அருள்மிகு தாணுமாலய ஸ்வாமி திருக்கோவில் (சுசீந்திரம்)
God Name : மூலவர்: தாணுமாலய ஸ்வாமி மற்றும் ஆஞ்சநேயர்
திருக்கழுக்குன்றம் கோவில்
தருமபுரி
Call : +91-
அத்ரி முனிவர் வீட்டில் இல்லாத சமயத்தில் அவரது வீட்டிற்கு வந்த மும்மூர்த்திகள், அவரது மனைவியான அநுசுயா தேவியின் கற்பை பரிசோதிக்க எண்ணி, நிர்வாணமாக வந்து தங்களுக்கு உணவு பரிமாற வேண்டும் எனக் கூறினார்கள். தனது பதிவிரதா சக்தியினால், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளை குழந்தைகளாக்கி, சோறூட்டி, தொட்டிலிலிட்டு தாலாட்டி தூங்க செய்து விட்டாள் அநுசுயா தேவி. நாரதர் மூலமாக விஷயமறிந்த சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூன்று தேவியர்களும் அநுசுயாவின் ஆஸ்ரமம் வந்து, தத்தம் கணவன்மார்களுக்கு சுயரூபம் தர வேண்டி நின்றனர். அவர்களது வேண்டுகோளுக்கிணங்க அநுசுயாவும் மும்மூர்த்திகளை சுயரூபம் அடையச் செய்தாள் என்பது புராண வரலாறு.
அநுசுயாவின் வேண்டுகோளுக்கிணங்க தாணு (சிவன்), மால் (விஷ்ணு), அயன் (பிரம்மா) (தாணுமாலயன்) ஆகிய மும்மூர்த்திகளும் இங்கே கோவில் கொண்டதாக ஸ்தல வரலாறு.
அகலிகையை கள்ளத்தனமாக புணர்ந்ததால், உடல் முழுவதும் கண்கள் பெற சாபம் கொண்ட இந்திரன் இந்த சாபத்தைப் போக்கிக் கொள்ள இங்கு கடுந்தவம் மேற்கொண்டு இறைவனருளால் சாபம் நீங்கப் பெற்றான். இதனால் தினமும் அர்த்தஜாம பூஜையை இங்கு இந்திரனே நடத்துவதாக ஐதீகம். இதன் பொருட்டு இங்கு அர்த்த ஜாம பூஜை இல்லை. மாலை வேளைகளில் பூஜை செய்யும் அர்ச்சகர் மறுநாள் காலையில் நடையை திறக்க மாட்டார். வேறொருவர் திறந்தாலும் அகம் கண்டதை புறம் கூற மாட்டேன் என்று சங்கல்பம் செய்து கொண்டு பூஜையை ஆரம்பிப்பார். அப்படியொரு சம்பிரதாயம் இங்கு நிலவுகிறது.
இவ்வாலயத்தில் தாமிர பாத்திரம் ஒன்றில் கொதிக்கும் நெய் வைத்திருப்பார்களாம். குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அதற்குள் கைவிரல்களை மூன்று முறை விடவேண்டும். மூன்று தினங்கள் கழித்து கைவிரல்கள் பாதிப்பு அடையவில்லை என்றால் அவன் நிரபராதி எனக் கருதுவார்களாம். கைமுக்கு எனும் இந்த விசித்திர பழக்கத்தை மகாராஜா ஸ்வாதித் திருநாள் நிறுத்தி வைத்தாராம்.
சுசீ என்றால் தூய்மை அடைதல் எனப் பொருள். இந்திரன் தூய்மை அடைந்ததால் சுசீந்திரம் எனப் பெயர் கொண்டதாகக் கூறுவர். இங்குள்ள மூர்த்தியே கன்னியாகுமரி அம்மனை மணக்கவிருந்ததாகவும், விவாகம் தடைப்பட்டு விட்டதாகவும் ஸ்தல வரலாறு தெரிவிக்கின்றது.
மூலவர்: தாணுமாலய ஸ்வாமி. சிறப்பு மூர்த்தம்: ஆஞ்சநேயர். அம்பாள்: அறம் வளர்த்த நாயகி.
மூலஸ்தானத்தில் தாணுமாலய ஸ்வாமி எழுந்தருளியுள்ளார். இரண்டரை அடி உயர அழகிய லிங்கத் திருமேனியுடன் காணப்படுகிறார். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் ஸ்வரூபம். தேஜோ மயத் திருமேனி. அபிஷேகக் காலங்களைத் தவிர மற்ற நேரங்களில் கவசத்தால் மூடப்பட்டுள்ளது. 16 சந்திர கலைகளுடன் படம் விரித்தாடும் நாகத்தை தங்க கவசமாக அணிவித்துள்ளனர். இருபத்தியேழு நட்சத்திரங்களாக மின்னும் வகையில் ஏற்றப்பட்ட தீப ஒளியில் மேலும் பிரகாசிக்கின்றார்.
மஹாதேவர், சடையார், உடையார் எம்பெருமான் ஆகிய திருநாமங்களையும் கொண்டுள்ளார். இவருக்கு அபிஷேகம் செய்த எண்ணெய் பூமிக்குள் இறங்கி கன்னியாகுமரி தீர்த்தத்துடன் கலந்து விடுவதாக ஐதீகம். வலச்சுற்றில் துர்க்கையையும், சங்கரநாராயணரையும் தரிசிக்கலாம்.
அமர புஜங்கப் பெருமாள் பள்ளி கொண்டுள்ள சந்நிதியும் உள்ளது.
செண்பகராமன் மண்டபத்தின் வடக்கேயுள்ள சந்நிதியில் அம்பாள் அறம் வளர்த்த அம்மை எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள்.
பிரகார வலச்சுற்றில் சுகாசனத்தில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி சந்நிதி கொண்டுள்ளார். நீலகண்ட விநாயகர், கங்காளநாதர், கைலாஸநாதர், சாஸ்தா ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். வசந்த மண்டபமும் இருக்கின்றது.
ராமசாமி கோவிலில் சீதா தேவியும், ஸ்ரீராமனும் சுகாசன நிலையில் உள்ளனர். லக்ஷ்மணரும், ஆஞ்சநேயரும் வாசலின் இருபுறமும் உள்ளனர். வடக்கு பிரகாரத்தில் சுப்ரமண்ய ஸ்வாமியும், பைரவரும் எழுந்தருளியுள்ளனர்.
கால பைரவர் சந்நிதிக்கு எதிரே இசைத் தூண்கள் காணப்படுகின்றன. வடக்குத் தூண்கள் ஒவ்வொன்றிலும் 24 சிறிய தூண்களும், தெற்கு தூண்களில் 35 சிறிய தூண்களும் உள்ளன. இவற்றை தட்டினால் சப்தஸ்வர நாதங்கள் கேட்கும்.
அலங்கார மண்டபத்தின் கிழக்கே சித்திர சபையைக் காணலாம். ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியும், எதிரே காளியும், இவர்களின் நடனத்தை காணும் பதஞ்சலியும் - வியாக்ரபாதரும் சிறந்த சிற்பங்களாக தூணில் இடம் பெற்றுள்ளனர். பீமன், அர்ஜீணன், அஞ்சலி ஹஸ்தத்துடன் ஹனுமன் ஆகிய சிற்பங்களும் காணலாம். மேடைப் பகுதியின் கீழ் வல்லப கணபதி எழுந்தருளியுள்ளார்.
ஊஞ்சல் மண்டபத்தின் பின்னால் மஹாநந்தி தாணுமாலய ஸ்வாமியை நோக்கியவாறு காணப்படுகிறது. 21 அடி நீளம், 9 அடி அகலம், 12.5 அடி உயரம் கொண்டுள்ள நந்தி சுண்ணாம்பு - செங்கல் கொண்டு உருவாக்கப்பட்டது என்பர். இதன் பக்கத்தில் கொன்றையடிநாதர் சந்நிதி உள்ளது. மும்மூர்த்திகளும் இங்கு லிங்க வடிவில் இருப்பதாக ஐதீகம். லிங்கத்தை மூடியிருக்கும் கவசம் மூன்று முகங்களுடன் இருக்கின்றது. அத்ரி முனிவர் மற்றும் அநுசுயா தேவி ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க இங்கு எழுந்தருளியிருப்பதாக ஐதீகம்.
அடுத்து கருடாழ்வார் சந்நிதி கொண்டுள்ளார். ஆறடி உயர கருடாழ்வாரின் சிலை அஞ்சலி ஹஸ்தத்துடன் தெற்கு திசை விஷ்ணு சந்நிதியை நோக்கியவாறு உள்ளது. ஏழரை அடி உயர திருமேனியுடன் நின்ற கோலத்தில் மூலவராக விஷ்ணு. ஸ்ரீ தேவி - பூதேவி உடனாய உற்சவ மூர்த்தியையும் காணலாம்.
இதைத் தாண்டியதும் செண்பகராமன் மண்டபம் உள்ளது. ஆலயத்திலேயே மிகப் பெரிய மண்டபம்.
கணபதியின் பெண்ணுருவமான விக்னேஸ்வரி, கணபதியின் இடப்பக்கத்தில் பார்வதி ஆகிய சிற்பங்கள் வேறு எங்கும் காண முடியாதது.
சித்திரசபையை ஒட்டியுள்ள பிரகாரக் கோவிலில் இவ்வாலயத்தின் சிறப்பு மூர்த்தமான ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். வழுவழுப்பான கல்லினால் உருவாக்கப்பட்ட திருமேனி. 22 அடி உயரம் கொண்ட அழகிய திருவுருவம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.