை வைத்துக் கொண்டு, ஐந்தலை நாகமிருக்குமிடம் வந்து, அதன் வாலைப் பற்றி சுழற்றியாட்டி, அதனை கையில் பற்றியவாறே கோவிலுக்குள் புகுந்து, லிங்கத் திருமேனியில் கலந்தார்.
பிறிதொரு சமயம், அனல்வாதம் செய்து தோற்றுப் போன சமணர்கள், புனல் வாதம் செய்ய வரும்படி மீண்டும் அழைத்தனர். சமணர்களின் ஓலை நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டது. ஞானசம்பந்தரின் நீரிலிட்ட ஏடு மிதந்து சென்று, அகஸ்தியர் வழிபட்ட கோவிலருகே கரை ஒதுங்கியது.
ஏடுகளை இட்ட இடம் அனுப்பி வைத்த ஊர் என வழங்கப்பட்டு, தற்போது அனப்பத்தூர் என பெயர் மாற்றம் கொண்டுள்ளது. ஏடு எதிர்ந்து கரை ஒதுங்கிய இடம் செய்யாற்றை வென்றான் என அழைக்கப்படுகிறது.
கடைசியாக சமணர்கள், இவ்வாலயத்து ஆண்பனை மரமருகே நின்று கொண்டு, இந்த மரத்தின் தன்மையை மாற்றும் வல்லமை யாருக்கு இருக்கின்றதோ, அவர்கள் வழிபடும் தெய்வமே பெரிதென்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என நிபந்தித்தனர்.
சமணர்கள் ஆண்பனையை மந்திரித்தனர். மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை. ஞானசம்பந்தர் பதிகம் பாடி இறைவனை வேண்டினார். ஆண் பனையில் பூ ஒரு பக்கம் காய் ஒரு பக்கம் என காட்டி, ஆண்பனையை - பெண்பனையாக மாற்றி, குலை தள்ள வைத்த அதிசயம் நிகழ்ந்த ஸ்தலம்.
கோவிலுக்குள், அம்பிகை சந்நிதியின் முன்னாலுள்ள கொடிமரத்தின் பக்கத்தில், சம்பந்தர் புரிந்த அற்புதத்தை விளக்கும் வகையில், குலை பெண்பனைமரம் இடது பக்கத்திலும், அர்த்தநாரீஸ்வர கோலத்தில் இருப்பதை பார்க்கலாம். 2ம் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் ஐந்து பனைமரங்கள் இருக்கின்றன.
கோவிலுக்கருகில் சேயாறு ஓடுகிறது. சேய் ஆகிய குமரனால் உண்டாக்கப்பட்ட ஆறு என்பதால் சேயாறு என வழங்கப்பட்டு, தற்போது செய்யாறு எனப்படுகிறது.
மூலவர்: வேதபுரீஸ்வரர், அம்பாள்: இளமுலை நாயகி எனப்படும் பாலகுஜாம்பிகை.
ஏழு நிலைகளுடைய ராஜகோபுரமும், மூன்று பிரகாரங்களும், பொய்கையும், தீர்த்தக்கிணறும் அமையப் பெற்ற மிகப்ப பெரிய கோவில்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளி அருள் புரிகின்றார் வேதபுரீஸ்வரர். சதுர ஆவுடையார் கொண்டு கம்பீரமாக தரிசனம் தருகின்றார். கிழக்கு பார்த்த சந்நிதி. சூரியனின் ஒளிக்கதிர்கள் ஸ்வாமி மீது படர்ந்து சூர்ய பூஜை செய்கின்றன.
இவருக்கு வேதநாதேஸ்வரர், ஓத்தூர் கூத்தர், நாகத்தை ஆட்டிய நாயகர் என்றெல்லாம் பெயர்கள் உண்டு.
நந்தி ஸ்வாமியை பார்த்திராமல், முன் கோபுரம் நோக்கி இருக்கின்றது.
அம்பாள் இளமுலை நாயகி எனப்படும் பாலகுஜாம்பிகை இளவயதினளாக, அழகான திருவுருவம் கொண்டு தரிசனம் தருகின்றாள்.
நர்த்தன விநாயகரின் அபூர்வமான சிலையை அவசியம் தரிசிக்க வேண்டும். திருவாசியுடன் சேர்த்து ஒரே கல்லில் உருவாக்கி உள்ளனர். நான்கடி உயர திருமேனி.
பூமாதேவி, இரண்டு மீன்களுக்கு இடையே ஆதார பீடம், அதன் மீது கூர்மாசனம் (ஆமை), அதன் மீது எட்டு யானைகள், அதன்மீது அஷ்ட நாகங்கள் என பஞ்சாஸனம் கொண்டு எழுந்தருளியுள்ள நாகலிங்கேஸ்வரரின் திருவுருவம் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமைகளில் காலை 9 -10.30 மணி அளவில் நாகலிங்கேஸ்வரருக்கு சர்ப்ப தோஷ நிவர்த்தி ஆராதனை செய்யப்படுகிறது.
பஞ்சபூத ஸ்தலங்களை நினைவூட்டும் பஞ்ச பூத லிங்கங்கள் வடக்கு பிரகாரத்தில் இருக்கின்றன. சிவ பெருமான் வீர நடனம் புரிந்த ஸ்தலம் என்பர்.
வலம்புரி விநாயகர், வல்லப விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, ஆனைக்காவூரர், அண்ணாமலையார், கச்சி ஏகம்பன் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. ஆதி கேசவப் பெருமாளை தனி சந்நிதியில் சேவிக்கலாம்.
வலது கையில் மழு வைத்துக் கொண்டு காட்சி தரும் சண்டேஸ்வரரின் திருவுருவம் அழகாக இருக்கிறது. கோஷ்டத்திலுள்ள மூர்த்திகள் அனைத்துமே அழகாக இருக்கின்றன.
மகா மண்டபத்தின் நடுவே நின்று பார்த்தால் ஸ்வாமி, அம்பாள், பிள்ளையார், முருகன், நவகிரகங்கள், ஸ்தல விருட்சம் ஆகியனவற்றை ஒரு சேர தரிசிக்கும் விதத்தில் அமையப் பெற்றுள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.