அருள்மிகு ஸ்ரீ மங்களேஸ்வரர் திருக்கோவில் (உத்தரகோசமங்கை)

God Name : ஸ்ரீ மங்களேஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

கைலாசத்தில் உமையவளுக்கு வேதங்களை போதித்துக் கொண்டிருந்தார் சிவபெருமான். கற்றுத் தந்ததை உமையவளால் திருப்பிச் சொல்ல முடியவில்லை. இதனால் கோபமுற்ற இறைவன் உமையவளை பூலோகம் சென்று வேதியரின் மகளாகப் பிறந்து முறைப்படி வேதங்களை கற்றுக் கொள்ளுமாறு பணித்தார். ராஜமாணிக்க சதுர்வேத புரம் எனும் ஊரிலுள்ள வேதியர் ஒருவர் பிள்ளைப்பேறு வேண்டித் தவமிருந்தார். அவருக்கு மகளாகப் பிறந்தாள் உமையவள். பூண்முலையாள் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார் வேதியர். மணப்பருவத்தை அடைந்ததும் பெண்ணுக்கு வரன் தேட ஆரம்பித்தார் வேதியர். அப்போது கிழ வேதியர் உருவத்தில் வந்த சிவபெருமான் பூண்முலையாளை மணக்க விருப்பம் தெரிவித்து வேதியரின் சம்மதம் பெறுகிறார். திருமணம் முடிந்ததும் தனது சுயரூபத்தைக் காட்டிய சிவபெருமான் பின்னர் பார்வதி - பரமேஸ்வரனாக காட்சி தந்து, கல்யாணசுந்தரராக இங்கு கோவில் கொள்ளவிருப்பதாக தெரிவித்தார். இதன் பின்னர் பூண்முலையாளாக இருந்த உமையவளிடம், 'நீ கற்றுணர்ந்த வேதங்களை கூறுவாயாக?' என கேட்டார் சிவபெருமான். உமையவளும் தாம் கற்ற வேதங்களை எடுத்துரைத்தார். ஆனால் அதன் பொருள் ஏதும் தெரியவில்லை. இறைவனே வேதங்களின் பொருளை உபதேசித்தார் என ஸ்தல வரலாறு. கோசம் என்றால் வேதம், உத்தரம் என்றால் திரும்பப் பெறும் விடை, மங்கை என்றால் பார்வதி. இதுவே உத்தரகோசமங்கை எனப் பெயர் வந்த காரணம். உத்தரம் என்றால் உபதேசம், கோசம் என்றால் ரகசியம், மங்கை - பார்வதி என்ற பொருளில் வந்ததாகவும் கூறுவர். மறைகளின் பொருளை உமையவளுக்கு உபதேசிக்கும் போது, ஒளிந்திருந்து ஒட்டு கேட்டுக் கொண்டிருந்த முருகனை கடலில் பதுங்கி வாழும் மகர மீனாக மாறுமாறும், அதற்கு உடந்தையாக இருந்த பார்வதி மீனவப் பெண்ணாக மாறுமாறும் சபிக்கிறார் இறைவன். பின்னர் மீனவனாக வந்து வலைவீசி மகர மீனைப் பிடித்து, மீனவப் பெண்ணை மணந்து திருவிளையாடல் புரிவதாகவும் ஸ்தலபுராணம் குறிப்பிடுகிறது. வலை வீசி மீன் பிடித்த படலம் நிகழ்வு இக்கோவில் வாசலில் நடந்ததால் அதனை இக்கோவிலின் வாசலில் ஐதீகமாக நடத்திக் காட்டுவர். (ஆதியில் கோவில் வாசல் வரை கடல் இருந்ததாகவும், பின்னர் கடல் உள்வாங்கிச் சென்றுவிட்டதால் தற்போது நிலப்பரப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது). தில்லையில் உலகோர்க்கு நடனம் ஆடிக் காண்பிக்கும் முன்னரே இத்தலத்தில் தனிமையில் நடராஜர் நடனம் ஆடினார் என்பதால் இத்தலத்தை ஆதிசிதம்பரம் என்று குறிப்பிடுகின்றனர். ஆதியில் இத்தலத்தில் ஆயிரம் முனிவர்கள் தவம் மேற்கொண்டனர். வேதச்சுவடிகளுடன் காட்சி தந்த சிவபெருமான் அவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர்களிடம் தன்னை காண வேண்டி மண்டோதரி கடுந்தவம் மேற்கொண்டிருப்பதால், தான் இலங்கை செல்வதாகவும், ராவணன் தனது மேனியைத் தீண்டினால், இங்குள்ள வாவியின் (திருக்குளத்தின்) நடுவே தீப்பிழம்பு தோன்றும் எனக் கூறிவிட்டு சென்றார். தான் திரும்பி வரும் வரை வேதங்களின் சுவடிகளை பாதுகாத்து வருமாறும் கூறிவிட்டு சென்றார். அழகான பாலகனாக மண்டோதரி முன்பு தோன்றினார். ஒரு நாள் அந்த பாலகனை ராவணன் தனது கைகளால் தூக்கி கொஞ்ச முற்பட்டான். ராவணனின் ஸ்பரிசம் பட்டதும் உத்தரகோசமங்கை குளத்து நடுவே தீப்பிழம்பு தோன்றியது. இதைக் கண்ணுற்ற தவமியற்றிக் கொண்டிருந்த ஆயிரம் முனிவர்களில் 999 பேர் ஒவ்வொருவராக அக்னி பிழம்பில் விழுந்து மறைந்தனர். அவர்கள் 999 பேரும் லிங்கங்களாக மாறினர். ஆயிரமாவது லிங்கமாக சிவபெருமானே எழுந்தருளினார். அதுவே சஹஸ்ரலிங்கம். மீதியிருந்த ஒருவர் வேத சுவடிகளை பாதுகாக்கும் பொறுப்பிலிருந்ததாலும், இறைவன் வந்ததும் அவரிடம் அவற்றை ஒப்படைத்து விட்டு தானும் நெருப்பில் மூழ்கினார். பிற்காலத்தில் மாணிக்கவாசகராக திருவாதவூரில் அவதரித்து பாண்டிய நாட்டில் அரிமர்த்த பாண்டியனின் அமைச்சராகும் பெருமையை பெற்றார். திருக்குளக்கரை அருகேயுள்ள ஸ்தல விருட்சமான இலந்தை மரம் 3000 ஆண்டுகள் பழமையானது. ஆண்டிற்கு ஒரு கனியை மட்டுமே தரும் சிறப்பைக் கொண்டது இந்த மரம். இதை சுற்றி வந்து வழிபட புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பர். இங்கு அமர்ந்த நிலையில் மாணிக்கவாசகர் காணப்படுகிறார். மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் குருந்தமரமும் சந்நிதியும் சாந்நித்யம் உடையவை. துர்வாசரின் சாபம் பெற்ற ப்ருகு முனிவரும் அவரது தந்தையாரான வருண பகவானும் சாபவிமோசனம் பெற்ற ஸ்தலம். உத்தரகோசமங்கை இறைவனை வழிபட்டு நளமகாராஜா, இழந்த தனது நாடு - மனைவி அனைத்தையும் பெற்றதாக வரலாறு. பிரம்மனுக்காக பொய்யுரைத்த தாழம்பூ சாபநிவர்த்தி பெற்ற ஸ்தலம். மூலவருக்கு இங்கு தாழம்பூ சாத்தி வழிபடலாம் எனக் கூறப்படுகிறது.
மூலவர்: ஸ்ரீ மங்களேஸ்வரர், அம்பாள்: ஸ்ரீ மங்களேஸ்வரி. மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ மங்களேஸ்வரர். அழகிய லிங்கம். ஒளி வீசும் தேஜோமய திருமேனி. இவருக்கு பிரளய காலேஸ்வரர், துரிசாபகர், காட்சி கொடுத்த நாயகர், கல்யாணசுந்தரர் போன்ற திருநாமங்களும் உண்டு. கருவறையின் வடசுவரை ஒட்டி பாணாசுரன் வழிபட்ட பாணலிங்கத்தைக் காணலாம். அம்பாள் ஸ்ரீ மங்களேஸ்வரி தனிக் கோவில் கொண்டுள்ளார். மங்களதாயினி, புட்பாதனி, சுந்தர நாயகி, பூண்முலையாள், திரைசேர் மடந்தை ஆகிய திருநாமங்களும் இவளுக்கு உண்டு. நர்த்தன கணபதி, முருகப் பெருமான், சஹஸ்ரலிங்கம், துர்க்கை, மாணிக்கவாசகர் ஆகியோரின் திருவுருவங்கள் அழகாக இருக்கின்றன. பிற கிரகங்கள் ஏதுமில்லாமல் சனீஸ்வரர் மட்டுமே காட்சி தருகின்றார். தனி சந்நிதி கொண்டிருக்கும் மூலவரான ஸ்ரீ மரகத நடராஜர் இக்கோவிலின் விசேஷ மூர்த்தியாக காட்சி தருகின்றார். ஐந்தரை அடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. விருப்பாச்சியுடன் சேர்த்து ஏழடி உயரம். இவரே ஆதி நடராஜர். உமையவள் மட்டுமே காணுமாறு நடனமாடியவர். இவருக்கு நித்ய அபிஷேக ஆராதனைகள் கிடையாது. இவரை சந்தனக் காப்பால் நிரந்தரமாக மூடியிருப்பார்கள். ஆண்டிற்கு ஒரு முறை திருவாதிரை நாளன்று சந்தனத்தைக் களைந்து புதிய காப்பிடுவார்கள். அன்று 32 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்வார்கள். பிறகு சந்தனக் காப்பிடுவார்கள். மரகதத்தின் ஒளி கண்களைப் பறிக்கும் என்பதால் சந்தனத்தை களைந்து புதிய காப்பிடும் அர்ச்சகர், தனது கண்களை மெல்லிய வஸ்திரத்தால் மூடிக் கொண்டுதான் செய்வாராம். களையப்பட்ட சந்தனத்தை பக்தர்களுக்கு விநியோகம் செய்து விடுவார்கள். உற்சவ நடராஜரின் திருமேனி அழகாக இருக்கின்றது. சிவகாமியம்மன் திருவுருவமும் மரகதத்தால் உருவானது. மூலவ நடராஜரின் பிரதிநிதியாக ஒரு ஸ்படிக லிங்கத்திற்கு நித்ய அபிஷேக ஆராதனை செய்கின்றனர். நடராஜரின் சந்நிதிக்கு வெளிப்புற மண்டபம் தேர் போல அமைக்கப்பட்டுள்ளது. மிருகசீரிஷ நட்சத்திரத்தில் இவருக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையை பார்ப்பது கோடி புண்ணியம் என்பார்கள். அப்போது மனதில் பிரார்த்திப்பது உடனே பலன் தரும் என அர்ச்சகர் தெரிவிக்கின்றார். நடராஜர் சந்நிதிக்கு பின்புறமுள்ள அம்பிகைக்கு பிட்டு, களி ஆகியவற்றை நைவேத்தியம் செய்து, மஞ்சள் கயிறு சாத்தி விசேஷ ஆராதனைகள் செய்த பிறகே உற்சவ நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வார்களாம். இந்த அம்பிகை திருவாதிரை விரதமிருந்து சிவனருள் பெற்றதால் இந்த விசேஷ ஆராதனைகள் என்பர். நடராஜர் சந்நிதியிலுள்ள ஏகாதச (11) ருத்ர லிங்கங்களின் ஆவுடையார் கருங்கல்லால் உருவானவை. பாணம் பெல்ஜிய நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட வெள்ளைக் கல்லால் உருவானவை. திருவாசகத்தலம்
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.