அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் (திருச்செங்கோடு)
God Name : மூலவர்: அர்த்தநாரீஸ்வரர், உற்சவர்: அர்த்தநாரீஸ்வரர், சிறப்பு மூர்த்தம்: செங்கோட்டு வேலவர்
திருக்கழுக்குன்றம் கோவில்
ராணிப்பேட்டை
Call : +91-
கொடி மாட செங்குன்றம், நாகாசலம், மேருமலை, அரவக்கிரி, வாயுக்கிரி ஆகிய பெயர்களைக் கொண்ட மலை. ஒவ்வொரு திசையிலிருந்து பார்க்கும்போது வெவ்வேறு விதமாக காட்சி அளிக்கும் மலை.
திருச்செங்கோட்டின் பெரிய மலைமுகட்டிற்கு நாகமலை என்றும், சிறிய மலைமுகட்டிற்கு நந்திமலை என்றும் பெயர். இதனிடையே நாகர் பள்ளம் காணலாம்.
வாயு தேவனுக்கும் ஆதிசேஷனுக்கும் இடையே யார் பலசாலி? என்ற சர்ச்சை எழுந்து அதுவே பெரும் போட்டியாக உருவெடுத்தது.
போட்டியின்படி - இமயமலை சிகரம் ஒன்றை ஆதிசேஷன் சுற்றிக் கொள்ள வேண்டும். வாயு தேவன் அதை அங்கிருந்து பெயர்த்து எடுக்க வேண்டும். தேவர்களின் வேண்டுதலின்படி ஆதிசேஷன் சிறிது பிடியை தளர்த்த, அந்த இடைவெளியில் புகுந்த வாயு மலையை பெயர்த்து வேகமாக கொண்டு வந்து தற்போதுள்ள இடத்தில் வைத்து விட்டான். இந்த நிகழ்வின்போது ஆதிசேஷனின் முடியில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. ரத்தம் தோய்ந்த மலை என்பதால் செங்கோடு எனப் பெயர் கொண்டது.
சிவபெருமானிடமிருந்து வரங்களாகப் பெற்ற ஐந்து குன்றுகளில் ஒன்றினை காமதேனுப் பசுவும் நிறுவியது. ஆதிசேஷனின் ரத்தம் தோய்ந்த செந்நிறக் குன்றும், காமதேனு ஸ்தாபித்தக் குன்றுமாக சேர்ந்து பின்னிப் பிணைந்து, இருதலைப் பாம்பு படம் விரித்தாற்போல, செங்கோடாக தெரிகின்றது. சிவ - பார்வதி ஐக்கியத்தை வெளிப்படுத்தும் விதத்தில் தோற்றமளிக்கும் இக்குன்றின் மலைக் கற்கள் மஞ்சள் நிறமும், சிவப்பு நிறமும் கொண்டிருக்கின்றன.
சிவனை மட்டுமே வணங்குவேன் - சக்தியை வணங்க மாட்டேன் என்ற பிடிவாதத்திலிருந்த ப்ருங்கி மகரிஷிக்கு சக்தியும் சிவனும் ஒன்றே என அறிவுறுத்திய ஸ்தலம்.
சக்திக்கு தனது திருமேனியில் பாதியைத் தந்து உமையொரு பாகனாக மாறி நின்றார் இறைவன். இவரே அர்த்தநாரீஸ்வரர். அர்த்தம் (பாதி), நாரீ (பெண்)
புரட்டாசி வளர்பிறை தசமியில் தொடங்கி, ஐப்பசி கிருஷ்ணபட்ச சதுர்த்தி நாள் வரை பார்வதி தேவி கேதாரகௌரி விரதமிருந்து இறைவனின் வாமபாகத்தைப் பெற்றாள். அப்பனிடமிருந்து பிரிக்க முடியாத வகையில் அர்த்தநாரீஸ்வரர் திருவுருவில் ஐக்கியமானாள்.
பழத்தின் காரணமாக கோபித்துக் கொண்டு பழநி சென்ற முருகன், அங்கிருந்து கயிலாயம் தெரிந்ததால் இங்கு வந்து நின்றதாக கூறப்படுகிறது.
அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவரான விறன் மீண்ட நாயனார் அவதரித்த ஸ்தலம். மறைகள் பூஜித்த ஸ்தலம்.
அம்மையப்பனுக்கு அர்ச்சனை செய்யும்போது ஒரு நாமம் சிவநாமமாகவும், ஒரு நாமம் அம்பிகையின் நாமமாகவும் மாறி மாறி சொல்லி அர்ச்சிக்கின்றனர். (காலை 6-7, மதியம் 12-1, மாலை 4-5 மணி )
புது மணத் தம்பதிகள் அம்மையப்பன் முன்பாக மாலை மாற்றிக் கொண்டால் இணை பிரியாது ஒற்றுமையாக இருப்பார்கள் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் இங்கு நிறைய திருமணங்கள் நடப்பதாக கூறப்படுகிறது.
நாக தோஷங்களிலிருந்து விடுபட பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. சதய நட்சத்திரக்காரர்களுக்கு பரிகார ஸ்தலம். நீலகண்ட பதிகம் பாடி வழிபடுவோர்க்கு நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கின்றது.
தேவாரத்திருத்தலம்
மலை அடிவாரம்:
மலையடிவாரத்தில் எழுந்தருளியிருக்கும் கஜமுக விநாயகரையும், ஆறுமுகசாமியையும் வழிபட்டு ஆசி பெற்று மலை ஏறுகின்றனர்.
மலை:
1901 அடி உயரம் கொண்ட மலை. இதை ஏறுவதற்கு 1206 படிக்கட்டுக்கள் உள்ளன. படிகள் நெட்டுக் குத்தாக இருப்பதால் சிரமப்பட்டு ஏறிவிடலாம். மோட்டார் கார் பாதையும் உள்ளது.
60 அடி நீளம் கொண்ட ஐந்து தலை நாகத்தின் சிலை ஒன்று வானளாவிய பாறையில் செதுக்கப்பட்டுள்ள அழகை மலைப்பாதை ஓரத்தில் கண்டு மகிழலாம். அந்த நாகம் விரித்த படத்தின் நடுவே ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கமும் செதுக்கப்பட்டுள்ளது. இந்த கல் நாகத்தைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான நாகங்கள் காணப்படுகின்றன.
பல அற்புதமான சிற்பங்களை கொண்டுள்ள சிங்க மண்டபத்திற்கும் அதை அடுத்துள்ள மண்டபத்திற்கும் இடையே சத்தியப்படி எனப்படும் அறுபதாம்படி தொடங்குகிறது. இப்படிகளில் நின்று கொண்டு சத்தியம் செய்து வழக்குகளையும் சண்டை - சச்சரவுகளையும் முடித்துக் கொள்ளும் பழக்கத்தை கொண்டுள்ளனர். அறுபதாம்படியில் தர்மசாட்சியாக முருகனே இருப்பதாக ஐதீகம்.
பாண்டவ குண்டு எனும் பெரிய பாறை அறுபதாம்படி மண்டபத்தை கொண்டுள்ளது.
சிவபெருமானின் ஊர்த்துவ தாண்டவம், மத்தளம் கொட்டும் நந்தியம்பெருமான், ரதி - மன்மதன் போன்ற சிறந்த வேலைப்பாடுகளையுடைய சிற்பங்களைக் கொண்ட தூண்களையுடைய நிருத்த மண்டபம் அழகாக இருக்கின்றது. வாளேந்திய வீரர்களின் சிற்பங்களும் குதிரைகளின் சிற்பங்களும் தூண்களுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.
மலை உச்சி:
மூலவர்: அர்த்தநாரீஸ்வரர், உற்சவர்: அர்த்தநாரீஸ்வரர், சிறப்பு மூர்த்தம்: செங்கோட்டு வேலவர்
கம்பீரமாகவும் அழகாகவும் காட்சி தரும் ஸ்தல விநாயகரான நாரி கணபதியிடம் ஆசி பெற்று வலச்சுற்று வருகின்றனர்.
மூலஸ்தானத்தில் அர்த்தநாரீஸ்வரர் சிவலிங்கமாக இல்லாமல் அர்த்தநாரியாக தரிசனம் தருகின்றார். ஐந்தடி உயரம் கொண்ட அழகான திருவுருவம். நின்ற திருக் கோலம். மேற்கு பார்த்த சந்நிதி.
அப்பனின் பக்கம் ஜடாமுடி, செவியில் மகர குண்டலம், கையில் தண்டாயுதம், திருவடியில் கழல் ஆகியவற்றுடன் உமையொருபாகனாகவும், அம்மையின் பக்கம் பின்னல், செவியில் ரத்தின தோடு, திருவடியில் சிலம்பு ஆகியவற்றுடன் பாகம்பிரியாளாகவும், ஒரு பக்கம் வேஷ்டியும் மறு பக்கம் புடவையும் அணிந்து காட்சி தரும் அம்மையப்பன். ஆண்மையின் கம்பீரமும் பெண்மையின் நளினமும் கொண்ட அற்புதமான திருவுருவம். வலக்கண்ணிற்கும் இடக்கண்ணிற்கும் வித்தியாசம் தெரிகிறது.
கற்சிலையாகவும் இராமல் உலோகமாகவும் இராமல் வெள்ளை பாஷாணத்தால் உருவான திருமேனி. தெளிவான அங்க அமைப்புகள் தெரியாததால் சுயம்பு மூர்த்தம் என்று கூறுகின்றனர். சித்தர்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஸ்வாமியின் பாதங்களின் கீழ் எப்போதும் இருக்கும் நீர் ஊற்றிலிருந்து (தேவ தீர்த்தம்) தீர்த்த பிரசாதம் தருகின்றனர்.
முன் மண்டபத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரரின் உற்சவ மூர்த்தம் பேரெழில் கொண்டுள்ளது. மண்டபத்து சுவரிலுள்ள ஒன்பது துவாரங்கள் கொண்ட பலகணியின் வழியே அம்மையப்பரின் அழகைக் கண்டு ஆனந்திக்கலாம். வருடத்திற்கு மூன்று நாட்கள் சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவர் மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன.
கருவறையில் ஒரு பெட்டியில் மரகதலிங்கம் வைத்துள்ளனர். அதிகாலை வேளையில் மரகத லிங்கத்திற்கு அபிஷேகங்கள் செய்வார்கள். ப்ருங்கி முனிவரின் உற்சவ மூர்த்தம் ஒன்றும் உள்ளது. மூலவரின் அருகே சஷ்டி கணபதி.
ஸ்ரீ செங்கோட்டு வேலவர் சபா மண்டபத்தில் வேலவரின் அழகிய திருவுருவத்தை கண்டு மகிழலாம். கிழக்கு பார்த்த சந்நிதி. இடக்கையில் சேவற்கொடியும், வலக்கையில் வேலாயுதத்தின் தண்டமும் கொண்டு காட்சி தருகின்றார். மண்டபக்கூரை மற்றும் தூண்களில் காணப்படும் சிற்பங்கள் யாவும் அதிசயிக்கத்தக்க வேலைப்பாடுகளையுடையது.
தைலி மண்டபத்திற்கு மேற்கே எழுந்தருளியுள்ள நந்தியம்பெருமான் குன்றை நோக்கி உள்ளார். உடல் முழுவதும் வெண்ணெய் பூசப்பட்டுள்ளது.
ஆமை மண்டபத்து கல்கூரையில் தொங்கும் தாமரைப்பூக்களும் அதின் மகரந்தம் கொத்தும் கிளிகளும், தொங்கும் கல் சங்கிலிகளும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
பிரகார வலச்சுற்றில் ஆதிசேஷன், சங்கமேஸ்வரர், வேதநாயகி அம்மன், நாச்சாரம்மன், ஜேஷ்டாதேவி, சப்த மாதர்கள், ந்ருதி விநாயகர், பஞ்ச லிங்கங்கள், பர்வத வர்த்தினி உடனாய ராமநாதர், மல்லிகார்ஜுணர், சஹஸ்ரலிங்கம், விசாலாட்சி சமேத விஸ்வநாதர், சிவலிங்க வடிவில் நாகேஸ்வரர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
வெளிச்சுற்றில் ஆதி கேசவப் பெருமாள் கோவில் கொண்டுள்ளார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர்.
மரகதலிங்கம், வைரக்கிரீடம், தங்கத்தேர் ஆகிய சிறப்புக்களைக் கொண்ட ஸ்தலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.