அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில் (கரூர்)

God Name : ஸ்ரீ பசுபதீஸ்வரர் எனப்படும் ஆநிலையப்பர்.

திருக்கழுக்குன்றம் கோவில்

மதுரை

Call : +91-

ஆ - நிலை - அதாவது ஆன்மாக்கள் நிலைபெற்ற ஸ்தலம். 'ஆ' என்றால் பசு - அதாவது காமதேனுப் பசு வழிபட்ட ஸ்தலம் என்பதால் 'ஆநிலை' எனப் பெயர் கொண்டது. காமதேனு பசுவானது இங்குள்ள ஆதிலிங்கத்தை வழிபட்டு படைப்புத் தொழிலை மேற்கொண்டு, இவ்வனத்துள் நிலைத்திருந்த கருக்களுக்கு உருக்கள் தந்ததால் 'கரூர்' எனப் பெயர் கொண்டு பின்னர் மருவி கரூர் என்றானது. வஞ்சி மரங்கள் மிகுந்திருந்த இடம் என்பதால் 'வஞ்சி மாநகர்' எனப் பெயர் கொண்டது. சூரியன் வழிபடுவதால் பாஸ்கர க்ஷேத்திரம் எனப்படுகிறது. நீண்ட தவம் ஒன்றை மேற்கொள்ள விரும்பிய காமதேனுப் பசு, அதற்குத் தகுந்த இடத்தை தேடி அலைந்த போது, நாரதரின் வழிகாட்டலால், இங்குள்ள வஞ்சி (அசோக) வனத்தை அடைந்தது. இங்குள்ள புற்று ஒன்றிலிருந்து சுயம்புவாக வெளிப்பட்ட மஹாலிங்கத்திற்கு பால் சொரிந்து வழிபட்டது. ஒரு நாள் கால் இடறி தடுக்கி விழுந்ததால், லிங்கத்திலிருந்து ரத்தம் பெருக்கெடுத்தோடியது. சிவ அபராதம் செய்து விட்டோமே என மனம் கலங்கிய காமதேனுவிற்கு ரிஷபாரூடராக காட்சி தந்தருளி அதன் மனக் கவலையைப் போக்கிய இறைவன் என்பதால் 'பசுபதீஸ்வரர்' என்ற திருநாமம் கொண்டார். இதனால் லிங்கத் திருமேனியில் பசுவின் காலடி குளம்பு சுவடுகள் காணப்படுகின்றன. இங்கு அவதரித்த கரூர் தேவர் பல அற்புதங்களை நிகழ்த்திய ஞானி. அவரது அருமை தெரியாத சிலர் அவரை விரட்டிக்கொண்டு வந்தபோது பயந்தவர் போல் ஓடி வந்து இறைவனுடன் ஜோதி வடிவாக கலந்து விட்டார். இறைவனும் அவரது வலது பாகத்தில் அவரைச் சேர்த்துக் கொண்டாராம். இதனால் லிங்க பாணம் வடக்குப் புறமாக சாய்ந்துள்ளது. படைப்புத் தொழிலை மேற்கொண்டுள்ளதால் தாமே பிரதானம் என இறுமாப்பு கொண்ட பிரம்மாவின் கர்வத்தை அடக்க எண்ணிய சிவபெருமான் அவரைச் சோதித்தார். பிரம்மாவின் இரவுப் பொழுது முடிந்து பகல் ஆரம்பித்ததும், படைப்புத் தொழிலைத் தொடங்கியதும், எல்லாம் சிதைந்து போயின. தமது கர்வம் இந்நிலையை உருவாக்கியது எனப் புரிந்துகொண்ட பிரம்மா, தவற்றிற்கு வருந்தி, சிவபெருமானைக் குறித்து தவம் மேற்கொண்டார். பிரம்மா தவம் புரிந்துகொண்டிருக்கும் நேரத்தில், படைப்புத் தொழில் நிற்காதிருக்க, லிங்க பூஜை செய்துகொண்டிருந்த காமதேனு பசுவிற்கு படைக்கும் ஆற்றலை வழங்கினார் சிவபெருமான். தவத்தை முடித்து இங்கு வந்த பிரம்மா, காமதேனு படைப்புத் தொழிலை மேற்கொண்டுள்ளதை கண்ணுற்று, ஒரு பசுவால் இதை செய்ய முடிகிறதென்றால் தாம் கர்வம் கொண்டது அர்த்தமற்றது என உணர்ந்துகொண்டார். அவருக்குக் காட்சி தந்த இறைவன் அவருக்கு ஆசி வழங்கி மீண்டும் படைப்புத் தொழிலை மேற்கொள்ளப் பணித்தார். வெண்ணை மலைக்குப் பக்கத்தில் வேள்விச்சாலை ஒன்றை அமைத்து யாகம் நடத்திய பிரம்மா மீண்டும் படைப்புத் தொழிலை வழங்கிய பசுபதிநாதருக்குக் கோவிலை ஸ்தாபித்தார். வஞ்சி வனத்துக் காவல் தேவதைக்குக் கோவிலும் (தற்போது காளிக் கோவில்) அய்யனாருக்குக் கோவிலும் நிர்மாணித்தார். இங்குள்ள நந்தவனத்தில் பூக்களைப் பறித்து மாலைகளாக்கி பசுபதிநாதருக்குச் சாற்றும் கைங்கர்யத்தைச் செய்து வந்தார் சிவகாமியாண்டார் எனும் சிவபக்தர். அடியார்களுக்குக் கைங்கர்யம் செய்து வந்தார் எறிபத்த நாயனார் எனும் பக்தர். இவ்விருவரும் வாழ்ந்த இத்தலத்திற்கு வந்து சேர்ந்தார் புகழ் சோழர். இவர் உறையூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிபவர். ஒரு நாள் புகழ் சோழனின் பட்டத்து யானை நதிப்புறத்திற்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்ப்பட்ட சிவகாமியாண்டாரின் பூக்குடலையை பிடுங்கிய யானை, மாலைகளைக் காலடியில் போட்டு மிதித்தது. அங்கு வந்துகொண்டிருந்த எறிபத்த நாயனார் இதைக் கண்டு வெகுண்டு யானையின் தும்பிக்கையை தனது வாளால் வெட்டினார். எதிர்த்த படைவீரர்களையும் கொன்றார். யானையைக் கொன்றவரை தண்டிக்கப் புறப்பட்ட புகழ் சோழன், கொன்றவர் சிவனடியார் எனத் தெரிந்ததும் காரணத்தை விசாரித்தான். யானையின் தவற்றிற்கு நீங்கள் வழங்கிய தண்டனை சரியே. ஆனால் அதனைச் சரியாகக் கட்டுக்குள் வைக்காத என்னையும் தண்டியுங்கள் எனக் கூறி தனது உடைவாளை உருவி எறிபத்தரிடம் தந்தான் அரசன். இவ்வளவு நல்ல மனம் படைத்த அரசனின் யானையைக் கொன்றமைக்காக மனம் வருந்திய எறிபத்தர், வாளால் தம்மையே வெட்டிக்கொள்ள முற்பட்டார். சுயநலம் இல்லாத இவர்களின் செய்கைகளினால் சந்தோஷப்பட்ட இறைவன் அவர்களது முன்பாகக் காட்சி தந்து இறந்தவர்களையும் உயிர்ப்பித்துத் தந்ததாக ஸ்தல வரலாறு. இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தை சிவபெருமான் சுக்கிரனுக்கு உபதேசித்த ஸ்தலம். திருவிசைப்பா பாடிய கரூர் தேவர் அவதரித்த ஸ்தலம். எறிபத்த நாயனார் பிறந்த ஸ்தலம். புகழ் சோழ நாயனார் ஆண்ட ஸ்தலம். தேவாரத் திருத்தலம் - பாஸ்கர க்ஷேத்திரம்
மூலவர்: ஸ்ரீ பசுபதீஸ்வரர்் அம்பாள்: கிருபா நாயகி, சௌந்தர நாயகி (இரண்டு). மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ பசுபதீஸ்வரர் எனப்படும் ஆநிலையப்பர். சதுர பீட ஆவுடையாருடன் கூடிய உயரமான லிங்க பாணம். வடக்கு பக்கமாக சற்று சாய்ந்த நிலையில் தரிசனம் தரும் சுயம்பு மூர்த்தம். லிங்க பாணம் சொரசொரப்பாகவும், பசுவின் காலடி குளம்பின் சுவடுகளுமாக காட்சி தருகின்றது. மேடை போன்ற உயரமான அமைப்பில் மூலஸ்தானம் அமைந்துள்ளதால் படிகள் ஏறிச் சென்று தரிசிக்க வேண்டும். பங்குனி மாதம் 14, 15, 16 தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் கொடிமரம் கடந்து மூலவர் மீது படர்ந்து சூரிய வழிபாடு செய்கின்றது. கருங்கல் கொடிமரத்தின் ஒரு பக்கத்தில் புகழ் சோழ நாயனாரின் திருவுருவம் காணப்படுகிறது. கையில் தலையோடு கூடிய தட்டுடன் நிற்கும் சிற்பம். அடுத்து, பசு ஒன்று லிங்கத்திருமேனியை தனது நாவால் வருடுவது போன்றும், பால்மடிக்கு கீழே லிங்கம் இருப்பது போன்றதுமான புடைப்பு சிற்பம் காணலாம். ஆலயத்துள் நுழைந்ததும் கல் தீபஸ்தம்ப தூண் ஒன்றைக் காணலாம். பட்டை பட்டையாக இருக்கும் தூணின் நாற்புறமும் புடைப்பு சிற்பங்களைக் காணலாம். தூணின் மேல் பகுதியில் பத்ம பீடம் உள்ளது. தூணின் நாற்புறமும் புடைப்பு சிற்பங்கள். தீபஸ்தம்பத்தின் அடிப்பகுதியில் பசு ஒன்று லிங்கத்தின் மீது பால் பொழியும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. தூணின் முன்பாக உள்ள பதினாறு கால் மண்டபத்தின் தூண்களில் அருமையான சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. கொடிமரம் மற்றும் நந்தியம் பெருமானை தரிசித்து சற்று கடந்தால் நாம் காணும் தூண்களில் - அழகிய சிலா ரூபங்களாக எறிபத்த நாயனார், முசுகுந்த சக்ரவர்த்தி, புகழ் சோழ நாயனார் மற்றும் திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சுவாமி சந்நிதிக்கு இடது புறமாக அம்பாள் கிருபா நாயகி ஸ்ரீ சக்கர மேரு மீது நின்ற திருக் கோலமாக காட்சி தருகின்றாள். பாசம், அங்குசம், அபய, வரதம் ஏந்திய சதுர் புஜங்கள். இவளே ஆதி நாயகி. அலங்காரவல்லி என்று அழைக்கின்றனர். கிழக்கு பார்த்த சந்நிதி. தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் கோவில் கொண்டுள்ளார் அம்பாள் சௌந்தர நாயகி. உள் பிரகார வலச் சுற்றில் பொல்லாப் பிள்ளையார், நால்வர், அறுபத்திமூவர், வலம்புரி விநாயகர், உமை முருகு இறைவன் என அழைக்கப்படும் சோமாஸ்கந்தர், ஸ்ரீ நாகேஸ்வரர், ஆறுமுகன், காந்திமதி உடனாய கரியமாலீஸ்வரர், பஞ்ச லிங்கங்கள், ஸ்ரீ பைரவர், ஸ்ரீ நடராஜர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். வெளிப் பிரகார வலச் சுற்றில் உள்ள வன்னி மரத்தடியில் பிரம்மா வடக்கு பார்த்து எழுந்தருளியுள்ளார். பிரம்மா இங்கு தவமிருந்து தனது சாபத்தைப் போக்கிக் கொண்டு இறைவனின் அருளாசியைப் பெற்ற நிகழ்வை குறிக்கும் வகையில் இங்கு கோவில் கொண்டதாக ஐதீகம். இங்கு ஜீவசமாதி அடைந்த கரூர் சித்தரின் சமாதிக் கோவில் உள்ளது. சமாதிக் கோவிலின் கோஷ்டம் காகபுஜண்டர், அகஸ்தியர், பதஞ்சலி ஆகியோரின் திருவுருவங்களைக் கொண்டுள்ளது. இங்கு பிரார்த்தித்துக் கொண்டால் சர்ப்ப தோஷம் நீங்கும்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.