அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோவில் (திருப்பத்தூர்)
God Name : மூலவர்: திருத்தளிநாதர், சிறப்பு மூர்த்தம்: யோக பைரவர்
திருக்கழுக்குன்றம் கோவில்
தஞ்சாவூர்
Call : +91-
சிவபெருமானின் பல்வேறு நடனங்களைக் காண விரும்பிய உமாதேவி, இறைவன் தன்னால் ஆடிய கௌரி தாண்டவத்தைக் காண விரும்பி திருப்புத்தூர் வந்தடைந்தாள். இங்குள்ள கொன்றை வனத்தில் இருந்த லிங்க வடிவான சுயம்புவைப் பூஜித்தாள். அம்மையாரின் தவத்தில் மகிழ்ந்த இறைவன், அம்பாள் முன்பாகத் தோன்றி கௌரி தாண்டவம் ஆடிக் காண்பித்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
ஆடிக் காட்டிய இடத்தை சிற்சபை என்கின்றனர். புஜங்கத்திராசம் அல்லது ரட்சா தாண்டவம் என்றெல்லாம் போற்றப்படும் இந்த நடனம், கால்களின் கீழ் பாம்பு வந்துவிட்டால் அஞ்சி காலைத் தூக்குவது போல் இருக்கும்.
இந்த நடனத்தைக் காண விரும்பிய மஹாலட்சுமி, திருமாலின் யோசனைப்படி திருப்புத்தூருக்கு வந்து தவம் மேற்கொண்டு வழிபட்டு வந்தாள். லட்சுமி தேவிக்காக மீண்டும் ஒரு முறை நடனம் ஆடிக் காட்டினார் இறைவன்.
தாருகாவனத்தை சிவபெருமான் அழித்ததும் உருவான நெருப்பை சாந்தப்படுத்தி ஒரு குழந்தையாக்கி வளர்த்து வந்தாள் உமையன்னை. அந்தக் குழந்தையை விஸ்வரூபமெடுத்து அரக்கர்களை அழிக்க ஏவினார் சிவபெருமான். அப்படி அக்னியிலிருந்து எழுந்தவரே பைரவர்.
பிரகதாரணர் எனும் முனிவர் அசுரர்களிடம் இருந்து உலகைக் காக்க காசியில் வேள்வி ஒன்றை நடத்தினார் என்றும் மற்றுமொரு கருத்தும் உண்டு. அசுரர்களை அழித்த பாவத்தைப் போக்கிக் கொள்ள பல ஸ்தலங்கள் சென்று சிவபூஜை செய்தார். பின்னர் இவ்வூருக்கு வந்து யோகத்தில் அமர்ந்தார்.
இந்திரனின் மகனான ஜெயந்தன், தான் பெற்ற சாபம் காரணமாக ஒரு பூதமாகி தலையில் மலையைச் சுமந்தபடி, விமோசனத்தை நாடி க்ஷேத்ராடனம் புறப்பட்டான். இத்தலத்திற்கு வந்து யோக பைரவரை தரிசித்ததும், தலையிலிருந்த மலை விடுபட்டு பூத வடிவம் நீங்கப் பெற்றான். கையிலிருந்த இடி ஆயுதம் பைரவரின் கரத்தில் பழமாக அமர்ந்தது.
சித்திரை மாத முதல் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஜெயந்தன் விழா பிரசித்தமானது. அஷ்டபைரவருக்கு அஷ்ட வித அர்ச்சனை, அஷ்ட வித நைவேத்தியம், அஷ்ட வித சமித்துகளில் வேள்வி நடத்துகின்றனர். கார்த்திகை மாதம் சம்பக சஷ்டி எனும் அஷ்ட பைரவ அர்ச்சனை ஹோமம் சிறப்பாக நடத்துகின்றனர். புனுகு சாத்துதல், மாவிளக்கு ஏற்றுதல் போன்ற பிரார்த்தனைகள். சம்பகாசுரன் எனும் அரக்கனை அழித்ததால் சம்பக சஷ்டி எனக் கொண்டாடுகின்றனர்.
நகரத்தார் சீமையின் அஷ்ட பைரவ ஸ்தலங்களுள் திருப்புத்தூரை சிரசாகவும், வைரவன்பட்டியை இதயமாகவும், இலுப்பைக்குடியைப் பாதமாகவும் கருதுகின்றனர்.
மார்கழி திருவாதிரை நாளில் ஸ்ரீ நடராஜரின் உற்சவத் திருமேனி வீதியுலா வரும்.
முழுவதும் கற்களால் உருவான கோவில் என்பதால் 'கற்றளி' எனப்பட்டது. திருவாகிய மஹாலட்சுமி பூஜித்ததால் 'திருக்கற்றளி' எனப் பெயர் கொண்டு பின்னர் மருவி 'திருத்தளி' என்றானது. இதனால் இங்கு எழுந்தருளியுள்ள மூலவர் திருத்தளிநாதர் எனப்படுகிறார்.
எறும்பு புற்றுக்கள் நிறைந்திருந்த ஊர் என்பதால் 'திருப்புற்றூர்' எனப் பெயருற்று பின்னர் மருவி 'திருப்புத்தூர்' என்றானது. புற்றுக்கு வடமொழியில் 'வான்மீகம்' எனப் பெயர். எனவே 'வான்மீகபுரம்' என்றழைக்கப்பட்டது.
தருமி எனும் ஏழைப் புலவனுக்குப் பாடல் கொடுத்தருளி திருவிளையாடல் புரிந்த ஸ்தலம் இதுவே எனக் கூறப்படுகிறது.
மூலவர்: திருத்தளிநாதர்் சிறப்பு மூர்த்தம்: யோக பைரவர்் அம்பாள்: சிவகாமசுந்தரி.
நம்பியாண்டார் நம்பி வாசல் வழியாகச் சென்று, அஸ்திரத் தேவரையும், நந்தித் தேவரையும் வணங்கி ஆசி பெற்று ஆலயத்துள் செல்கின்றனர். நந்தியின் மகரத் தோரணங்கள் அழகானவை.
மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ளார் திருத்தளிநாதர். தேஜோமயமாகப் பிரகாசிக்கும் சுயம்பு லிங்க மூர்த்தம். சதுர பீட ஆவுடையாருடன் உயரமான பாணம் கொண்டு கம்பீரமாகத் தரிசனம் தருகின்றார். கிழக்கு பார்த்த சந்நிதி. 'திருக்களி பட்டாரர்', 'திருத்தளி பரமேஸ்வரர்' ஆகிய பெயர்கள் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. மூலைகளில் ரிஷப அமைப்புகளும், மகரத் தோரணங்களும் கொண்டு, முழுக்க முழுக்கக் கற்களால் உருவான மூன்றுதள விமானம் அற்புதமான வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளன.
அம்பாள் சிவகாமசுந்தரி தனிக் கோவில் கொண்டுள்ளார். 'திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார்' என்ற பெயரும் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. அம்மன் சந்நிதியின் முன்பாக உள்ள மண்டபத்து விதானத்தில் கண்கவர் ஓவியங்கள் காணப்படுகின்றன.
ஸ்வாமிக்கும் - அம்பாளுக்கும் நடுவே சோமாஸ்கந்தரைப் பூர்த்தி செய்வது போல் வயிரவமூர்த்தி என்கிற யோக பைரவர் சிறப்பு மூர்த்தமாக எழுந்தருளியுள்ளார். வான்மீகி முனிவர் பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது.
கிழக்கு பார்த்து காட்சி தருகின்றார் யோக பைரவர். இரண்டு பாதங்களையும் பிணைத்து, முழங்காலை ஒடுக்கி, திருவடிகள் நிலத்தில் பதியாது அமர்ந்த காணப்படுகிறார். வலது கரத்தில் சிவலிங்கத்தை வைத்துப் பூஜை செய்யும் நிலையில் உள்ளார். உலோகத்தாலான சூலம் தோளில் சாத்தியுள்ளார்.
இவரது திருமேனியில் பன்னிரெண்டு ராசிகளும் அடங்கியுள்ளன. இவருக்கு 'ஆபத்துத்தாரண பைரவர்' என்ற திருநாமமும் உண்டு. உலாத்திருமேனி வடுகக் கோலத்திலுள்ளது.
யோக பைரவருக்கான பைரவ யந்திரம் உடைய மேருபீடம் இருக்கின்றது. தினமும் அர்த்தஜாம பூஜையின் போது ஸ்ரீ யோகபைரவருக்குப் புனுகு சட்டம் சாத்தி, வடைமாலையும், சம்பாவும் நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர். தேய்பிறை அஷ்டமி விசேஷம். சித்திரை மாத முதல் வெள்ளிக்கிழமை தங்க அங்கி அணிவிக்கின்றனர்.
பைரவர் சந்நிதியின் பின்புறமாக கிழக்கு நோக்கி நாகேஸ்வரரும், அன்னை கௌரியும் எழுந்தருளி உள்ளனர். இரண்டாம் பிரகாரத்து தென்கிழக்கே வள்ளி - தெய்வயானை உடனாய சுப்ரமண்யர் எழுந்தருளியுள்ளார். ஸ்ரீ தேவி - பூதேவி சகிதமாக யோக நாராயணப் பெருமாள் எழுந்தருளியுள்ளார்.
இரண்டாம் பிரகாரத்து வடகிழக்கில் உள்ளது நடராஜர் மண்டபம். பத்துத் திருக்கரங்களுடன் காட்சி தரும் ஸ்ரீ நடராஜப் பெருமானின் அழகிய திருமேனியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். கௌரிதாண்டவம் ஆடிக் காட்டியவர். தெற்கு நோக்கி காட்சி தரும் தாண்டவமாடும் கூத்தனின் திருமேனியின் நளினங்கள், அருகேயுள்ள சிவகாமியின் சிலை, மத்தளம் வாசிக்கும் நந்தி ஆகிய அனைத்தும் வடிவமைக்கப்பட்ட விதம் மிகவும் சிறப்பாக இருக்கின்றது.
மாமண்டபத்தில் சிலாரூபமாக கரம் கூப்பி நிற்கும் மருது சகோதரர்களைக் காணலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.