அருள்மிகு காசிபநாதர் திருக்கோயில், அம்பாசமுத்திரம்
God Name : ஸ்ரீ காசிபநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
பொதிகை மலைச் சாரலில் தவம் மேற்கொண்டிருந்த அகஸ்தியரைக் காண விழைந்த கன்னடிய அந்தணர் ஒருவர், தனது ஐஸ்வர்யங்களை பொற்காசுகளாக மாற்றி, ஒரு பிரம்புக் குழலுக்குள் வைத்து, அதை இவ்வாலயத்து சிவாச்சார்யாரிடம் ஒப்படைத்துவிட்டு, தாம் க்ஷேத்ராடனம் போவதாகவும், திரும்பி வந்து கேட்கும் வரை அதை பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
அந்த பிரம்புக் குழலுக்குள் பொற்காசுகள் இருப்பதை அறிந்து கொண்ட சிவாச்சார்யார், அதன் மீது மோகம் கொண்டு, அதை தாமே அனுபவிக்க திட்டமிட்டார். அதன்படி அந்த பொற்காசுகளை செலவழிக்கத் தொடங்கினார்.
க்ஷேத்ராடனம் முடிந்து, அகஸ்தியரையும் தரிசித்துவிட்டு திரும்பி வந்து சிவாச்சார்யாரிடம் தாம் கொடுத்திருந்த பிரம்புக் குழலைத் திரும்ப தருமாறு கேட்டார் கன்னடிய அந்தணர். 'உன்னிடமிருந்து எந்த பொருளையும் நான் வாங்கவில்லை. நீ யார் என்றே எனக்கு தெரியாது' என்று பொய்யுரைத்தார் சிவாச்சார்யார். ஏமாற்றமும் மன வருத்தமும் கொண்ட கன்னடியர், தமக்கு உதவுமாறு நடுவர் மன்றத்திடம் முறையிட்டார்.
நடுவர் மன்றத்திற்கு வந்த சிவாச்சார்யார், 'நான் அன்றாடம் வழிபடும் இறைவன் மீது ஆணையாக, நான் சொல்வதே உண்மை' என்றார். மறுநாள் காசிநாதன் ஆலயத்திற்கு வருமாறு இருவருக்கும் கட்டளை பிறப்பித்தனர் நடுவர் மன்றத்தினர்.
தனக்கு கை வந்த கலையான ஆபிசார பிரயோகம் செய்து கலாகர்ஷணம் நடத்தி விட்டால், சிவலிங்கத் திருமேனியின் அருட்சக்தியை ஒரு கும்பத்திற்கு மாற்றி, அந்த கும்பத்தை இவ்வாலயத்திலுள்ள புளியமரத்தடியில் புதைத்து விடலாம் என்று திட்டம் போட்ட சிவாச்சார்யார், அதன்படி செய்தும் விட்டார். ஆகவே சக்தி ஏதுமில்லாத கல்சிலைதான் கருவறையில் உள்ளது. தன்னை ஒன்றும் செய்து விடாது என்று கற்பனை செய்திருந்தார் சிவாச்சார்யார்.
கன்னடிய அந்தணரின் கனவில் தோன்றிய சிவபெருமான் சிவாச்சார்யாரின் வஞ்சக திட்டத்தைப் பற்றி கூறி விட்டார். மறுநாள் இவ்வாலயத்தில், நடுவர் மன்றத்தினர் முன்னிலையில், தாம் காசிநாதனை கட்டிக்கொண்டு பிரமாணம் செய்யத் தயார் என சிவாச்சார்யர் கூறியதும், 'கட்டிக்கொள்வது பாவம். ஆகையால் இவர் புளியமரத்தைக் கட்டிக் கொண்டே பிரமாணம் செய்யட்டும்' என்று கூறினார் கன்னடிய அந்தணர். நடுவர் மன்றத்தினருக்கும் அது ஏற்புடையதாக இருக்கவே, அவ்வாறே செய்ய உத்தரவிட்டனர்.
'புளியமரம்தானே? என்னை என்ன செய்து விடும்? நான் தினமும் பூஜிக்கும் இறைவன் என்னை கைவிட மாட்டான்' என்ற எண்ணத்தில் சிவாச்சார்யார் துணிந்து பொய் சத்தியம் செய்து சூளுரைக்க முனைந்த போது, புளியமரம் ஜோதி வடிவாக மாறி அதிலிருந்து தோன்றிய தீப்பிழம்பு சிவாச்சார்யாரை எரித்தது. இதனால் இவ்விறைவனை எரிச்சு கட்டி ஸ்வாமி என அழைக்கின்றனர்.
இந்த நிகழ்வைக் கண்ட கன்னடிய அந்தணன், சிவாச்சார்யார் மீது இரக்கம் கொண்டு, அவரை உயிரோடு மீட்டுத் தருமாறு இறைவனிடம் வேண்டினான். எரிந்த சிவாச்சார்யாரை உயிர்ப்பித்து தந்ததால் ஸ்வாமிக்கு ஆட்கொண்டார் என்ற பெயர் வந்தது.
சிவாச்சார்யாரிடமிருந்து திரும்பப் பெற்ற பொற்காசுகளில் ஒரு பகுதியை அவருக்கே தந்துவிட்டு, தனது க்ஷேத்ராடன பயணத்தைத் தொடர்ந்தான் கன்னடிய அந்தணன், என ஸ்தல வரலாறு.
காஸ்யப முனிவர்க்கு இறைவன் காட்சி தந்த ஸ்தலம்.
மூலவர்: ஸ்ரீ காசிபநாதர், அம்பாள்: மரகதாம்பிகை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ காசி விஸ்வநாதர். சுயம்பு திருமேனி. சற்றே சாய்ந்த நிலையில் காணப்படும் அழகிய லிங்க மூர்த்தம்.
திருப்போத்துடைய மஹாதேவர் என்றும் எருத்தாளுடையார் என்றும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. போத்து என்றால் காளை அல்லது எருது. அதை வாகனமாகக் கொண்டவர் என்பதால் இந்தப் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
காஸ்யப முனிவர் வெண்மணலைப் பிடித்து சிவலிங்கத் திருமேனி அமைத்ததாலும், அவரே வழிபட்டு பூஜித்ததாலும் இவ்விறைவன் காசிநாதர் என்ற பெயரைக் கொண்டார்.
தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் மரகதாம்பிகை எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். அன்னையை வரப்பிரசாதி என்பார்கள்.
அனுக்ஞை விநாயகர், நந்தியம் பெருமான், பூரணா - புஷ்களா சமேத சாஸ்தா, சிவகாமி உடனாய புனுகு சபாபதி, உமா மகேஸ்வரர், ஜ்வரஹரேஸ்வரர், சூரிய - சந்திரர்கள், கன்னி விநாயகர், சப்த மாதர்கள், தட்சிணாமூர்த்தி, அகஸ்தியர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
வெளிப் பிரகாரத்தில் விசாலாட்சி உடனாய விஸ்வநாதர், மீனாட்சி - சொக்கர், வள்ளி - தெய்வயானை உடனாய முருகப் பெருமான், உண்ணாமலை உடனாய அண்ணாமலையார் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர்.
வலச்சுற்றிலுள்ள எரிச்சாண்டார் சந்நிதி சாந்நித்யம் கொண்டது. இதில் எரிச்சு கட்டிஸ்வாமி என்கிற எரித்தாட் கொண்டார் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். இந்த சம்பவத்தோடு இணைந்த மரமும் சிவாச்சார்யாரின் திருவுருவமும் பிரகாரத்தில் உள்ளன. பிரம்மாண்டமான முரசுக்கட்டில் கொடிமரம் அருகே காணப்படுகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.