அருள்மிகு காந்திமதி உடனாய நெல்லையப்பர் திருக்கோவில் (திருநெல்வேலி)

God Name : நெல்லையப்பர் மற்றும் ஆதிலிங்கம் எனப்படும் வேணுவனநாதர்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் நான்கும் சிவபெருமானைக் குறித்துத் தவம் இருந்தன. பிரத்யட்சமான இறைவன் முன், தாங்கள் நான்கு மரங்களாக இருக்க, அதன் நிழலில் இறைவன் வாசம் செய்ய வேண்டும் எனப் பிரார்த்தித்தன. இத்தலத்திலுள்ள வேணு வனத்தில் வேணு மரங்களாக இருக்குமாறு பணித்தார் இறைவன். அதன்படி, நான்கு வேதங்களும் இங்கு மூங்கில் மரங்களாக நிற்க, அதனடியில் இறைவன் லிங்க வடிவில் அமர்ந்தான் என ஸ்தல வரலாறு கூறுகிறது. ராமக்கோன் என்ற பெயர் கொண்ட இடையன், தினமும் இந்த வேணுவனம் வழியாகப் பால் குடங்களைச் சுமந்து சென்று, அரண்மனைக்குச் சென்று மன்னரிடம் பாலைக் கொடுப்பது வழக்கம். மூங்கில் முனை ஒன்று தடுக்கி, பால் குடம் கவிழ்ந்து பால் கீழே கொட்டுவதும் அனுதினம் நடக்கும் செயலாக இருந்தது. தினமும் பால் கீழே கொட்டி வீணாவதால், மன்னனின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமே என்ற பயம் வந்ததினால், கோடரி கொண்டு மூங்கில் முனையை வெட்டி விட்டான் ராமக்கோன். வெட்டிய இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. பயந்துபோன ராமக்கோன் நடந்தவைகளை மன்னனிடம் விவரித்தான். உடனே அங்கு விரைந்து வந்த மன்னன், அக்காட்சியைக் கண்டு, இது ஏதோ தெய்வச் செயல் என்றெண்ணி, மூங்கிலுக்கடியில் மறைந்திருக்கும் இறைவன் வெளிப்பட வேண்டும் எனப் பிரார்த்தித்தான். பிரார்த்தனைக்கிணங்க, இறைவன் லிங்க வடிவில் எழுந்தருளினார் என ஸ்தல வரலாறு. பங்குனித் திருவிழாவின் நான்காம் நாள் இந்த திருவிளையாடலை நடத்திக் காட்டுவார்கள். ராமக்கோனால் வெட்டுப்பட்ட காயத்துடன் இறைவன் வளர்ந்து நின்றார். 'வேண்ட வளர்ந்த நாயகன்' என்ற பெயர் கொண்ட இந்த மூல லிங்கத்திற்கு மன்னன் கோவில் எழுப்பினான். முழுதும் கண்ட ராமபாண்டியன் கட்டுவித்த கோவில். பின்னர், நின்ற சீர் நெடுமாறன், ஏழாம் நூற்றாண்டில் இந்தக் கோவிலை விரிவுபடுத்தினான் எனக் கூறப்படுகிறது. வேதசர்மா எனும் சிவபக்தன், தமது வறுமையைப் போக்கியருளுமாறு வேணுவனநாதரிடம் முறையிட்டு வேண்டிக்கொண்டார். இறைவனருளால் வறுமை நீங்கப் பெற்று வசதிகளைப் பெற்றதும், தினமும் இவ்விறைவனுக்குச் செந்நெல் அறுத்து அமுது படைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சிறிது காலம் சென்றதும், மீண்டும் வறுமை நிலைமையை அடைந்தார். வீடு வீடாகச் சென்று நெல் பிச்சை எடுத்து வந்து அதில் அமுது படைக்கலானார். ஒரு நாள், தாம் சேகரித்த நெல்லை ஆற்றின் கரையில் பரப்பி வைத்துவிட்டு, ஆற்றில் நீராடச் சென்றார். சோதனையாகப் பெருங்காற்றுடன் கூடிய மழை வந்தது. தான் பிச்சை எடுத்துச் சேகரித்து வைத்த நெல்லைக் காப்பாற்ற ஓடோடி வந்தார் வேதசர்மா. இறைவனின் திருவுளத்தால், காய வைத்த நெல்லைச் சுற்றிலும் வெய்யில் அடித்துக் கொண்டிருக்க, நெல்லைச் சுற்றிலும் மழை நீரே வேலி போல் நின்றது. இறைவனின் கருணையை நினைத்து ஆனந்தித்தார் வேதசர்மா. நெல்லை வேலி போல் காத்ததனால், 'வேலி காத்த நாதர்', 'நெல்லையப்பர்', 'சால்வடிவீஸ்வரர்' ஆகிய பெயர்களைக் கொண்டார் ஸ்வாமி. இறைவனே வேலியிட்டு காத்ததினால், இவ்வூரை திருநெல்வேலி என்று அழைக்கின்றனர். தைப்பூசத் திருவிழாவின் நான்காம் நாள், நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடலை ஐதீகமாக நடத்திக் காட்டுகின்றனர். "திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலியை, திங்கள்தோறும் திருவிழாக் காணும் திருநெல்வேலி" என்று திருஞானசம்பந்தர் போற்றிப் பாடியிருக்கின்றார்.
தெற்கில் காந்திமதி அம்மன் கோவிலும், வடக்கே நெல்லையப்பர் கோவிலும் என இரட்டைக் கோவில் அமைப்பைக் கொண்டுள்ளது. இரண்டையும் இணைக்கும் சங்கிலி மண்டபம் ஆகியவற்றுடன், பதினான்கு ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான கோவில். காந்திமதி அம்மனை தரிசித்த பின்னரே நெல்லையப்பரை தரிசிக்க வேண்டும் என்பது மரபு. மூலஸ்தானத்தில் அன்னை காந்திமதி நின்ற திருக்கோலத்தில் அழகே உருவாக தரிசனம் தருகின்றாள். சிரசில் வைரமுடி அணிந்து, நெற்றியில் திருநீறும் குங்குமப் பொட்டும் துலங்க, மூக்குத்தி மிளிர, நவமணிகள் மார்பில் தவழ, கிளி அமர்ந்த தாமரை மொட்டு ஒன்றை கையில் ஏந்தி, திருவடிகளில் சிலம்பணிந்து திருமணத்திற்கு காத்திருக்கும் புதுப்பெண் போல தரிசனம் தருகின்றாள். அன்னை எழுந்தருளியிருக்கும் கோவிலின் கோபுர வாசல் வழியாக வந்தால் அழகிய ஊஞ்சல் மண்டபத்தைக் காணலாம். 96 தூண்கள் தாங்கி நிற்கின்றன. இங்கே ஊஞ்சல் உற்சவங்கள், ஐப்பசி திருக்கல்யாண உற்சவம், லட்சதீப திருவிழா ஆகியன சிறப்புற நடக்கின்றன. இதன் வடக்கே ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. ஊஞ்சல் மண்டபத்தின் வலப்பக்கம் பொற்றாமரைக் குளத்தைக் காணலாம். பொன்னாலான தாமரை இதில் பூத்ததால் பொற்றாமரைக் குளம் எனப் பெயர் பெற்றது. ஸ்வர்ண புஷ்கரிணி, ஹேம புஷ்கரிணி என்றெல்லாம் பெயர்கள் உண்டு. குளத்தின் வாயு மூலையில் சக்ர தீர்த்தமும், தென் புறமாக அக்னி தீர்த்தமும், அந்தர்வாகினியாக கம்பாநதியும் உள்ளன. வடபுறமாக இருக்கும் கிணற்றை லட்சுமி தீர்த்தம் என்பார்கள். இதில் அனேக ரிஷிகள் நீராடியுள்ளனர். அம்மன் சந்நிதியையும் சுவாமி சந்நிதியையும் இணைக்கும் அழகிய சங்கிலி மண்டபம் ஒரு அற்புதமான படைப்பு. இதன் தூண்களில் காணப்படும் சிற்பங்கள் மிகவும் அழகானவை. பீமனைப் பிடித்துவிட்டதை வெற்றிப் பெருமிதமாகக் காண்பிக்கும் புருஷா மிருகத்தின் முகமும், அதன் பிடியிலிருந்து விடுபட்டு யாக சாலைக்குள் கால் வைத்த மகிழ்ச்சியைக் காட்டும் பீமனின் முகமும் தத்ரூபமாக வடித்துள்ளார் சிற்பி. மண்டபத்தின் வலப்புறம் நந்தவனம் உள்ளது. இடப்புறமாக வசந்த மண்டபம் உள்ளது. சங்கிலி மண்டபம் முடியும் இடத்தில் விநாயகப் பெருமான் எழுந்தருளி ஆசி வழங்குகிறார். அருகே யானைக் கொட்டாரம் உள்ளது. காந்திமதி அம்மன் கோவிலின் இடப்பக்கத்தில் சுவாமி கோவில் கொண்டுள்ளார். மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் சுவாமி நெல்லையப்பர். சுயம்பு மூர்த்தம். உயரமான பாணம் கொண்ட அழகிய திருமேனி. ஐந்து தலை நாகம் ஆபரணமாக அலங்கரித்துள்ளது. அகஸ்திய மாமுனிக்கு கல்யாணக் கோலம் காட்டியருளியவர். ம்ருத்யுஞ்சய மூர்த்தியாக வணங்கப்படுகிறவர். நெல்வேலிநாதர், சால்வடிவீஸ்வரர், சால்வடிநாதர் என்ற திருநாமங்களும் உண்டு. சால் அல்லது சாலி என்ற சொற்களுக்கு வேலி என்று பொருள். வெளியே உள்ள பள்ளத்தில் ஆதிலிங்கம் எனப்படும் வேணுவனநாதர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். கோடரியால் வெட்டுண்டு புண்பட்ட வேய்முத்தநாதர். தலைப்புண்ணை ஆற்ற மருந்துத் தைலம் காய்ச்சி பூசுகின்றனர். இடப மண்டபத்து மாக்காளை எனப்படும் நந்தியம்பெருமானின் பிரம்மாண்டமான தோற்றம் பிரம்மிக்க வைக்கின்றது. கடல் சிப்பி, சுண்ணாம்பு இவற்றால் உருவான மாக்காளை, நாக்கை சுழற்றி லாவகமாக சப்புக் கொட்டிக்கொண்டு இருக்கின்றது. இரண்டு பின்னங்கால்களின் இடையே வாலைக் கொடுத்து வலப்பக்கமாக வெளியில் வாங்கியுள்ளது. பிளவுபட்ட குளம்புகள் அழகாகத் தெரிகின்றன. இதைத் தாண்டிப் போனால் வரும் மணி மண்டபத்தில் உள்ள இசைத் தூண்களில், நாணயம் ஒன்றை வைத்துத் தட்டினால் ஒவ்வொரு விதமான இனிய சத்தத்தைக் கேட்கலாம். வடபுறத்தில் பள்ளிகொண்ட பரந்தாமன் வானத்தைப் பார்த்தபடி சயனித்துள்ளார். தலைக்கு மரக்கால் வைத்துள்ளார். ஏழடி நீளமுள்ள அழகிய திருமேனி. நெல்லை கோவிந்தன் என்று போற்றுகிறார்கள். மார்பிலே மகாலட்சுமி குடிகொண்டுள்ளார். புடைப்புச் சிற்பங்களாக யோகீஸ்வரர், கங்காளநாதர், ஜ்வரஹரேஸ்வரர், பொல்லாப் பிள்ளையார், ஆறுமுகப் பெருமான், குபேரலிங்கம், சஹஸ்ரலிங்கம் என அனேக தெய்வத் திருவுருவங்களைக் காணலாம். பஞ்ச சபைகளுள் முக்கியமான தாமிர சபையில் ஆறடி உயர அழகிய திருமேனியுடன் ஆனந்தக் கூத்தாடும் நடராஜப் பெருமானின் திருவுருவம் நம் கண்களை விட்டு அகலாது. ஐந்தடி உயர சிவகாமியம்மை அருகே எழுந்தருளியுள்ளார். இருபுறமும் காணப்படும் யாளித் தூண்களைத் தாண்டித் தெரியும் சந்நிதியில் சந்தன சபாபதி எழுந்தருளியுள்ளார். முகம்மது அலியின் தளபதியான அன்வர்டிகான் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்துள்ளார். அவரது மனைவியின் தீராத வயிற்றுவலியை குணப்படுத்திய இவ்விறைவனுக்கு சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து நன்றியைச் செலுத்தினார் எனக் கூறப்படுகிறது. இந்த லிங்கத்திற்கு அனவரதநாதர் என்று பெயர். மேற்கு வெளிப்பிரகாரத்தில் காணப்படும் ஆறுமுகனின் திருவுருவம் மீண்டும் மீண்டும் நம்மை தரிசிக்கத் தூண்டும் அழகைக் கொண்டுள்ளது. மயில் வாகனத்தின் மீது வேல் தாங்கிய ஆறுமுகன். சுவாமி பிரகாரத் தெற்குச் சுற்றிலுள்ள பொல்லாப் பிள்ளையார் மிகுந்த வரப்பிரசாதி. இங்கு ஒன்பது தொண்டுகள் உள்ளன. குறுகலான வழியைத் தொண்டு என்பார்கள். இதற்குள் நுழைந்து இவரை வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும். பிறந்த குழந்தையைத் தொண்டிக்குள் கொடுத்து வாங்கும் சம்பிரதாயம் உள்ளது. இப்படிச் செய்வதால் குழந்தைக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பார்கள். 440 டன் எடைகொண்ட தேர் இத்தலத்தில் உள்ளது. 32 தீர்த்தங்களைக் கொண்ட ஸ்தலம். அகஸ்தியருக்கு திருமணக் கோலம் காண்பித்த ஸ்தலம். (கோவிலின் இடது பக்க மூலையில் சங்கிலி பூதத்தாரைத் தரிசிக்கலாம் - இவரிடம் அனுமதி பெற்று பின்னர் தேரோட்டம் தொடங்கப்படுவதாகக் கூறுவர்) தேவாரத் திருத்தலம் - சக்தி பீடங்களுள் ஒன்று (காந்தி பீடம்) - பஞ்ச சபைகளுள் ஒன்று (தாமிர சபை) - (முனி தாண்டவம்)
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.