அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் குகைக் கோவில்

God Name : வெள்ளியங்கிரிநாதர்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

முதல் மலை: முதல் மலை செங்குத்தான பாதையை கொண்டிருப்பதால் ஏறுவதற்கு சிரமமாக இருக்கும். வெள்ளை பிள்ளையார் மலை என அழைக்கின்றனர். அடிவாரக் கோவிலை அடுத்து 800 படிக்கட்டுகள் மேல் நோக்கி செல்கின்றன. சீரற்ற படிகளை கடந்து செல்ல வேண்டும். வழி நெடுகிலும் வானளாவ உயர்ந்த மரங்கள் காணப்படுகின்றன. முதல் மலையைத் தாண்டியதுமே வெள்ளை விநாயகரை தரிசித்து ஆசி பெறலாம். வெள்ளி மலையில் வீற்றிருப்பவர் என்பதால் வெள்ளி விநாயகர் எனப் பெயர் கொண்டு நாளடைவில் மருவி வெள்ளை விநாயகர் என்றானார். இரண்டாம் மலை: வழுக்குப் பாறை என அழைக்கப்படும் இரண்டாவது மலையில் கால் பதிய மட்டுமே வழி செதுக்கப் பட்டுள்ளது. சிரமப்பட்டு பொறுமையாக ஏற வேண்டிய பகுதி. 1000 அடி உயரம் இருக்கும். கொம்பு அல்லது ஊன்றுகோல் துணை கொண்டு ஏறுவது நல்லது. வழியில் இரவில் மின்னும் ஜோதிப் புற்கள், பிணவாடை வீசும் மரப்பட்டைகள், ரோம விருட்சம், வேங்கை மரங்கள் ஆகியனவற்றைக் காணலாம். மிளகு, திப்பிலி போன்ற மூலிகைகள் விளைகின்றன. மூன்றாவது மலை: கை தட்டி சுனை எனப்படும் சுனையுடன் மூன்றாவது மலை துவங்குகிறது. இங்கு நின்று கொண்டு கை தட்டினால் பாறைகளின் துவாரங்களிலிருந்து தண்ணீர் வரும். குடித்த பின்னர் தானாகவே நின்று விடும். சித்தர்கள் நடமாட்டம் மிகுதியான பகுதி என்பார்கள். பாம்பாட்டி சுனை எனும் மற்றொரு சுனையுடன் மூன்றாவது மலை முடிவடைகிறது. சுப்ரமண்ய தீர்த்தம் என்றும் கூறுவார்கள். கையை பாம்பு ஆடுவது போல் ஆட்டினால் பாறையிலிருந்து தண்ணீர் கீழ் நோக்கி வரும். நான்காவது மலை: நடந்து போக எளிதாக சமதளமாக இருக்கிறது நான்காவது மலை. ஒரு புறம் அடர்த்தியான காடு மறு புறம் பாதாளம் என அமைந்துள்ளது. ஓட்டர் சமாதி எனப்படும் சித்தர் சமாதியைக் காணலாம். ஐந்தாவது மலை: பீமன் களியுருண்டை மலை எனப்படும் ஐந்தாவது மலைக்கு சீதாவனம் என்ற பெயரும் உண்டு. பஞ்ச பாண்டவர்கள் தங்கியிருந்த பகுதி எனக் கூறப்படுகிறது. அர்ச்சுணன் தவம் செய்த இடமான அர்ச்சுணன் தலைப்பாறை எனுமிடத்தை காணலாம். உயர் ரக செண்பக மரங்கள், சந்தன மரங்கள் மற்றும் நறுமணம் பரப்பும் ரம்மியமான மலர் சோலைகள், மூலிகைச் செடிகள், செங்குத்தான பள்ளங்கள், பொய் பாலம் ஆகியனவற்றைக் காணலாம். ஆறாவது மலை: ஆண்டி சுனை என்றழைக்கப்படும் ஆறாவது மலை கீழ் நோக்கி இறங்கக் கூடியது. நீலி ஆற்றில் சென்று இணைகிறது. ஆண்டி சுனையிலும் நீலி ஆற்றிலும் நீராடினால் களைப்பு நீங்கிவிடும். ஐந்தாவது மற்றும் ஆறாவது மலைகள் ஏற்ற - இறக்கம் கொண்டதாய் அமைந்துள்ளன. இந்த மலைகளுக்கு இடையே சேத்திழைக் குகை உள்ளது. இந்த குகையில் நிறைய பேர் அமர்ந்து ஒரு மண்டல விரதம் இருக்கும் விதத்தில் பெரியதாக அமைந்துள்ளது. இவை இரண்டும் வெள்ளைமணலைக் கொண்டு விளங்குவதால் திருநீற்று மலை என்றும் கூறுவார்கள். விபூதி திட்டுக்கள், குங்கும திட்டுக்கள், செங்காற்றாழை, மூலிகை மண், வாசனைப் பூக்கள் ஆகியன நிறைந்துள்ளன. அட்டைப் பூச்சிகள் அதிகம். ஏழாவது மலை: சுவாமி முடி மலை எனப் போற்றப்படும் ஏழாவது மலையும் ஏறுவது சிரமம்தான். பஞ்சாட்சர மந்திரம் கூறிக் கொண்டே ஏறி விடலாம். தோரணப்பாறை எனப்படும் இரு பெரும்பாறைகள் ஒன்றுடன் ஒன்று மேல் முகப்பில் தொட்டுக் கொண்டிருக்க, கீழே நடந்து செல்ல சிறிய வழி காணப்படுகிறது. சத்குரு ஸ்ரீ பிரம்மா எனப்படும் திகம்பர முனிவர் வாழ்ந்த குகை ஏழாவது மலைக்கு அருகே உள்ளது. இங்குதான் அவர் தன்னுடைய உடலை உதறியதாகக் கூறப்படுகிறது. கீழே இறங்கத் தொடங்கும்போது எதிர்ப்படுவது திருநீர்மலை. மூங்கில், தேக்கு, ஜோதிப்புல், ஜாதிக்காய், உதிரவேங்கை, வசுவாசி, வாடாமஞ்சள், கற்பூரவல்லி, இரத்தசூரி, ஏறுசிங்கை, இறங்குசிங்கை, சோழக்கிழங்கு போன்ற அரிய தாவர வகைகளை வெள்ளியங்கிரி மலையில் காணலாம்.
மலையடிவாரம்: புளியமரங்கள் சூழ்ந்து எப்போதும் நிழலையும், குளிர்ச்சியையும் தருகின்ற சூழலில் அமைந்துள்ளது. முருகநாயனார் நந்தவனம் ஓய்வெடுக்க வசதியாக உள்ளது. மிகப் பெரிய மண்டபங்கள் பல அமைக்கப்பட்டுள்ளன. பூண்டி விநாயகர் எனப்படும் பஞ்சமூர்த்தி விநாயகரை வணங்கி ஆசி பெற்று மலை ஏறத் தொடங்குகின்றனர். மலையடிவாரக் கோவிலில் வெள்ளியங்கிரி ஆண்டவரையும், மனோன்மணி அம்மையையும் தரிசிக்கலாம். விநாயகர், முருகன், நடராஜர், அறுபத்திமூவர் ஆகிய மூர்த்திகளை தரிசிக்கலாம். ராசித்தூண் ஒன்றும் இருக்கின்றது. மலை: வெள்ளியங்கிரி மலை சிவ வடிவமாகவே திகழ்கிறது. தென்கயிலை எனப் போற்றப்படும் இந்த மலை, வெள்ளி போன்ற பனியையும் மேகங்களையும் தனது சிரசில் கிரீடம் போல் கொண்டுள்ளதால் வெள்ளியங்கிரி எனப் பெயர் கொண்டது. மேற்கு தொடர்ச்சி மலையானது இரண்டு பக்கங்களிலும் (இடது/வலது) அரண்களைப் போல் தொடர்ந்து கோவையின் மேற்கு எல்லைகளாக விரிந்துள்ளது. இந்த மலையின் பின்புறம் கேரளா. சிறுவாணி ஆறு இந்த மலையில் உற்பத்தி ஆகின்றது. வெள்ளியங்கிரியிலிருந்து புறப்படும் காஞ்சி நதி எனப்படும் நொய்யல் ஆற்றை தட்சிண கங்கை என்று அழைப்பார்கள். ஏழு மலைகளை ஏறிச் செல்ல வேண்டும். மலைப்பாதையில் ஒன்பது தாமரை மலர்களை அடுக்கியது போல் ராசித் தூண்கள் காணப்படுகின்றன. சுவாமி முடி மலை எனப் போற்றப்படும் ஏழாவது மலையில் பெரிய பாறையின் கீழே குகையாக அமைந்த கருவறையில் மூலவராக வெள்ளியங்கிரி நாதர் எழுந்தருளி அருள் புரிகின்றார். மலை உச்சியில் நிலாவின் ஒளி துலங்க பூஜை நடக்கின்றது. வேல்களும், ருத்ராட்ச மாலைகளும் நிறைந்திருக்கின்றன. கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து நாமே வழிபடலாம். பஞ்சபூத ஸ்தலமாக வெள்ளியங்கிரி விளங்குவதால் சுவாமிக்கு பஞ்சலிங்கேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. கருவறை அருகே கூட்டமாக நிற்க போதுமான இடமில்லை. தரிசனம் முடித்து ஒருவர் பின் ஒருவராக இறங்க வேண்டும்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.