அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் - வடபத்ர சாயி திருக்கோவில் (ஸ்ரீவில்லிபுத்தூர்)
God Name : மூலவராக வடபத்ர சாயி, உற்சவராக ரங்கமன்னார் எனப்படும் ராஜமன்னார்
திருக்கழுக்குன்றம் கோவில்
கோவை
Call : +91-
ஆதியில் வராஹ க்ஷேத்ரம் எனப் பெயர் பெற்றிருந்தது. பூதேவியை கவர்ந்து சென்ற அசுரனை, திருமால் இங்கு வதம் செய்ததாக ஐதீகம். பின்னாளில் காட்டுப் பிரதேசமாகி விட்ட இப்பகுதியில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களை இம்சித்த காலநேமி எனும் அசுரனை தனது சக்ராயுதத்தால் அழித்தார் திருமால். ரத்தம் தோய்ந்த சக்ராயுதத்தை நீராட்ட - கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளை வரவழைத்தான் வருணன். அந்த மூன்று நதிகளும் திருமுக்குளம் எனும் பெயரில் தற்போது விளங்குகிறது. முனிவர்களின் பிரார்த்தனைகளுக்கிணங்க வடவால மரத்தின் கீழ் திருமகளோடு சேஷசாயியாக காட்சி அளித்தார். ஆலமரத்தின் கீழ் சயனித்ததால் வடபத்ரசாயி எனும் திருநாமம் கொண்டார். வடபத்ரம் எனும் ஆலிலையில் பள்ளி கொண்டவர் என்பதால் வடபத்ரசாயி என அழைக்கப்படுவதாகவும் கூறுவர். பல நூற்றாண்டுகள் கழிந்ததும் மீண்டும் அடர்ந்த காடாக மாறிய இப்பகுதியில் வில்லி எனும் வேடுவர் தலைவன் வசித்து வந்தான். ஒரு நாள், எதிர்பாராத விதமாக அவனது தம்பி ஒரு புதரருகே பிணமாக இருப்பதைக் கண்டான். தன் தம்பியை உயிர்ப்பித்து தருமாறு திருமாலிடம் வேண்டினான். அவனுக்காக இரங்கிய பெருமாள் அவனது தம்பியை உயிர்ப்பித்து தந்து, வேண்டிய பொருளும் தந்து உதவினார். அந்த பணத்தைக் கொண்டு, இந்த காட்டை அழித்து புதிய ஊர் ஒன்றை நிர்மாணித்தான். வில்லி நிர்மாணித்த புதிய ஊர் வில்லிபுத்தூர் என்ற பெயரைக் கொண்டது. தனக்கு செல்வங்களை அளித்த சேஷசாயிக்கு அவர் முன்பிருந்த இடத்திலேயே கோவில் எழுப்பினான் வில்லி என ஸ்தல வரலாறு. பெரியாழ்வார் அவதரித்த ஸ்தலம். பெரியாழ்வார் இங்கு ஒரு நந்தவனம் அமைத்து புஷ்ப கைங்கர்யம் செய்து வந்தார். ஒரு நாள் இங்குள்ள துளசி பாத்தி அருகே ஒரு பெண் குழந்தையை கண்டெடுத்தார். அவளுக்கு கோதை எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தார். பெருமாளின் வழிபாட்டுக்குரிய மாலையை சூடி மகிழ்வது கோதையின் வழக்கமாக இருந்தது. ஆழ்வார் கடிந்து கொண்டும் இப்பழக்கத்தை கோதை நிறுத்தவில்லை. ஒரு நாள் ஆழ்வாரின் கனவில் தோன்றிய பெருமாள், கோதை சூடிக் கொடுத்த மாலை தமக்கு பிரியமானதே எனத் தெரிவித்தார். அரங்கனைத் தவிர வேறு யாரையும் மணக்க மாட்டேன் என பிடிவாதமாக இருந்த கோதையை, ரங்கநாதர் ஸ்ரீ வில்லிப்புத்தூருக்கு வந்து திருமணம் செய்து கொண்டார். கோதை ஆண்டவனை ஆட்கொண்டதால் ஆண்டாள் என அழைக்கப்படலானாள். ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ நிவாசன், சுந்தரராஜன், திருத்தங்காலப்பன், ஸ்ரீ பெரிய பெருமாள் ஆகியோர் ஆண்டாளை மணம் முடிக்க போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள். அவர்களை பெரியாழ்வார் உபசரிப்பதே பஞ்சகருடசேவை நிகழ்வு. முதலில் வரும் ரங்கநாதரையே ஆண்டாள் திருமணம் செய்து கொள்வாள். ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, கிளிகள், பட்டு வஸ்திரம் ஆகியவற்றை ஒரு கூடையில் வைத்து ஊர்வலமாக எடுத்து வருவார்கள். பிரம்மோத்ஸவத்தினபோது சூடிக் கொடுத்த மாலையை சாற்றிய பின்னரே பெருமாள் கருட வாகனத்தில் புறப்படுவார் என கூறுகின்றனர். ஸ்ரீரங்கம் போலவே இங்கும் அரையர் சேவை உண்டு. ஆண்டாள் உலா வரும்போது நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடப்படுகின்றது. பனையோலை குருத்துக்களால் உருவாக்கப்பட்ட 16 கால்கள் கொண்ட சப்பரத் தேர், செப்புத் தேர் மற்றும் வானமாமலை ஜீயர் வழங்கிய பெரிய தேர் என மூன்று தேரோட்டங்கள் நடைபெறும். ஆடிப் பூரமான ஆண்டாளின் அவதாரத் தினத்தன்று தேர்த்திருவிழா கொண்டாடுவார்கள். நல்லெண்ணெய், பசும்பால், தாழம்பூ, நெல்லிக்காய், இளநீர் மற்றும் 61 மூலிகைகளைக் கொண்டு, 40 நாட்கள் காய்ச்சி தயாரித்த எண்ணெயைக் கொண்டு மார்கழி மாசத்தில் எண்ணெய்க்காப்பு உற்சவம் நடத்துவார்கள். வைகாசி பௌர்ணமியன்று ஆண்டாளுக்கு பால் மாங்காய் நைவேத்யம் (மிளகு, சீரகம், சீனி, நறுக்கிய மாங்காய் துண்டுகள் சேர்த்து சுண்டக் காய்ச்சிய பால்). மார்கழி பகல் பத்து சமயத்தில் வீடுகளில் காய்கறிகளை பரப்பி (பச்சைபரத்தல்) வைப்பார்கள். சுண்டக் காய்ச்சிய பாலில் கொண்டக்கடலை, வெல்லம் சேர்த்து திரட்டுப்பால் செய்து ஆண்டாளுக்கு நைவேத்யம் செய்வார்கள்.
வடபத்ர சாயி கோவில் - ஆண்டாள் கோவில் என இரட்டை கோவிலாக அமைந்துள்ளது. பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனம் இடையே உள்ளது. மூன்று வாசல்கள் வழியே சேவிக்கும் வகையில் அமையப்பெற்ற மூலஸ்தானம். படிக்கட்டுக்கள் ஏறி மேலே சென்று மூலவரை சேவிக்க வேண்டும். மூலஸ்தானத்தில் மூலவரான வடபத்ர சாயி கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, போக சயனத்தில் சயனித்துள்ளார். தலைமாட்டில் ப்ருகு முனிவரும், திருவடிகளருகே மார்க்கண்டேயரும் வணங்கியபடி நிற்கின்றனர். தும்புரு, நாரதர், சனத்குமாரர், கின்னரர், சூரிய - சந்திரர்கள், மது - கைடபர் ஆகியோரை காணலாம். ரங்கமன்னார், ராஜமன்னார் எனும் திருநாமங்களுடன் உற்சவ மூர்த்தி சேவை சாதிக்கின்றார். வடபத்ரசாயி கோவிலின் தரைத்தளத்தில் லட்சுமி நரசிம்மரும், முதல் தளத்தில் ஸ்ரீ தேவி - பூதேவி சமேத பள்ளி கொண்ட பெருமாளும் எழுந்தருளியுள்ளனர். திருப்புர நந்தவனத்து பூந்தோட்ட திருத்துழாய் செடியின் அடியில்தான் ஆண்டாள், பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டாள். அயோனிஜையாய் அவதாரம் என்பர். துளசி மாடமும், மாடத்தினடியில் ஆண்டாள் சிற்பமும் உள்ளது. ஆண்டாளின் தனி சந்நிதி இருக்கின்றது. நந்தவனத்திற்கும் வடபத்ரசாயி கோவிலுக்குமிடையே உள்ள சந்நிதியில் சக்கரத்தாழ்வார் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். மூன்று கண்கள், 16 திருக்கரங்கள் கொண்ட அழகிய திருமேனி. பின்புறமாக யோக நரசிம்மர் காணப்படுகிறார். முழுவதும் கருங்கற்களாலான ஆண்டாள் கோவிலின் மூலஸ்தானத்து விமானத்தில் ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை பாசுரங்களின் தாத்பர்யத்தை விளக்கும் சிற்பங்கள் காணப்படுகின்றன. மூலஸ்தானத்தில் ஆண்டாள், ரங்கமன்னார், பெரிய திருவடி ஆகியோர் சேவை சாதிக்கின்றனர். திருவரங்கன் திருமணக் கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். இங்கு கருடாழ்வார் மாப்பிள்ளை தோழனாக பெருமாளின் அருகிலேயே இருப்பதாக ஐதீகம். மூல விக்ரஹங்களின் முன்பாக உள்ள கோபால மஞ்சத்தில் உற்சவர்களாக எழுந்தருளியுள்ளனர். அர்த்த மண்டபத்தில் இடக்கரத்தில் கிளியுடன் காணப்படும் ஆண்டாள் - ரங்கமன்னாரின் திருமணக் கோலம் அழகு வாய்ந்தது. மகா மண்டபத்தையும் திருச்சுற்றையும் இணைக்கும் பகுதி, செப்புத் தகடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சுற்று பிரகாரத்தில் 108 திவ்ய தேச பெருமாள்களின் வர்ண சித்திரங்கள் மேலும் அழகு சேர்க்கின்றன. முதலாவது ஸ்ரீரங்கம் - இது ஆண்டாளின் புகுந்த வீடு. ஸ்ரீ வில்லிப்புத்தூர் தாய்வீடு என்பதால் கடைசியாக உள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் கஜலட்சுமி சிலையையும், சந்தனமர மண்டபத்தையும் காணலாம். மண்டபத் தூண்களின் வேலைப்பாடுகள் பிரம்மிக்க வைக்கின்றன. ஏகாதசி மண்டபத் தூண்களின் சிற்பங்களும், கல்யாண மண்டபமும் அழகாக இருக்கின்றன. குறிப்பாக கலைமகள் சிற்பத்தில் கலைமகளின் நாசியும் கால் பெருவிரல் நுனியும் ஒரே நேர்க்கோட்டில் அமைத்துள்ளது வியக்க வைக்கும் வேலைப்பாடு. கொடிமரத்திற்கும் ராஜகோபுரத்திற்கும் இடையே உள்ள சந்நிதிகளில் பெரியாழ்வாரையும் ராமாநுஜரையும் சேவிக்கலாம். மணிமண்டப கம்பம் ஒன்றில் ஆண்டாள் முகம் பார்த்த வெண்கலத்தட்டு (கண்ணாடி) உள்ளது. இதை தட்டொளி என்பார்கள். கண்ணாடி கிணறு என்றழைக்கப்படும் கிணற்றில், கோதை பூமாலை அணிந்து அழகு பார்த்து கொள்வாளாம். 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.