அருள்மிகு கள்ளபிரான் சுவாமி திருக்கோவில் (ஸ்ரீ வைகுண்டம்)

God Name : மூலவர்: ஸ்ரீ வைகுண்டநாதன், உற்சவர்: ஸ்ரீ கள்ளபிரான்

திருக்கழுக்குன்றம் கோவில்

கிருஷ்ணகிரி

Call : +91-

பிரம்மாவிடமிருந்து வேதங்களை கோமுகாசூரன் எடுத்துச் சென்று விட்டதால் ஞானத்தை இழந்து துக்கித்த பிரம்மா, மறைகளை திரும்ப பெற வேண்டி தவமிருக்க தகுந்த இடம் தேடி அலைந்து இத்தலத்தை தேர்ந்தெடுத்து தவம் மேற்கொண்டார். விஷ்ணு மூர்த்தியை நோக்கி தவமிருந்தார் பிரம்மா. அசுரனிடமிருந்து மறைகளை மீட்ட திருமால், கருட வாகனம் கொண்டு பிரம்மன் முன்பாக பிரத்யட்சமானார். இதனால் மூலஸ்தானத்தில் தேவியர்கள் இல்லை. அர்ச்சாரூபமாக காட்சி தந்த இடத்திலேயே பக்தானுக்கிரகம் செய்ய ஊன்றி விட்டார் வைகுண்டநாதன். காலப்போக்கில் அவர் மீது புற்று ஒன்று வளர்ந்தது. பாண்டிய அரசர்களின் அரண்மனை பசுக்கள் அருகேயுள்ள வனத்தில் தினமும் மேய்வது வழக்கம். அதில் ஒரு பசு மட்டும் அரண்மனை சென்ற பின் பால் கறக்காது. இதன் பின்னணியை கண்காணித்ததில் அந்த பசுவானது, எம்பெருமான் மேல் வளர்ந்துள்ள புற்றின் மீது பால் சொரிவது தெரிய வந்தது. இதைக் கேள்விப்பட்ட அரசன் புற்றை தோண்டச் செய்தான். ஸ்ரீ வைகுண்டநாதரின் விக்ரஹம் கிடைத்தது. அதை பிரதிஷ்டைசெய்து கோவில் எழுப்பினான். இதனால் வைகுண்டநாதருக்கு தினமும் பால் திருமஞ்சனம் செய்கின்றார்கள். ஸ்வாமிக்கு பாற்பாண்டியர் என்ற திருநாமம் வந்தது. காலதூஷகன் எனும் திருடன், தீமை புரிந்து பொருள் சேர்ப்பவர்களிடம் கொள்ளை அடிப்பான். அதில் பாதியை வைகுண்டநாதனுக்கு கொடுத்து விடுவான். மீதியை ஏழைகளுக்கு கொடுத்து உதவுவான். அரண்மனையிலேயே ஒரு நாள் திருடும்போது, காவலாளிகள் அவனது கூட்டாளிகளை பிடித்து விட்டனர். காலதூஷகன் தப்பி சென்று எம்பெருமானை சரணடைந்தான். அவனை காப்பாற்றுவதற்காக எம்பெருமான் ஒரு முதியவர் வடிவில் அரண்மனைக்கு சென்று தாமே களவாடியதாக கூறி தம்மை ஒப்புவித்துக் கொண்டார். உமக்கு ஏன் இந்த தீய தொழில்? என வினவினான் அரசன். எம்பெருமான் தனது சுயஸ்வரூபத்தைக் காண்பித்து தருமம் செய்யாதவர்களின் பொருட்களை கள்வர்கள் கவர்வர் எனக் கூறினார். அரசன் தனது தவற்றை திருத்திக் கொள்வதாக கூறி, அவரை வணங்கி நீர் என்றென்றும் கள்ளர்பிரானாக இத்தலத்திலேயே இருக்க வேண்டும் என வேண்டினான். அரசனின் வேண்டுகோளுக்கிணங்க இத்தலத்தில் கள்ளர்பிரானாக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார் என ஸ்தல வரலாறு.
மூலவர்: ஸ்ரீ வைகுண்டநாதன், உற்சவர்: ஸ்ரீ கள்ளபிரான். தாயார்கள்: ஸ்ரீ வைகுண்ட நாச்சியார், ஸ்ரீ சோரநாத நாச்சியார். மூலஸ்தானத்தில் மூலவரான ஸ்ரீ வைகுண்டநாதன் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். ஆதிசேஷன் குடையாக நிற்க, சாளக்ராம மாலை அணிந்து, கதையுடன் காட்சி தருகின்றார் எம்பெருமான். இவருக்கு பாற்பாண்டியர் என்ற திருநாமமும் உண்டு. தினமும் காலை வேளையில் வைகுண்டநாதருக்கு பால் திருமஞ்சனம் நடைபெறுவது விசேஷமான ஒன்று. பிரம்மன், இந்திரன், ப்ருகு முனிவர், காலதூஷன் மற்றும் நம்மாழ்வார் ஆகியோர்க்கு பிரத்யட்சமானதாக ஐதீகம். மூலஸ்தானத்தை ஒட்டியுள்ள அர்த்த மண்டபத்தில் கள்ளபிரான் உற்சவ மூர்த்தியாக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். சமஸ்கிருதத்தில் சோரநாதர் என்பார்கள். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். இந்த விக்ரஹத்தை செய்த சிற்பி இவரது அழகில் மயங்கி, கன்னத்தில் கை வைத்து கொஞ்சினானாம். இதனால் பெருமாளின் இடது கன்னம் சிறிது குழிவடைந்து மேலும் அழகு சேர்க்கும் விதத்தில் மாறியது. வைகுண்டநாயகி, சோரநாதநாயகி, பஞ்ச பேரர்கள், ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் ஆகியோரின் உற்சவ விக்ரஹங்களும் அர்த்த மண்டபத்திலுள்ளன. அர்த்த மண்டபத்தோடு இணைந்த மகா மண்டபத்தின் தூண்களில் சிங்கம் வாழைப்பூப் போதிகளை சுமப்பதைப் போன்று வடித்துள்ளனர். இதன் மணி வாயிற் கதவும் அழகாக இருக்கின்றது. வெளிச்சுற்றின் தென்மேற்கே வைகுந்தவல்லி நாச்சியார் சந்நிதி கொண்டுள்ளார். வீற்றிருந்த கோலம் கொண்டு காட்சி தரும் தாயார் மிகுந்த வரப்பிரசாதி. முன்னால் உள்ள மண்டபத்தின் திருக்கோலக்குறட்டில் அத்யயன பகல்பத்து உற்சவத்தின் போது உற்சவ மூர்த்திகள் எழுந்தருளுவார்கள். சுற்றின் வடமேற்கே சோரநாதநாச்சியார் சந்நிதி கொண்டுள்ளார். சாளக்ராமத் திருமேனி. வைகுந்தவல்லி தாயார் சந்நிதியின் முன்புறமாக உள்ள கிளிக்குறட்டில் - கிளியானது வாழைப்பூவிலுள்ள தேனை எடுத்து அடுத்த கிளிக்கு ஊட்டுவது போன்ற அரிய சிற்பத்தை பார்த்து ரசிக்கலாம். பரமபத வாசலின் மேலுள்ள சிறிய கோபுரத்தில் நரசிம்மாவதார காட்சிகளை கண்டு களிக்கலாம். வடக்குப் பக்க பிரகாரத்தில் திருவாய்மொழித் திருநாள் மண்டபம் இருக்கின்றது. சிங்கம் சுமந்த போதிகைகள் கொண்டுள்ள தூண்களையுடையது. கொடிமரமருகே காணப்படும் திருவேங்கடமுடையான் மண்டபத்து தூண்களில் அனேக சிற்பங்களைக் காணலாம். முகப்பிலுள்ள தூண்களில் வீரபத்ரர், சீதா தேவி சஹித ராமச்சந்திர மூர்த்தி சுக்ரீவனுக்கு அருள் புரியும் காட்சி ஆகிய சிற்பங்கள் குறிப்பிடத் தக்கவை. உக்ர வீரபத்ரரின் சிற்பம் அதி அற்புதமானது. மண்டபத்திற்குள் திருவேங்கடமுடையான் சந்நிதி கொண்டுள்ளார். முகப்பில் மற்ற திருப்பதிகளின் பெருமாள்களின் திருவுருவங்களைக் காணலாம். மூலவரின் திருநட்சத்திரமான தை மாச அனுஷ நட்சத்திர நாளன்று எம்பெருமான் சகல ஆபரணங்களையும் அணிந்து கொண்டு சேவை சாதிக்கின்றார். 108 திவ்ய தேசங்களுள் ஒன்று - நவ திருப்பதிகளுள் ஒன்று (1) - சூரிய ஸ்தலம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.