அருள்மிகு சௌமிய நாராயணப் பெருமாள் திருக்கோவில் (திருக்கோஷ்டியூர்)
God Name : மூலவர்: ஊரக மெல்லணையான், உற்சவர்: சௌம்ய நாராயணன்
திருக்கழுக்குன்றம் கோவில்
தஞ்சாவூர்
Call : +91-
இரண்யனை அழிப்பதற்கு ஆலோசனை செய்ய தகுந்த இடமாகத் தேவர்கள் இத்தலத்தைத் தேர்ந்தெடுத்து, விஷ்ணு பகவானை வேண்டித் தவம் மேற்கொண்டனர். விஷ்ணு பகவானின் தரிசனம் வேண்டி ஏற்கனவே இத்தலத்தில் தவம் செய்து கொண்டிருந்தார் கதம்ப மகரிஷி. கதம்ப மகரிஷிக்கு பிரத்யட்சமான விஷ்ணு பகவான், தேவர்களிடம் அவர்களது துயரத்தைப் போக்க, தாம் நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை அழிக்க இருப்பதாகக் கூறினார்.
எடுக்கப்போகும் நரசிம்ம அவதாரம் எப்படி இருக்கும் எனக் காண விழைந்த கதம்ப மகரிஷியும், தேவர்களும் வேண்டிக்கொண்டதன் பேரில், இங்கு நரசிம்ம அவதாரத்தைக் காட்டியருளியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
தேவேந்திரன் தேவலோகத்தில் தான் பூஜித்துக் கொண்டிருந்த விக்ரஹத்தைக் கதம்ப மகரிஷிக்குக் கொடுத்ததாகவும், அந்த விக்ரஹமே இங்கு உற்சவரான சௌம்ய நாராயணராக சேவை சாதிக்கின்றார் என்றும் கூறப்படுகிறது.
புரூருவ மகரிஷி 1008 அந்தணர்களுக்குத் தனம் அளிக்கும் செய்கையில் அதைப் பெற 1007 அந்தணர்களே வந்தனர். ஒருவரின் குறைவிருப்பதால் தனது ஆசை பூர்த்தியாகவில்லையே என்று ஆதங்கப்பட்டுப் பெருமாளை வேண்டியதால், 1008வதாக வந்து தனத்தைப் பெருமாளே பெற்றுச் சென்றார் என்றும், அதனால் பெருமாள் தன ஹஸ்தம் கொண்டுள்ளார் என்றும் பட்டாச்சார்யார் மகிழ்வுடன் தெரிவிக்கின்றார்.
தேவர்களின் துன்பத்தை ஓட்டிய ஊர் என்பதாலும், 'திருகு' என்றால் பாவம் போக்கவல்ல எனப் பொருள் இருப்பதாலும், தேவர்கள் இங்கு கோஷ்டியாக வந்ததாலும் இவ்வூர் திருக்கோஷ்டியூர் எனப் பெயர் கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஸ்ரீரங்கநாதரின் ஆணைப்படி, திருக்கோஷ்டியூர் நம்பியை குருவாக்கிக் கொள்ள இவ்வூருக்கு வருகிறார் ராமாநுஜர். ஒவ்வொரு முறையும் குருவைப் பார்க்கப்போகும்போதெல்லாம் ஒரு உபதேசத்தைக் கூறி அவரைத் திருப்பி அனுப்பிவிடுவாராம் நம்பி. இவ்வாறாக 17 முறை நடந்தது. இந்த பதினேழு முறையும் 'வந்திருப்பது யார்?' என நம்பி கேட்க, 'நான் ராமாநுஜன் வந்திருக்கிறேன்' எனக் கூறியதால் அவர் திருப்பி அனுப்பப்பட்டார். 18ஆம் முறை 'அடியேன் உபதேசம் பெற வந்துள்ளேன்' எனக் கூறியதும் அவரைச் சிஷ்யனாக ஏற்று, திருமந்திர உபதேசம் செய்தார் குருவாகிய நம்பி.
இந்த மந்திரத்தைத் தகுதியுள்ள ஒருவருக்கு செவி வழியே உரைக்க வேண்டும் எனும் குருவின் கட்டளையை மீறிய ராமாநுஜர், விமானத்தின் மேல் தளத்தில் நின்று கொண்டு லட்சக்கணக்கான மக்களை உரக்கக் கூவி அழைத்து, மந்திரத்தைக் கூறினார். திருமந்திரம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இவ்வாறு செய்ததாகக் குருவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
விமானத்தில் (மூன்றாம் தளத்தின் வெளிப் பிரகாரத்து தெற்கு மாடம்) ராமாநுஜரின் திருவுருவத்தைச் சேவிக்கலாம். நேர் எதிரே திருக்கோஷ்டியூர் நம்பியின் வீடு உள்ளது. 'கல்திருமாளிகை' என்று பெயர்.
இது 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.
மூலவர்: ஊரக மெல்லணையான், உற்சவர்: சௌம்ய நாராயணன், தாயார்: திருமாமகள் நாச்சியார்.
பாவங்களைப் போக்கும் அஷ்டாங்க விமானமும் மூன்று தளங்களும் கொண்டு அமைந்துள்ள திவ்ய தேசக் கோவில்களுள் ஒன்று இது.
முதல் தளம்:
மூலஸ்தானத்தில் மூலவரான ஊரக மெல்லணையான் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு புஜங்க சயன கோலமாகப் பள்ளி கொண்டுள்ளார். இதை 'சமஸ்தாபனா' என்பர். கருவறையை 'கண்ணாடி திருமாளிகை' என்பர். கதம்ப முனிவர்க்கு எம்பெருமான் பிரத்யட்சமான அதே கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.
கதம்ப மகரிஷி, வாராணாசி ராஜா, இந்திரன், சூரிய - சந்திரர்கள், தும்புரு, நாரதர், சரஸ்வதி, சாவித்திரி, மது - கைடபர்கள் ஆகியோரின் திருவுருவங்கள் இங்கு காணப்படுகின்றன.
உற்சவ மூர்த்தியான சௌம்ய நாராயணப் பெருமாளின் திருவுருவம் 'பிரதிஷ்டானா' முறையில் வெள்ளியால் உருவாக்கப்பட்ட அழகான திருமேனி. தன ஹஸ்தம் கொண்டுள்ளார். பூமாதேவி, நீளாதேவி சகிதமாக சேவை சாதிக்கின்றார். சக்கரத்தாழ்வார் மற்றும் ஆண்டாளின் திருவுருவங்களையும் சேவிக்கலாம். திருமாமகள் தாயார் அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். இவருக்குத் தனி சந்நிதி உள்ளது.
இரண்டாம் தளத்தில் மூலவராக உபேந்திர நாராயணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இதை 'ஸ்தாபனா' என்பர். தேவியர்கள் உடன் உள்ளனர்.
மூன்றாம் தளத்தில் மூலவராக பரமபதநாதர் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றின்றார். இதை 'அஸ்தாபனா' என்பர்.
கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணரை சேவிக்கலாம். பாமா - ருக்மணி தேவியர்கள் உடன் உள்ளனர்.
கீழ் தளத்திலிருந்து மேல் தளம் செல்ல உத்ராயண வாசல் மற்றும் தட்சிணாயண வாசல் என இரண்டு வாசல்கள் இருக்கின்றன.
பரமபத வாசலின் இருபுறமும் மல்யுத்த நரசிம்மர், இரண்ய சம்ஹார நரசிம்மர் ஆகிய சிலாவடிவங்கள் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. கதம்ப முனிவர் வேண்டியதன் பேரில் நரசிம்மர் பல ரூபங்களைக் காட்டியருளியதாகக் கூறப்படுகிறது. அஷ்டாங்க விமானத்தின் நாற்புறமும் உள்ள எண்ணற்ற தெய்வீக திருவுருவங்கள் யாவும் அழகானவை. கல்யாண மண்டபத்தின் மேற்புறம் சதுர ஆவுடையாருடன் கூடிய அழகிய சிவலிங்கத்தைத் தரிசிக்கலாம்.
திருக்கோஷ்டியூர் நம்பி மற்றும் ராமாநுஜருக்கு சந்நிதிகள் உள்ளன. நம்பி சந்நிதி வாசலில் பதினெட்டு திருமந்திரங்களை பலகையில் எழுதி வைத்துள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.