அருள்மிகு திருச்செந்திலாண்டவர் திருக்கோவில் (திருச்செந்தூர்)

God Name : செந்திலாண்டவர் எனப்படும் சுப்ரமணியசுவாமி

திருக்கழுக்குன்றம் கோவில்

கிருஷ்ணகிரி

Call : +91-

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் இரண்டாவது படைவீடு திருச்செந்தூர் ஸ்தலம். இந்தப் படை வீட்டில்தான் முருகக் கடவுள் தேவசேனாதிபதியாகி சிங்கமுகன், சூரபத்மன் ஆகிய அசுரர்களை ஜெயித்து, தேவேந்திரனுக்கு ராஜ்யத்தை மீட்டுத் தந்தார் என புராணங்கள் தெரிவிக்கின்றன. அசுரன் சூரபத்மனை வெற்றி கொண்ட ஸ்தலம் என்பதால் ஜெயந்திபுரம் எனப் பெயர் கொண்டது. செயந்தி என்ற சொல்லே மருவி செந்தில், செந்தூர் என்றெல்லாம் வழங்கலாயிற்று எனக் கூறுவர். கடலின் கிழக்குக் கரையோரமாக மதில் சுவர்கள் மன்னார் குடாக் கடலால் அலைக்கப்படுவதாலும், சீராக அலைகள் வருவதாலும் திருச்சீரலைவாய் எனப் பெயருற்றது. கந்தமாதன பர்வதம் எனும் குன்றைக் குடைந்து தேவதச்சனான மயனால் சிருஷ்டிக்கப்பட்ட ஆலயத்தில், சிங்காதனத்தில் அமர்ந்து தேவர்களின் குறைகளைக் கேட்டறிந்த முருகப் பெருமான், பூத கணங்களுடன் படை எடுத்துச் சென்று சூரபத்மனை சம்ஹாரம் செய்தார் என கந்தபுராணம் விவரிக்கின்றது. டச்சுக்காரர்களின் படை வீடாக இருந்த திருச்செந்தூரிலிருந்து 1649 ஆம் வருஷம், கோவில் விக்ரகங்களைக் கவர்ந்து சென்று இலங்கையில் ஒளித்து வைத்து விட்டனர். தகுந்த நஷ்ட ஈடு கேட்டார்கள். திருமலை நாயக்கரின் பிரதிநிதியாக இருந்த வடமலையப்ப பிள்ளை மிகுந்த பொருள் கொடுத்து மீட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. டச்சுக்காரர்கள் முருகப் பெருமானின் விக்ரகத்தைக் கடலில் வீசி எறிந்து விட்டதாகவும், தாம் கடலில் இருக்கும் இடத்தை முருகனே வடமலையப்பரின் கனவில் வந்து தெரிவித்ததாகவும், பின்னர் கடலிலிருந்து தேடிக் கொண்டு வரப்பட்டது என்ற வரலாறும் உள்ளது. சூர சம்ஹாரம் முடிந்த பின்னர் சூரபத்மன் மயிலாகவும் சேவலாகவும் இரு கூறாக உருவான ஸ்தலம். அருணகிரிநாதர் திருவடி தீட்சை வேண்டிய ஸ்தலம். திருச்செந்தூரிலிருந்து 60 கி.மீ தூரத்திலுள்ள பாஞ்சாலகுறிச்சி பாளையக்காரர்கள், செந்தூர் முருகனின் பூஜை முடிந்து மணி சத்தம் கேட்ட பின்னரே பகல் போஜனம் செய்வார்களாம். பூஜை முடிந்ததை அறிவிக்க வழி நெடுக மணிகளைக் கட்டி வைத்திருந்தனர் எனக் கூறப்படுகிறது.
கோவிலின் எல்லையை மிதிக்கும் இடத்தில் தூண்டுகை விநாயகர் சந்நிதி கொண்டுள்ளார். இவரை தரிசித்து ஆசி பெற்றுப் பின்னரே ஆலயத்துள் செல்வது பக்தர்களின் வழக்கம். கல்மலையில் ஐம்பதடி உயரமுள்ள ஒரு பகுதியைக் குடைந்து மூலஸ்தானத்தை நிர்மாணித்துள்ளனர். மூலஸ்தானத்தில் மூலவராக சுப்ரமண்யசுவாமி எழுந்தருளியுள்ளார். நான்கு திருக்கரங்களைக் கொண்ட அழகிய திருமேனி. இவருக்கு செந்திலாண்டவர் என்ற பெயரும் உண்டு. அபய - வரத கரங்களாக இரண்டும், சிவனை அர்ச்சிக்க புஷ்பங்களைக் கொண்ட கரம் ஒன்றும், உருத்திராக்க மாலையை ஏந்திய கரம் ஒன்றுமாக தவக் கோலத்தில் காணப்படுகிறார். மூலவர் சந்நிதியில் போத்திகள் அர்ச்சகராக இருக்கின்றனர். பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதம் தருகின்றனர். மூலஸ்தானத்தைச் சுற்றியுள்ள பாம்பறை (சுரங்கம்) இருட்டாக உள்ளது. இதில் முருகன் பூஜித்த பஞ்ச லிங்கங்களைத் தரிசிக்கலாம். இதை சந்தனாசல குகை என்றும் கூறுவார்கள். குகைக்குள் இருக்கும் பஞ்ச லிங்கங்கள் பஞ்ச பூதங்களைக் குறிப்பதாகும். சூரியனாலும் தெய்வயானையாலும் பூஜிக்கப்பட்ட சக்தி லிங்கமான ஜகந்நாத லிங்கத்தை முருகன் பூஜித்துக் கொண்டிருப்பதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. இவற்றுடன் ஆறுமுகநயினார் பூஜிக்கும் ஆன்மலிங்கம், மற்றும் ஜெயந்திநாதர் சந்நிதியிலுள்ள சந்திர லிங்கம் சேர்த்து முருகப்பெருமான் அஷ்டலிங்கங்களைப் பூஜிப்பதாகக் கொள்ளலாம். மகா மண்டபத்தில் பார்வதி தேவியையும், கரியமாணிக்க விநாயகரையும் தரிசிக்கலாம். அர்த்த மண்டபத்தை வீர மகேந்திரனும் வீர பாஹுவும் இரு பக்கங்களிலும் காத்து நிற்கின்றனர். மணியடி எனப்படும் மயில் மண்டபத்தின் நடுவே ஆறுமுக நயினார் இரு தேவியர்களுடன் காட்சி தருகின்றார். கிழக்கே ஜெயந்திநாதர், அலைவாய் உகந்த பெருமான் மற்றும் சண்முகரின் உற்சவ மூர்த்திகளை தரிசிக்கலாம். சண்முக விலாச மண்டபத்திற்கு சற்று தொலைவில் நாழிக் கிணறு இருக்கின்றது. ஸ்கந்த புஷ்கரிணி என்றும் கூறுவர். முருகன் சிவபூஜை செய்யும் முன், அபிஷேகம் செய்வதற்காக தனது வேல் கொண்டு உருவாக்கிய தீர்த்தம் என்று கூறப்படுகிறது. இதில் நீராடிய பிறகே கடலில் குளிக்க வேண்டும் என நியதி. இந்த மண்டபத்திற்கு முன்னால் கடல் பரந்து விரிந்து காணப்படுகிறது. அலைகளின் இழுப்பு, கொந்தளிப்பு ஏதுமின்றி அமைதியாக இருக்கும். பயமின்றி நீராடலாம். சண்முக விலாசத்திலிருந்து பிரதான ஆலயம் வரை வழி நெடுக சிற்ப வேலைப்பாடுகளையுடைய தூண்களைக் காணலாம். முதற் பிரகாரத்தை சிவிலி மண்டபம் என்பார்கள். இதில் சித்தி விநாயகர் எழுந்தருளி ஆசி வழங்குகிறார். மேற்கே 108 சிவலிங்கங்களைத் தரிசிக்கலாம். வடக்கே மிகப் பெரிய திருமேனியுடன் வல்லப விநாயகர். அடுத்து கொடிமரம். சிவிலி மண்டபத்தில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட சுப்ரமண்யரின் திருவுருவம் அழகாக உள்ளது. மயில் மீதமர்ந்து அசுரனை தனது வேலால் தாக்கும் கோலத்தில் காணப்படுகிறார். மார்பில் வேல் தாங்கிய சூரபத்மனின் சிலை எதிரே உள்ளது. அவன் ஏவிய சேவல் ஒன்றும் காணப்படுகிறது. சிவிலி மண்டபத்தின் வடக்குப் பகுதியில் பள்ளி கொண்ட பெருமாள், ஸ்ரீநிவாசர், கஜலட்சுமி ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். மலையிலிருந்து குடையப் பெற்ற சிலாவடிவங்கள். இரண்டாம் பிரகாரத்தில் வீரமார்த்தாண்டனும் வீர சேகரியும் காணப்படுகின்றனர். கிழக்கு நோக்கியபடி குமரவிடங்க பெருமான் காட்சி தருகிறார். தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் அழகாக இருக்கின்றது. யாகசாலை மண்டபம், அழகிய பாலசுப்ரமண்யர், வள்ளியம்மை ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். வடமேற்கே தெய்வயானை சந்நிதி கொண்டுள்ளார். ஆத்மலிங்கம், மனோன்மணி, பானுகேசுவரர், உமா மகேஸ்வரர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருமூலநாதர், காளத்தீஸ்வரர், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மை, சங்கரலிங்கர், அருணகிரிநாதர் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். பிரகாரச் சுவரின் துவாரம் வழியாக காது வைத்துக் கேட்டால் கடல் அலை ஓசை கேட்கும். இடும்பன் சந்நிதி முன்பாக நின்றால் இதமான குளிர் காற்று வீசுவதை உணரலாம். ஆலயத்தின் வடக்கே மணற்குன்று ஒன்று கடற்கரையோரமாக உள்ளது. இதைக் குடைந்து உருவாக்கிய கருவறையில் வள்ளி, தத்தாத்ரேயர் ஆகியோரின் திருவுருவங்களை காணலாம். வள்ளிக் குகையின் அடிப்பாகத்தை கடலலைகள் வந்து அலைக்கின்றன. வள்ளி தெய்வயானைக்கு பயந்து ஒளிந்து கொண்ட குகை என்பர். காலை 5.10 சுப்ரபாதம், காலை 5.35 விஸ்வரூபம், மதியம் 12 மணிக்கு உச்சி கால தீபாராதனை, மாலை 5.00 - 5.30 சாயரட்சை தீபாராதனை, இரவு 7.45 மணிக்கு ராக்கால தீபாராதனை. அறுபடை வீடுகளுள் இரண்டாவது - தேவார வைப்புத் தலம்
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.