அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் (திருவானைக்காவல்)

God Name : ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

தூத்துக்குடி

Call : +91-

சிவபெருமானின் யோக நிலையை கலைத்து ஊடல் செய்த அம்பிகை, அவரால் சபிக்கப்பட்டு பூலோகம் வந்து இத்தலத்தில் தவம் மேற்கொண்டாள். தண்ணீரைத் திரட்டி லிங்கம் ஒன்றை அமைத்த உமாதேவியார் அதை பிரதிஷ்டை செய்து பூஜித்தார் என புராண வரலாறு. தண்ணீரே திரண்டு லிங்கமானதால் அமுதலிங்கம் எனப் போற்றப்படுகிறார். அப்பு என்றால் தண்ணீர் - எனவே பஞ்சபூத ஸ்தலங்களுள் அப்பு ஸ்தலமாக விளங்குகிறது. இதனால் லிங்கம் உள்ள இடத்தில் நீர் இருந்து கொண்டே இருக்கின்றது. பார்வதி தேவியே அகிலாண்டேஸ்வரியாக இத்தலம் வந்து தவமிருந்து, இறைவனை பூஜித்து வழிபட்டாள். அவள் பிரதிஷ்டை செய்த அமுத லிங்கத்திற்குள் இறைவன் எழுந்தருளியுள்ளார். இறைவனை மீண்டும் மணந்து கொள்ளும் பாக்கியம் இன்னும் கிடைக்காததால் இன்றளவும் அவள் நீராய் இருந்து கொண்டு இறைவனை பூஜிக்கின்றாள் என ஐதீகம். அம்பாளே ஸ்வாமியை பூஜித்த ஐதீகத்தைக் காட்ட, இன்றும் உச்சிக்கால பூஜையை நடத்தும் அர்ச்சகர் சேலை கட்டிக் கொண்டு வந்து, கோபூஜை - சிவலிங்க பூஜை ஆகியவற்றை செய்கின்றார். பூஜை முடிந்ததும் நைவேத்திய பொருட்களை பசுவுக்கு ஊட்டி விடுவார். அம்பாள் சந்நிதியிலிருந்து அகிலாண்டேஸ்வரி (அர்ச்சகர் வடிவில்) சிவபெருமானை பூஜிக்க செல்லும்போது அகிலா என்ற பெயர் கொண்ட கோவில் யானை முன்னால் செல்கிறது. இந்த உச்சிக்கால பூஜையில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் காத்திருப்பார்கள். (உச்சி கால பூஜை: காலை 11 மணி முதல் மதியம் 12.00 மணி வரை). ஆதியில் இத்தலம் யானை உலாவும் சோலையாக இருந்ததால், ஆனைக்கா என்றும் கஜாரண்யம் என்றும் பெயர் கொண்டது. யானை வழிபட்டதால் திருவானைக்கா எனப் பெயர். ஜம்பு மகரிஷி என்பவர் கயிலாயம் சென்று சிவபெருமானை தரிசித்தபோது, இறைவனுக்கு ஒரு வெண் நாவல் கனியை தந்தார். அதை சாப்பிட்ட இறைவன், பழத்தின் கொட்டையை உமிழ்ந்தார். அந்த கொட்டையை பிரசாதமாக கருதி விழுங்கி விட்டார் மகரிஷி. அது மகரிஷிக்குள்ளிருந்தபடியே நாவல் மரமாக முளைத்தது. அந்த நாவல் மரத்தின் கீழ் இறைவன் லிங்க வடிவில் எழுந்தருளினார். சிவபெருமான் நாவல் மரத்தின் கீழ் தோன்றியதால் ஜம்புகேஸ்வரம் என்ற பெயரும் ஏற்பட்டது. காவிரி ஆற்றின் செழிப்பான கரையிலுள்ள சோலையின் நடுவே இருக்கும் வெண்ணாவல் மரத்தடியில் எழுந்தருளி இருந்த அழகிய சிவலிங்கத்தை, அனுதினமும் பூஜித்து வந்தது யானை ஒன்று. தனது தும்பிக்கையில் நீர் கொணர்ந்து லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு சிவத்தொண்டு செய்தது. மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மீது விழாதிருக்க வேண்டும் என எண்ணிய சிலந்தி ஒன்று வலை பின்னி பந்தல் போல் அமைத்து பாதுகாத்து, சிவத் தொண்டு புரிந்து வந்தது. கயிலாயத்தில் சிவத்தொண்டு புரிந்து வந்த சிவகணங்களாகிய மாலியவான் மற்றும் புஷ்பதந்தன் ஆகிய இருவருமே, ஒருவர்க்கொருவர் சாபமிட்டுக் கொண்டு, யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்ததாக புராணக் குறிப்பொன்று தெரிவிக்கின்றது. முன்ஜென்ம ஞாபகம் இருந்ததால், இப்பிறவியிலும் சிவத்தொண்டு புரிந்து வந்தனர். தினமும் யானை பூஜை செய்வதும், சிலந்தி வலை பின்னுவதுமாக தொடர்ந்து நடைபெற்று வந்தபோது, ஒரு நாள் யானை சிலந்தி வலையை சிதைத்தது. மீண்டும் சிலந்தி வலை பின்னியது. அடுத்த நாளும் யானை வலையை சிதைத்தது. இப்படியாக தொடர்ந்து நடக்கவே கோபம் கொண்ட சிலந்தி, யானையின் தும்பிக்கைக்குள் போய் கடித்தது. யானை இறந்து வீழ்ந்தது. சிலந்தியும் இறந்தது. இறந்த யானை தினமும் சிவ பூஜை செய்த பலனினால் கைலாயம் சென்றது. இறந்த சிலந்தியோ, மறு பிறவியில் அரசனாகப் பிறந்தது. கோச் செங்கட் சோழன் என்ற பெயர். மாசி மாத சதய நட்சத்திர திருநட்சத்திர நாள். முன் ஜென்ம ஞாபகம் தொடர்ந்ததால், கோச்செங்கட் சோழன், சிவனாருக்கு பல கோவில்கள் கட்டி சிவத் தொண்டு செய்து வந்தான். யானைகள் கோவிலுக்குள் புகாதபடி, மாடக் கோவில்களை எழுப்பினான். சோழன் கட்டிய 78 மாடக் கோவில்களுள் முதல் கோவில் இதுவே. கட்டுமலை மீது கோவில் எழுப்பி, அதற்கு போகும் வழியாக, யானைகள் ஏறி வர முடியாதபடி படிகள் அமைத்து நிர்மாணிக்கப்படும் கோவில்களை மாடக்கோவில்கள் என்பர். கோச்செங்கட் சோழன் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா? பிரசவ காலத்திற்கு தயாராக இருந்த அரசி பெருந்தேவி கமலவதியிடம், சோதிடம் கூறிய சோதிடர்களின் கூற்றுப்படி, ஒரு நாழிகை கழித்து பிறக்கும் குழந்தை, பேரரசனாக இருப்பான் என்பதால், தனது கால்களைக் கட்டி, தன்னை தலைகீழாகத் தொங்க விடச் செய்தாள். ஒரு நாழிகை கழித்துப் பிறந்த குழந்தையை தந்து விட்டு இறந்தாள். தலை கீழாக தொங்கியதில் குழந்தையின் கண்கள் சிவப்பாக இருந்ததால் கோச் செங்கட் சோழன் எனப் பெயர் கொண்டதாக கூறப்படுகிறது. தான் படைத்த பெண்ணின் மீது மோகம் கொண்ட பிரம்மாவிற்கு பாடம் புகட்ட, அம்பிகை சிவனாகவும், சிவபெருமான் அம்பிகையாகவும் மாறு வேடம் தரித்த நிகழ்வை, பிரம்மோற்சவத்தின் போது ஐதீகமாக கொண்டாடுகின்றனர்.
மூலவர்: ஸ்ரீ ஜம்புகேஸ்வரர், அம்பாள்: ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர். குட்டையான பாணமும், சதுர பீட ஆவுடையாரும் கொண்ட அழகிய லிங்கம். மேடுபள்ளங்களுடைய திருமேனி. சுயம்பு லிங்க மூர்த்தம். தரை மட்டத்திற்கு கீழே அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். அப்பு என்றால் தண்ணீர். ஜல க்ஷேத்திரம் என்பதால் வருண திசையாகிய மேற்கு பார்த்து அமைந்துள்ளது மூலஸ்தானம். ஸ்ரீமத் தீர்த்தம் என்னும் ஊற்றெடுக்கும் நீர் மூலஸ்தானத்திற்குள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். ஒன்பது துவாரங்கள் கொண்ட சாளரம் ஒன்று கருவறையின் முன்பாக உள்ளது. இதன் வழியாக மூலவரை தரிசிப்பது சிறப்பு என்கின்றனர். மூலவரின் அருகேயுள்ள ஜம்பு லிங்கத்திற்கே அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. ஜம்பு விருட்சம் எனப்படும் வெண்ணாவல் மரம் நிழற்குடையாக அமையப் பெற்ற விமானம் கொண்ட மூலஸ்தானம். மூலவர் சந்நிதிக்கருகில் விஸ்வரூப கோலத்தில் மஹாலட்சுமி தரிசனம் தருகின்றாள். மூலஸ்தானத்தின் பின்புறமாக ஆதிசங்கரரை காணலாம். அருகே பஞ்சமுக லிங்கம் தரிசிக்கலாம். நான்கு வேதங்கள் நான்கு பக்க முகங்களாகவும், ஆகாயத்தை நோக்கி ஒரு முகமும் இருக்கின்றன. அம்பாள் அகிலாண்டேஸ்வரி சந்நிதிக்கு போகும் வழியில் உள்ள தூண் ஒன்றில் ஏக பாத மூர்த்தியின் சிலை வெகு அழகாக இருக்கின்றது. பிரம்மா, விஷ்ணு, ருத்ராதிகளை தன்னுள் ஒடுக்கி ஏகபாத மூர்த்தியாக காட்சி தருகிறார். ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அன்னை தனிக் கோவில் கொண்டு அருள்பாலிக்கின்றாள். சக்தி பீடங்களுள் ஒன்றான இதை வராஹி பீடம், ஞான பீடம், தண்டினி பீடம் என்றெல்லாம் போற்றுகின்றனர். ஆதியில் அம்பாள் இங்கு தபஸ்வியாகவும், உக்ரமாகவும் இருந்தாள். இவளது உக்ரத்தைக் குறைக்க ஆதி சங்கரர் தாடங்க பிரதிஷ்டை செய்தார். அதாவது சிவ சக்கரம், ஸ்ரீ சக்கரம் ஆகிய இரண்டு சக்கரங்களை செய்து, அம்பாளை வேண்டி, அவளது உக்ரத்தை அதில் இறக்கி, தாடங்கங்களாக (தோடுகளாக) மாற்றி காதில் மாட்டி விட்டார் என ஸ்தல வரலாறு. இவளது சந்நிதிக்கு முன்பாக செல்லப் பிள்ளையாரையும் பின்புறமாக முருகனையும் பிரதிஷ்டை செய்து மேலும் உக்கிரம் குறைய வழி செய்தார். மயில் வாகனப் பிள்ளையார். அம்பாள் சந்நிதியின் தென்மேற்கு மூலையில் உள்ள பஞ்சமுக விநாயகரின் திருவுருவம் அழகாக இருக்கின்றது. ஆயிரங்கால் மண்டபத் தூணிலுள்ள வியாக்ரபாத விநாயகரும், ஊஞ்சல் மண்டபத்தில் காணப்படும் ரிஷப-குஞ்சர சிற்பமும் அவசியம் பார்க்க வேண்டியவை. அற்புதமான வேலைப்பாடுகளையுடையது. குபேர லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்வதை பார்க்க கண் கோடி வேண்டும். குதிரை முகம் கொண்டு, குழந்தை வடிவில் சனீஸ்வரன் தனது தாயாருடனும் மனைவியுடனும் காட்சி தருகின்றார். இத்தலத்தின் ஐந்தாவது சுற்றின் மதிலை திருநீற்றான் மதில் என்றும் அதையொட்டியுள்ள பிரகாரத்தை விபூதிப் பிரகாரம் என்றும் அழைப்பார்கள். விபூதி சித்தர் எனும் சித்த புருஷனாக சிவபெருமானே வந்து இந்த மதிலை கட்டியதாகக் கூறுவர். மதில் கட்டும் பணியாளர்களுக்கு கூலியாக திருநீறையே கொடுத்ததாகவும், அவர்கள் வீடு திரும்பியதும் அந்த திருநீறு பொன்னாக மாறியதாகவும் கூறுவர். தேவாரத்திருத்தலம், பஞ்ச பூத ஸ்தலங்களுள் அப்பு ஸ்தலம், சக்தி பீடங்களுள் ஒன்று.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.