அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோவில் (சங்கரன் கோவில்)
God Name : மூலவர்: ஸ்ரீ சங்கரலிங்க ஸ்வாமி் சிறப்பு மூர்த்தம்: ஸ்ரீ சங்கர நாராயணர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
பார்வதி தேவி, சிவபெருமான் தமது திருமேனியில் விஷ்ணுமூர்த்தியை சரிபாதி பொருத்திக் கொண்ட சங்கரநாராயண வடிவத்தைக் காண ஆசை கொண்டு, அந்த தரிசனம் கிடைக்க வேண்டி பூலோகம் வந்து இங்குள்ள புன்னைவனத்தில் (கரி வலம் வந்த நல்லூர்) கடுந்தவம் மேற்கொண்டார்.
அவரது தவத்தினால் மகிழ்ந்த சிவபெருமான், ஒரு ஆடி மாதத்தில் உத்ரட்டாதியும் பௌர்ணமியும் கூடிய நள்ளிரவு வேளையில் ஒரு பாதி சங்கரனாகவும் ஒரு பாதி நாராயணனாகவும் காட்சி தந்தார்.
சிவபெருமான் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்ற தர்க்கத்தில் நாகங்களுக்குள் தர்க்கம் முற்றி சண்டையாக மாறியது. வியாழ பகவானின் யோசனைப்படி, உமாதேவி தவமிருந்த இத்தலத்திற்கு வந்த நாகங்கள், இரண்டு மூர்த்திகளும் ஒன்றான வடிவம் கொண்டிருப்பதைக் கண்டதும், இருவரும் ஒருவரே என அறிந்து கொண்டு சண்டையிடுவதை நிறுத்தினர். இந்த நாகங்கள் சுனை ஒன்றை உருவாக்கி இங்கிருந்து கொண்டு இவ்விறைவனை வழிபட்டனர் என ஸ்தல வரலாறு.
முன் ஜென்மத்தில் கந்தர்வனாக இருந்த மணிக்ரீவன் என்பவன் இந்த ஜென்மத்தில் பூலோகத்தில் பிறந்து புன்னை வனத்து காவற்காரனாக இருந்தான். காவற்பறையன் என்பர். ஒரு நாள் தோட்டத்திலிருந்த மேடான பகுதியை சமன் செய்ய மண்வெட்டி கொண்டு வெட்டிய பொழுது, பாம்பின் வால் வெட்டுண்டு இருப்பதையும் அருகே சிவலிங்கம் ஒன்று இருப்பதையும் கண்டு, இந்த செய்தியை மன்னனுக்கு தெரிவிக்க ஓடோடி வந்தான்.
மன்னன் வந்து கொண்டிருந்த வழியில் அவன் ஏறி வந்த யானை, மேற்கொண்டு செல்ல மறுத்து கொம்பினால் தரையை குத்திக் கொண்டு கீழே விழுந்து புரண்டது. செய்வதறியாது பயணத்தை நிறுத்திய மன்னனிடம், காவற்பறையன் ஓடி வந்து தான் கண்டதை தெரிவித்தான்.
அறுபட்ட வாலுடன் பாம்பையும் புற்றிடங் கொண்ட சிவலிங்கத்தையும் கண்ட மன்னன், அந்த லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து கோவில் ஒன்றையும் ஸ்தாபித்தான். அந்த லிங்கமே ஸ்ரீ சங்கரலிங்க ஸ்வாமி. புற்றிலிருந்து வெளிப்பட்டதால் வன்மீகநாதர் என்பார்கள்.
சங்கரலிங்கத்தை உலகறியச் செய்த காவற்பறையனுக்கு ஊரின் தெற்கே ஒரு கோவில் உள்ளது. (காப்பறையன் தெரு) யானை தந்தத்தால் பூமியை தோண்டிய இடம் பெருங்கோட்டூர்.
பொதிகை மலைச் சாரலிலுள்ள பஞ்சபூத ஸ்தலங்களுள் நிலம் (பிருத்வி ஸ்தலம்).
ஆடித்தபசு விழா பிரசித்தமானது. பகல் 12 மணிக்கு தங்க சப்பரத்தில் கோமதி அம்மன் புறப்பட்டு தபஸ் மண்டபம் வந்து இறங்குவார். மாலை 4.15 மணிக்கு ஸ்வாமி காட்சி கொடுக்கும் பந்தலுக்கு வருகிறார். 6.15 மணிக்கு அம்பாள் ஸ்வாமி இருக்கும் பந்தலுக்கு வந்து, ஸ்வாமியை மூன்று முறை வலம் வருவார். பின்னர் மாலை மாற்றிக் கொள்ளுதல், ஊஞ்சல் உற்சவம் ஆகியன நடைபெறும்.
சங்கரனார் கோவிலின் தேர் மிகப் பெரியது. சித்திரை திருவிழாவின் 9ம் நாள் ஸ்வாமி தேரும், ஆடிதபசு திருவிழாவின் 9ம் நாள் அம்பாள் தேரும் புறப்படும்.
கோமதி அம்மனுக்கு மாவிளக்கு பிரார்த்தனை விசேஷம் என்பார்கள். செவ்வரளி மலர்களைப் பரப்பி இரட்டை தீபம் ஏற்றும் பிரார்த்தனையும் செய்கின்றனர்.
சுப்பிரமணிய பாரதியார் கோமதி அம்மனைப் போற்றி பாடியுள்ளார் என குறிப்பொன்று கூறுகிறது.
மூலவர்: ஸ்ரீ சங்கரலிங்க ஸ்வாமி. சிறப்பு மூர்த்தம்: ஸ்ரீ சங்கர நாராயணர். அம்பாள்: ஸ்ரீ கோமதி அம்மன்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் மூலவரான ஸ்ரீ சங்கரலிங்க ஸ்வாமி. சுயம்பு லிங்க மூர்த்தம். சிறிய திருமேனி என்றாலும் ஒளி வீசும் அழகிய லிங்கம். இவருக்கு வன்மீகநாதர் என்ற பெயரும் உண்டு.
புரட்டாசி மற்றும் பங்குனி (மார்ச் 21, 22, 23 மற்றும் செப்டம்பர் 21, 22, 23) ஆகிய தினங்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் ஸ்வாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. ஸ்வாமி சந்நிதியிலுள்ள அழகிய வெள்ளிப் பேழையிலுள்ள ஸ்படிக லிங்கத்திற்கே தினமும் அபிஷேகம் செய்கின்றனர்.
பிரகார வலச்சுற்றில் சுயம்பிரபை தேவியுடன் அதிகார நந்தி, சர்ப்ப விநாயகர், பைரவர், வள்ளி - தெய்வயானை தேவியர்களுடன் முருகப் பெருமான், காசி விஸ்வநாதர், காந்தாரி மற்றும் சப்த மாதர்கள், நாகராஜனின் புற்றுக் கோவில் ஆகியன தரிசிக்கலாம்.
சுயம்பு லிங்கமான சங்கரலிங்க நாயனார் அருகே ஸ்ரீ மனோண்மணி தேவி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
அன்னை கோமதி அம்மன் தனிக் கோவில் கொண்டுள்ளார். அழகே உருவான திருவுருவம். மிகுந்த வரப்பிரசாதி. ஆவுடையம்மாள் என்ற பெயரும் உண்டு.
சந்நிதி முன்பாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சக்கரம் சாந்நித்யம் மிக்கது. இதை பதிக்கப்பட்ட பள்ளத்தில் அமர்ந்து ஸ்லோகங்கள் கூறி அன்னையை வழிபடுவோர்க்கு மகப்பேறு நிச்சயம் எனக் கூறுகின்றனர்.
கோமதி அம்மன் சந்நிதிக்கு முன்பாக உள்ள சுனை தேவர்களால் உண்டாக்கப்பட்டது என்பர்.
இரண்டு பிரிவுகளாக உள்ள ஆலயத்தில் பெரிய பிரிவில் ஸ்வாமி கோவிலும், மற்ற பிரிவில் அன்னையின் கோவிலும் உள்ளன. இந்த இரண்டிற்குமிடையே சங்கரநாராயணர் கோவில் கொண்டுள்ளார்.
சங்கரநாராயணர் திருமேனியின் வலப்புறமாக கங்கையுடன் ஜடாமகுடம், திருநீறைத் தரித்த மேனி, மழு, பாம்பாரணம், பாம்புக்கழல் ஆகியன கொண்டும், அரையில் புலித்தோல் அணிந்தும், கொன்றை மாலை அணிந்து கொண்டும் சிவபாகமாக அற்புதமாக தரிசனம் தருகின்றார்.
திருமேனியின் இடப்புறமாக ரத்ன கிரீடம், குண்டலங்கள், கஸ்தூரி பொட்டு, பீதாம்பரம், பொற் பூணல், துளசி ஆகியன கொண்டும், சக்கரத்தை ஏந்தியும் நாராயண பாகமாக அற்புதமாக தரிசனம் தருகின்றார்.
இந்த சந்நிதியிலுள்ள வசனக்குழிப் பள்ளத்தில் அமர்ந்து பூஜிப்பவர்கள் பேய் பிசாசு தொல்லை இல்லாமல் இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.