அருள்மிகு ராமநாதஸ்வாமி திருக்கோவில் (ராமேஸ்வரம்)
God Name : ஸ்ரீ ராமநாத சுவாமி
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
சீதையை மீட்க ஸ்ரீ ராமர் நடத்திய போரில் கொல்லப்பட்ட ராவணன் புலஸ்திய முனிவரின் பேரன். சிவ பக்தன். பிராமணன்.
அவனைக் கொன்றதால் ராமனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. இதிலிருந்து விடுபட பிராயச்சித்தமாக லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டுமென முனிவர்கள் கூறினார்கள். இதனால் ராவண வதம் முடித்ததும் இலங்கையிலிருந்து இராமேஸ்வரம் வந்தார் ஸ்ரீ ராமர். இதன் பொருட்டு, கைலாயத்திலிருந்து ஒரு லிங்கம் கொண்டு வருமாறு ஹனுமனை அனுப்பினார் ராமர்.
கைலாயம் சென்ற ஹனுமன் தாம் நினைத்தபடி லிங்கம் கிடைக்கவில்லை என தவம் செய்யலானார். இங்கே ராமேஸ்வரத்தில் லிங்கப் பிரதிஷ்டைக்கு குறித்த முகூர்த்த வேளை நெருங்கி விட்டதால், குறித்த நேரத்தில் பூஜை நடக்க வேண்டுமே என்ற ராமரின் கவலையறிந்து, அவரது தர்ம பத்னியான சீதாதேவி தனது கரங்களால் மணலைக் கொண்டு லிங்கம் ஒன்றை உருவாக்கினாள்.
சீதை உருவாக்கிய லிங்கத்தை, சுக்கிலபட்சம் பத்தாவது நாள் புதன்கிழமை, சந்திரன் ஹஸ்தத்திலும், சூரியன் ரிஷப ராசியில் இருக்கும்போது, ஸ்ரீ ராமர் - சீதை இருவருமாக சேர்ந்து பிரதிஷ்டை செய்தனர்.
பூஜை தொடங்கும் முன் ஹனுமன் லிங்கத்தோடு வந்து சேர்ந்தார். ஏற்கனவே பிரதிஷ்டையான லிங்கத்தை தம் வாலினால் கட்டி இழுத்து பெயர்க்க முயன்றார். அவரால் முடியவில்லை. ஹனுமன் படும் பாட்டை பார்த்து அவர் மீது பரிதாபம் கொண்ட ராமர், ஹனுமன் கொண்டு வந்த லிங்கத்தையும் பக்கத்திலேயே பிரதிஷ்டை செய்து விட்டார். இதற்கே முதல் பூஜை என்றும் கூறி விட்டார். அதுவே விஸ்வ லிங்கம். வால் சுற்றி இழுக்க முற்பட்டதால் ஏற்பட்ட வடு மூலவர் மீது பதிந்துள்ளது.
லிங்கத்தை இழுக்க முடியாமல் ஹனுமன் வீழ்ந்த இடம் ஹனுமந்த குண்டம் என அழைக்கப்படுகிறது. இதில் நீராடுபவர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடிய பலனைப் பெறுவார்கள் என ராமர் ஆசிர்வதித்தார்.
மூலவரான சிவலிங்க அமைப்பு செக்கு போலத் தோன்றுவதால் செக்காட்டும் தொழில் இவ்வூரில் இல்லை. மண் கொண்டு லிங்கத்தை உருவாக்கியதால் மண்ணெடுத்து சூளை போடுவதுமில்லை, மண்பாண்டங்கள் செய்வதுமில்லை. இத்தலத்திற்கு என ஸ்தல விருட்சமும் இல்லை. மண்ணை ஏர் கொண்டு உழுவதுமில்லை.
வடக்கே பத்ரிநாதம், கிழக்கே ஜெகந்நாதம், மேற்கே துவாரகானாதம் மற்றும் தெற்கே ராமநாதம் - ஆகிய நான்கு புண்ணிய க்ஷேத்திரங்களுக்கும் யாத்ரிகர்கள் அதிகமாக வந்து வழிபடுகின்றனர்.
இந்தக் கோவில் சேதுபதிகளுடைய ஜமீன் சமஸ்தானத்தைச் சேர்ந்தது. ராமபிரான் கட்டிய சேதுவை (பாலம்) காவல் புரிய ராமபிரானால் நியமிக்கப்பட்ட மறவர் தலைவன் வழியினரே சேதுபதிகள் என்பர்.
மதுரையை ஆண்ட புண்ணியநிதி எனும் அரசன் க்ஷேத்ராடனம் செய்து கொண்டே இத்தலத்திற்கு வந்து சேர்ந்தான். விஷ்ணு தரிசனம் வேண்டி பெரிய யாகம் ஒன்றை செய்தான். அவனை சோதிக்க எண்ணிய விஷ்ணுமூர்த்தி, லட்சுமியை ஒரு அனாதை சிறுமியாக அனுப்பி வைத்தார். குழந்தை பாக்கியம் இல்லாத அரசன். சிறுமியை அன்புடன் வளர்த்து வந்தான். அவள் வளர்ந்து திருமணப் பருவம் அடைந்த சமயத்தில் விஷ்ணு, ஒரு வயோதிக பிராமணனாக வந்து இளவரசியின் நந்தவனம் சென்று வம்பு செய்தார். சேடிகள் மூலமாக விஷயமறிந்த அரசன் கிழவரை சங்கிலியால் பிணைத்து இழுத்து வருமாறு கூறினான்.
அன்றிரவு அரசன் தூங்கும்போது கனவில் வந்த விஷ்ணு தானே கிழவனாக வந்திருப்பதாகவும் தனக்கு இளவரசியை மணம் முடித்துத் தர வேண்டுமென்றும் கூறுகிறார். மறு நாள் காலை தனது பெண்ணுடன் கோவிலுக்கு சென்று பார்த்தான் அரசன். அங்கு விஷ்ணு வடிவத்தில் சங்கிலியால் கட்டுண்ட கோலத்தில் காட்சி தந்தார். பின் அவளை மணந்து சேது மாதவர் என்ற பெயரில் இங்கேயே சேவார்த்திகளுக்கு சேவை சாதிக்கின்றார். லட்சுமிக்காக அன்பினால் கட்டுண்டதால், அதே கோலத்தில் தரிசனம் தருகிறார் என ஸ்தல வரலாறு.
ஜோதிர்லிங்கம்:
சிவலிங்கம் உருவாக்கப்படாமல் தானாகவே சுயம்புவாக தோன்றினால் அதை சுயம்பு லிங்கம் என்றும் ஜோதிர்லிங்கம் என்றும் கூறுவர்.
யார் உயர்ந்தவர் என்ற தர்க்கத்தில், சொற்போரில் ஆரம்பித்து விற்போராக மாறும் நிலையை வளர விடக்கூடாது என தீர்மானித்த சிவபெருமான் பல்லாயிரம் கோடி ஜ்வாலையுடன் பிரளய கால அக்னி போன்று ஜோதி ஸ்வரூபமாக அவர்களின் முன்பாக தோன்றினார். இந்த மூன்றாம் நபர் யார் எனக் கண்டுபிடிக்க, பிரம்மன் ஹம்ஸ வடிவில் மேலேயும், விஷ்ணு வராஹ வடிவத்தில் கீழேயும் சென்றனர்.
அடி - முடி காணாத அரியும் - அயனும், விடை காண வேண்டி, முன்பிருந்த இடம் வந்து, ஜோதிப் பிழம்பைத் துதித்தனர். அப்போது ஓம் எனும் பிரணவ நாதம் எழும்பியது. அந்த ஜோதி ஸ்வரூபமே அருணாசல மலை.
அது போன்று ஜோதி ஸ்வரூபங்களாக காட்சி தந்த ஸ்வரூபங்களே ஜோதிர் லிங்கங்கள் ஆகும்.
மூலவர்: ஸ்ரீ ராமநாத சுவாமி, அம்பாள்: ஸ்ரீ பர்வதவர்த்தினி.
ராமநாதர் சந்நிதியின் வடபுறமாக உள்ள சந்நிதியில் விசாலாட்சி உடனாய விஸ்வநாதரை தரிசிக்கலாம். அனுமன் கொண்டு வந்த லிங்கமே இந்த விஸ்வநாதர். விஸ்வலிங்கத்தை வழிபட்ட பிறகே ராமநாதரை வழிபடலாம் என யாத்ரீகர்களுக்கு ராமபிரான் கட்டளை பிறப்பித்துள்ளார். குப்தேச லிங்கம் இதற்குத் துணை லிங்கமாகும். பாஸ்கர ராயரால் ஸ்தாபிக்கப்பட்ட லவண லிங்கத்தையும் தரிசிக்கலாம்.
மூலஸ்தானத்தின் முகப்பு மண்டபத்தின் மேலே ஸ்ரீ ராமர் - சீதா தேவி - லட்சுமணன் ஆகியோரின் திருவுருவங்களும், அனுமன் லிங்கத்துடன் வருவதை தெரிவிக்கும் சுக்ரீவன் கைகட்டி, வாய்பொத்தி குனிந்து நிற்கும் தோற்றத்திலும், இரண்டு கைகளிலும் இரண்டு லிங்கங்களை ஏந்தி வரும் அனுமனின் திருவுருவமும் வண்ண சுதை சிற்பங்களாக அலங்கரிக்கின்றன.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ ராமநாதர் எழுந்தருளியுள்ளார். ஜோதி ஸ்வரூபமாக சுடர் விட்டு ஒளிரும் ஜோதிர்லிங்க வடிவம். அழகாகவும் கம்பீரமாகவும் காட்சி தருகிறார். சீதா பிராட்டி தனது கரங்களால் மணலைக் கொண்டு உருவாக்கிய லிங்கம். ஸ்ரீ ராமபிரானும் சீதையும் சேர்ந்து பிரதிஷ்டை செய்துள்ளனர். இவருக்கு ராமலிங்கர், ராமேசர் ஆகிய திருநாமங்களும் உண்டு.
இந்த ஜோதிர்லிங்கத்திற்கு பின்புறம் கற்பூர ஆரத்தி காட்டினால் முன்புறம் பிரகாசமாக ஒளிர்விட்டு ஜோதி மயமாகத் தெரியும். இந்த ஜோதிர்லிங்கத்திற்கு நான்கு கால பூஜையும், ஒரு கால கோடி தீர்த்த அபிஷேகமும் உண்டு.
மூலஸ்தானத்தில் உள்ள ஸ்படிக லிங்கத்திற்கு தினமும் கங்கை நீரால் மட்டுமே அபிஷேகம் செய்கின்றனர். ஸ்படிக லிங்க தரிசனம் புண்ணியம் தரும். பார்க்க மனதிற்கு ஆனந்தத்தைத் தருகிறது.
(விடியற்காலை 5.00 மணி முதல் 6.00 மணிக்குள் அபிஷேகம் முடிந்துவிடும். 4.30 மணிக்கே சென்றால் பார்க்க வசதியாக இருக்கும். கூட்டம் அலை மோதும். டிக்கெட் எடுக்க வேண்டும். பக்தர்கள் கங்கை நீரை கொண்டுபோய்க் கொடுக்கலாம். பேஷ்காரிடம் கொடுத்து அதற்கு தனி டிக்கெட் வாங்க வேண்டும். காப்பர், பித்தளை, வெண்கல பாத்திரங்களில் மட்டுமே கங்கை நீரை எடுத்துச்செல்லலாம். இரும்பு, தகரம், பாட்டில் போன்றவற்றில் அனுமதி இல்லை.)
பிரமாண்டமான சுதை வடிவில் நந்தியம் பெருமான் காட்சி தருகிறார். சுண்ணாம்பு, மார்டர் கொண்டு உருவாக்கியுள்ளனர். 22 அடி நீளம், 12 அடி அகலம், 17 அடி உயரம் எனும் அளவில் உருவாக்கியுள்ளனர்.
ராமநாத சுவாமிக்கு வலதுபுற சந்நிதியில் ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்பாள் மனோன்மணி வடிவில் யோக சக்தியாக காட்சி தருகிறாள். தாமரை - அல்லி மலர்கள் கொண்ட மேற்கரங்கள், அபய - வரத முத்திரைகள் கொண்ட கீழ்க்கரங்களுமாக, சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. மலைவளர் காதலி என்ற பெயரும் உண்டு. ஸ்ரீசக்கர பிரதிஷ்டையுடன் சாந்நித்தியம் மிக்க சந்நிதியாக விளங்குகிறது. சித்திரை மாதப் பிறப்பன்று அம்பிகைக்கு சந்தன அலங்காரம் செய்கின்றனர். சக்தி பீடங்களுள் இது மனோன்மணி பீடம் என்றும் சேது பீடம் என்றும் போற்றப்படுகிறது.
உற்சவ மூர்த்திகள் அனைத்தும் பேரெழில் கொண்டவை. மான் - மழு ஏந்திய இரு கரங்கள், மற்றும் கூப்பிய இரு கரங்கள் கொண்ட நந்திகேஸ்வரர் விக்ரகம் அற்புதமானது. வால் தொடையில் பதிந்துள்ளது.
அம்பாள் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் சயனக்ருஹம் எனப்படும் பள்ளியறை உள்ளது. இதில் உள்ள ஊஞ்சலில் சுவாமி, அம்பாள் ஐம்பொன் விக்ரகங்களை இரவு வேளையில் கொண்டு வந்து வைப்பார்கள்.
வடமேற்கு மூலையில் பள்ளிகொண்ட பெருமாள் சந்நிதி கொண்டுள்ளார். தென்மேற்கு மூலையான கன்னி மூலையில் சந்தான கணபதி எழுந்தருளியுள்ளார். மகா கணபதியின் திருவுருவம் மிகப் பெரியது. வள்ளி, தெய்வயானை உடனாய சுப்ரமணியர் திருவுருவங்கள் அழகானவை.
சுக்ரவார மண்டபத்தில் அஷ்ட லட்சுமிகளின் அழகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். மண்டபத் தூண் சிற்பங்களாக மனோன்மணி, மாஹேந்திரி, கௌமாரி, ராஜ ராஜேஸ்வரி, லட்சுமி, காளி, சாமுண்டி துவாரபாலிகைகள் காணலாம். சிவதுர்க்கை, மனோன்மணி, வாகீஸ்வரர், சேதுபதி கதம்ப தேவர், பிரதானி புவனேஸ்வரி, மற்றும் அன்னபூரணி ஆகியோரின் திருவுருவங்களைக் காணலாம்.
மூன்றாம் பிரகாரத்தில் சேது மாதவர் சந்நிதி உள்ளது. வெள்ளை பளிங்கு கற்களால் உருவான திருமேனி. ஸ்வேத மாதவர் என்றும் கூறுவார்கள். இவரை வழிபட்டால்தான் முழு யாத்திரைப் பலன் கிடைக்கும்.
மூன்றாம் பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் உள்ள சந்நிதியில் ராம - லட்சுமண - சீதா பிரதிஷ்டை செய்யும் ராமலிங்கம், கைகளில் லிங்கங்களுடன் அனுமன், சுக்ரீவன் மற்றும் விபீஷணன் பிரதிஷ்டை செய்யும் லிங்கங்கள் காணலாம். (கட்டண சேவை).
வடகிழக்கு மூலையில் உள்ள நடராஜர் சபை ருத்ராட்சங்களால் அலங்கரிக்கப்பட்டு அழகாக காட்சியளிக்கிறது. நடராஜரின் திருவுருவம் மிகப் பெரியது. முயலகன் முகம் மேல்நோக்கியுள்ளது. கால்கள் பின்னால் உள்ளன. வித்தியாசமான சிலை. பதஞ்சலி முனிவர் முக்தியடைந்த இடம் என்பதால் கண்ணுக்கு தெரியும்படி இருக்க மாட்டார். நாக தோஷங்களை விலக்க வேண்டி இங்கு பதஞ்சலியிடம் பிரார்த்திக்கின்றனர்.
பிரதான வாசலருகே செந்தூர ஆஞ்சநேயரை தரிசிக்கலாம்.
ராமேஸ்வரத்தில் முக்கியமானவை தீர்த்தங்கள்தாம். கோவிலுக்கு வெளியே உள்ள கடல்தான் முதல் தீர்த்தம். இதை அக்னி தீர்த்தம் என்பார்கள். இங்கே சங்கல்பம் செய்து கொண்டு ஸ்நானம் செய்து விட்டு மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். மற்ற 22 தீர்த்தங்கள் கோவிலுக்குள்ளேயே இருக்கின்றன. இவற்றில் வரிசைக்கிரமமாக குளிக்கும் முறை உள்ளது. தீர்த்தங்களின் பெயர்கள், குளிக்கும் முறை போன்ற விவரங்கள் தனியே கொடுக்கப்பட்டுள்ளன.
கோடி தீர்த்தம் அருகே பாதாள பைரவர் சந்நிதி. இவரை வழிபட்டால் செய்த பாவங்களிலிருந்து விடுபடலாம்.
ஆலயத்தின் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள ரத்தினாகரம் (இந்து மகா சமுத்ரம்), மகோததி (வங்கக்கடல்) ஆகியவற்றை குறிக்கும் வகையில் இரண்டு உருவச் சிலைகள் காணப்படுகின்றன. சேது கட்டப்படும் போது இரவோடு இரவாக இவற்றை தகர்க்க வந்த ஹரபோலன் சிலையும் உள்ளது. அவனை அனுமன் பிறகு தண்டித்ததாக குறிப்பொன்று கூறுகிறது.
12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களுள் ஒன்று - தேவாரத் திருத்தலம் - சக்தி பீடங்களுள் ஒன்று (மனோன்மணி பீடம்)
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.