அருள்மிகு ரங்கநாதசுவாமி திருக்கோவில் (ஸ்ரீரங்கம்)

God Name : மூலவர்: ஸ்ரீ ரங்கநாதர், உற்சவர்: அழகிய மணவாளர்

திருக்கழுக்குன்றம் கோவில்

தூத்துக்குடி

Call : +91-

ராவண சம்ஹாரத்திற்கு உதவியாக இருந்தவர்களுக்குத் தமது அன்பையும், பாராட்டுதல்களையும், பரிசுகளையும் தந்துகொண்டிருந்த ஸ்ரீராமர், தமது வம்சாவளியினர் வழிவழியாக வழிபட்டு வந்த தமது குலதெய்வமான ஸ்ரீ ரங்கநாதர் விக்ரகத்தை விபீஷணனுக்குக் கொடுத்தார். இலங்கை செல்லும் வரை வழியில் எங்கும் கீழே வைக்கலாகாது என நிபந்தனை விதித்திருந்தார். அப்படி வைக்க நேர்ந்தால், வைத்த இடத்திலேயே பிரதிஷ்டை ஆகிவிடும் என எச்சரித்திருந்தார். விக்ரகத்துடன் அயோத்தியிலிருந்து புறப்பட்ட விபீஷணன், வெகு தூரப் பயணத்திற்குப் பின், இவ்வூருக்கு அருகில் காவிரி பிரவாகமாக ஓடுவதைக் கண்டதும், அதில் குளிக்க ஆசைப்பட்டான். அவனுக்கு அந்த ஆசையை உண்டாக்கிய விநாயகர், ஒரு பாலகன் வடிவில் எதிரில் போய்க்கொண்டிருந்தார். சிறுவனை அழைத்த விபீஷணன், தான் குளித்துவிட்டு வரும் வரை விக்ரகத்தைக் கையில் வைத்திருக்குமாறும் தரையில் வைக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டான். சம்மதித்த சிறுவன், பாரம் தாங்க முடியாத நிலை ஏற்பட்டால், மூன்று முறை கூப்பிடுவேன், நீங்கள் வந்து வாங்கிக்கொள்ளவில்லை என்றால், தரையில் வைத்து விடுவேன் என்ற நிபந்தனையுடன் விக்ரகத்தைப் பெற்றுக்கொண்டான். காவிரிக் குளியலின் ஆனந்தத்தில் மூழ்கியிருந்த விபீஷணனுக்குத் திடீரென சிறுவனின் நிபந்தனை ஞாபகத்திற்கு வர, அவசர அவசரமாகக் கரைக்கு வந்தான். அங்கே விக்ரகம் தரையில் வைக்கப்பட்டிருந்தது. "நான் மூன்று முறை அழைத்தேன், நீங்கள் வரவில்லை, பாரம் தாங்க முடியாததால், கீழே வைத்துவிட்டேன்" எனக் கூறி, சிறுவனாக வந்த விநாயகர் மலையுச்சிக்கு ஓட்டம் பிடித்தார். தரையில் வைக்கப்பட்ட விக்ரகம் நிலை கொண்டுவிட்டது. விபீஷணன் எவ்வளவோ முயன்றும், அதை அசைக்கக்கூட முடியவில்லை. எம்பெருமான் அங்கேயே சயனித்துவிட்டார். விபீஷணனிடம் ஆண்டிற்கு ஒரு முறை இங்கு வந்து தன்னை சேவிக்கும்படி கூறிவிட்டார் அரங்கன். பெருமாள் தெற்கு நோக்கித் திருமுக மண்டலம் கொண்டிருப்பதே, விபீஷணனுக்குத் தரிசனம் தருவதற்குத்தான் என ஐதீகம். இதனாலேயே விபீஷணன் சன்னிதி ராஜ மகேந்திரன் வீதியில் உள்ளது. முகமதிய படையெடுப்பின்போது, ஸ்ரீ ரங்கநாதருடைய உற்சவ மூர்த்தம் டில்லிக்குச் சென்றுவிட்டது. அந்த உற்சவ மூர்த்தியின் மீது டில்லி பாதுஷாவின் மகள் தன் மனதைப் பறிகொடுத்திருந்தாள். பக்தர்களின் முயற்சியினால் அந்த விக்ரகத்தை மீட்டு வந்தபோது, அதைத் தேடிப் பின்தொடர்ந்து வந்து அரங்கனிடம் ஐக்கியமாகிவிட்டாள் எனத் தல வரலாறு கூறுகிறது. முகமதிய படையெடுப்பில் டில்லிக்கு எடுத்துச் செல்லப்பட்ட உற்சவ விக்ரகம் இல்லாத நிலையில், ஸ்ரீரங்க மாளிகையார் ஒரு விக்ரகம் செய்து பூஜித்து வந்தனர். அவரே மூலவரின் திருவடிகளருகே தற்போது எழுந்தருளியுள்ளார். உறையூரை ஆண்ட நந்த சோழன் மகள் கமலவல்லி, ரங்கநாதரைக் காதலித்ததனால், அரசன் அவளை அரங்கனுக்கே மணம் முடித்து வைத்தான். ஸ்ரீரங்கம் சென்ற கமலவல்லி அரங்கனின் சன்னிதிக்குள் சென்று மறைந்துவிட்டாள். கமலவல்லி நாச்சியாரை மணந்ததால் அரங்கனுக்கு அழகிய மணவாளன் என்ற பெயர் வந்தது எனத் தல வரலாறு கூறுகிறது. வைகுண்ட ஏகாதேசி உற்சவம் மார்கழியில் (டிசம்பர் - ஜனவரி) 21 நாட்கள் சிறப்பாக நடத்துகின்றனர். ராப்பத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதேசி திருநாள் அன்று பெருமாள், துரை மண்டபத்தில் வேதங்கள் சாற்று முறை ஏற்று, பரமபத வாசல் வழியே வந்து, திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளுவார். வைகுண்ட ஏகாதேசியன்று காலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும். பகல்பத்து உற்சவத்தை அத்யயன உற்சவம் என்பார்கள். முதல் நாள் இரவு திருநெடுந்தாண்டகம் பாடுவார்கள். பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி அரையர் சேவை, திருப்பாவை கோஷ்டி ஏற்று திரும்புவார். பெருமாளை ஸ்ரீ பாதம் தாங்கிகள் தூக்கி வருவார்கள். எட்டாம் நாள் ஒய்யாளி சேவை நடைபெறும். பத்தாம் நாள் தீர்த்தவாரி. ஏகாதேசி அன்றும் அதையடுத்த தினங்களிலும் முத்தங்கி சேவை கண்குளிரக் காணலாம். ஆனி மாதம் (ஜூன் - ஜூலை) நடைபெறும் ஜேஷ்டாபிஷேகம் எனும் திருமஞ்சன விழா - மூலிகைகளாலான தைலக் காப்பு - ஒரு மண்டலம் திரையிட்டிருப்பார்கள். தைலக்காப்பு உலர்ந்த பின் மீண்டும் திருமஞ்சனம் செய்து, ஆபரணங்கள், வஸ்திரங்கள் அணிவித்து அலங்காரம் செய்வார்கள். திருமஞ்சனத்திற்கு அடுத்த நாள் பெரிய திருப்பாவாடை, தளிகையாக - பலாச்சுளை, வாழைப்பழம், மாங்காய், தேங்காய், நெய் ஆகியன கலந்து உப்பு சேர்த்து திருவாராதனம் செய்வார்கள். ஆதி பிரம்மோத்ஸவத்தின் (பங்குனி) ஆறாம் நாள் உறையூர் கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவா, ஒன்பதாம் நாள் பிரணய கலகம் - நம்பெருமாள் - தாயார் சேர்த்தி சேவா. கார்த்திகை மாத கைசிக ஏகாதேசியின்போது 365 போர்வைகள் போத்துவார்கள். வண்ண வாசனைப் பூக்களைக் கொண்டு வலை பின்னல் போல உருவாக்கப்பட்ட துப்பட்டா எனப்படும் போர்வையை கோடை திருவிழாவின்போது போத்துவார்கள். திருமங்கை ஆழ்வார் திருமதில் பணி புரிந்த தலம். தொண்டரடி பொடியாழ்வார் நந்தவன கைங்கர்யம் செய்த தலம். வடக்கு திரு வீதிப் பிள்ளை, பிள்ளை லோகாசார்யார், பெரிய நம்பி ஆகியோர் தோன்றிய தலம். பெரியாழ்வார் - 35 பாசுரங்கள், குலசேகர ஆழ்வார் - 31 பாசுரங்கள், திருமழிசை ஆழ்வார் - 14 பாசுரங்கள், தொண்டரடி பொடியாழ்வார் - 55 பாசுரங்கள், திருப்பாணாழ்வார் - 10 பாசுரங்கள், திருமங்கை ஆழ்வார் - 73 பாசுரங்கள், பொய்கை ஆழ்வார் - 1 பாசுரம், பூதத்தாழ்வார் - 4 பாசுரங்கள், பேயாழ்வார் - 2 பாசுரங்கள், நம்மாழ்வார் - 12 பாசுரங்கள், ஆண்டாள் - 10 பாசுரங்கள் (மொத்தம் - 247 பாசுரங்கள்). மதுரகவி ஆழ்வார் தவிர்த்து மற்ற 11 ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்துள்ளனர்.
மூலவர்: ஸ்ரீ ரங்கநாதர், உற்சவர்: அழகிய மணவாளர், தாயார்: ஸ்ரீ ரங்க நாயகி மூலஸ்தானத்தில் ஸ்ரீ ரங்கநாதர் புஜங்க சயனமாக ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கின்றார். மேற்கில் திருமுடி வைத்து கீழ் திசையில் திருவடிகளை நீட்டி, வலக்கையை திருமுடியின் புறம் வைத்தும், இடக்கை திருவடிகளை சுட்டிக் காட்டியபடியும், தெற்கே திருமுக மண்டலம் கொண்டும் சேவை சாதிக்கின்றார். யோக சயனமாக உள்ள அழகிய திருமேனி. மூலஸ்தானம் முழுவதும் ஆக்கிரமித்துள்ளார் ஆதிசேஷன். தர்மவர்மா, ரவிதர்மன், சந்திரன், விபீஷணன் ஆகியோர்க்கு பிரத்யட்சம் ஆனதாக ஐதீகம். மூலஸ்தானத்து விமானம் தங்கத் தகடுகளால் உருவானது. ஓம் என்கிற பிரணவ வடிவில் உள்ளது. ரங்க விமானம் எனப் போற்றப்படுவது. முன்புறமாக பரவாசுதேவர் எழுந்தருளியுள்ளார். விமானத்தின் நான்கு முகப்புகளின் சிறிய கோபுரங்கள் நான்கு வேதங்களைக் குறிக்கும். ஸ்தூபிகள் சாஸ்திரங்களைக் குறிக்கும். மூலவருக்கு முன்பாக அழகிய மணவாளர் என்கிற உற்சவ மூர்த்தி எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். நம் பெருமாள் என்கிற திருநாமமும் உண்டு. உற்சவ மூர்த்தி கொள்ளை அழகுடன் காணப்படுகிறார். தேவியர்கள் உடன் உள்ளனர். மூலவருடைய திருவடிகளருகே ஸ்ரீ ரங்க மாளிகையார் என்ற மூர்த்தி எழுந்தருளி தரிசனம் தருகின்றார். ஸ்ரீ ரங்கநாதரின் சந்நிதி வாசலில் அஷ்டாட்சர படிகளைக் கொண்ட அழகிய மணவாளர் திரு மண்டபம் உள்ளது. மேற்கிலிருந்து கிழக்காக இருபுறமும் படிகள் செல்கின்றன. எதிரே தாமிர கருடன் எழுந்தருளியுள்ளார். இங்குள்ள கண்ணாடி அறையில் உற்சவ மூர்த்தி பிரம்மோற்சவத்தின்போது எழுந்தருளுவார். அடுத்து வருவது 24 தூண்களைக் கொண்ட காயத்ரி மண்டபம். காயத்ரி மண்டபத்திற்கு பின்னால் உள்ள கர்ப்பகிரகத்தை சுற்றியுள்ள முதல் நடைச்சுற்றான தர்மவர்மன் வீதி பிரகாரத்தின் நான்கு மூலைகளில் யோக வராஹர், யோக நரசிங்கர், யோக அனந்தர், நாபி நளினர் ஆகியோர் காட்சி தருகின்றனர். விமானக் காவலர்கள். ஸ்ரீ தேவி, பூ தேவி, நீளா தேவி, ஸ்ரீ ஆண்டாள், சோழவல்லி, சேரகுலவல்லி, மற்றும் துலுக்க நாச்சியார் ஆகிய ஏழு தேவியர்களுடன் அரங்கன் இருக்கும் ஸ்தலம். சயனத்திலுள்ள பெருமாளை சேவிக்கும்போது: முதலில் திருவடிகளையும், பின்னர் நாபிக்கமலத்து பிரம்மனையும், பின் திருமுகத்தையும், அடுத்து சாலிஹோத்ர மகரிஷி திருவடிகளையும் சேவிக்க வேண்டும். ஐந்தாம் பிரகார வாசல் நான்முகன் கோபுர வாசல் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள ரங்கவிலாஸ் மண்டபத்து முகப்பில் ஸ்ரீ ரங்கநாதர் கோவில் கொண்டிருக்கும் தத்துவத்தை அழகிய சுதை சிற்பங்களாக விளக்கியுள்ளனர். சுற்றிலுமுள்ள சந்நிதிகளில் எழுந்தருளியுள்ள ஆழ்வார்களை சேவிக்கலாம். இங்கு ஸ்ரீ ஆண்டாள் சந்நிதியும் உள்ளது. பிரகாரத்தை தாண்டியதும் வரும் அகளங்கன் வீதிச் சுற்றில் ஸ்ரீ சக்கரத்தாழ்வர் சந்நிதி இருக்கின்றது. ஸ்ரீ ரங்க நாயகி தாயார் சந்நிதி கொண்டுள்ளார். தாயார் படி தாண்டா பத்தினி. வைகுண்ட ஏகாதேசி தினத்தன்று, பெருமாள் பரமபத வாசலுக்கு வரும்போது, தனது சந்நிதியில் இருந்தபடியே, தாயார் பெருமாளை தரிசிப்பார். தாயாரின் கைவிரல்கள் தரையில் பதிந்ததின் அடையாளமாக ஐந்து குழிகள் இருக்கின்றன. பங்குனி உத்திரத்தன்று தாயாரின் சந்நிதிக்கு, பெருமாள் எழுந்தருளும் உற்சவம் நடைபெறும். பிரகாரத்து இரு மூலைகளிலும் ஊஞ்சல் மண்டபம் மற்றும் பங்குனி உத்திர மண்டபம் காணலாம். தாயார் சந்நிதியைத் தாண்டி மேலே வந்தால் கம்பர் மண்டபமும் மேட்டழகிய சிங்கர் சந்நிதியும் காணலாம். பிரகாரத்தின் கிழக்கே ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. 500 அடி நீளமும், 160 அடி அகலமும் கொண்டுள்ளது. 951 தூண்கள் தாங்கும் மண்டபம். 49 தென்னைமரத் தூண்களையும் வைத்து ஆயிரங்கால் மண்டபம் என்பர். இதன் நடுவேயுள்ள திருமாமணி மண்டபத்தில் ஸ்ரீ ரங்கநாத ஸ்வாமி இராப்பத்து விழாவின்போது எழுந்தருளி அரையர்கள் மூலம் திருவாய்மொழி பாடல்களைக் கேட்டருள்வார். மேலே சென்றால் கிழக்கு பார்த்த வெள்ளைக் கோபுர வாசல் வரும். அங்கே சேஷராயர் மண்டபம் உள்ளது. இம்மண்டபத்து தூண்களில் பல அற்புதமான சிற்பங்களைக் காணலாம். உடையவர் எனப் போற்றப்படும் ஸ்ரீ ராமாநுஜரின் சந்நிதி, சுற்றின் தென்கோடியில் அமைந்துள்ளது. இவரைத் தானான திருமேனி என்பார்கள். இவரது சரித்திரம் சித்திரங்கள் மூலமாக சந்நிதியில் விளக்கப்பட்டுள்ளது. நான்காம் பிரகாரமான ஆலிநாடன் வீதியை (மஹர் லோகம்) கார்த்திகை கோபுர வாசல் வழியே சென்று அடையலாம். பிரம்மாண்டமான தூண்களைக் கொண்ட கருட மண்டபம் உள்ளது. இதில் பெருமாளை பார்த்தபடி கருடாழ்வர் அஞ்சலி ஹஸ்தராய் அமர்ந்துள்ளார். கூரையை முட்டும் மிகப் பெரிய திருமேனி. பிரகாரத்தின் வடக்கில் உள்ள சந்திர புஷ்கரிணியில் ரங்க விமானத்தில் விழும் மழை நீர் வந்து சேர்வதாக கூறப்படுகிறது. இதன் கரையில் ஸ்தல விருட்சமான புன்னை மரம் இருக்கின்றது. சந்திரன் இத்தீர்த்தத்தில் மூழ்கி சாபம் நீங்கப்பெற்றதாக கூறுவர். சந்திர புஷ்கரிணிக்கு மேற்கிலும் பரமபத வாசலுக்கு வடக்கிலும் ஸ்ரீ தன்வந்த்ரி பகவானின் சந்நிதி இருக்கின்றது. நான்காம் பிரகாரத்திலுள்ள ரங்க வாசல் வழியாக மூலஸ்தானத்திற்கு போகலாம். மூன்றாம் பிரகாரமான குலசேகரன் வீதியான (ஜனோ லோகம்) ஆரிய பட்டாள் வாசல் வழியே போகலாம். பொன்னால் கவசமிடப்பட்ட கொடிக்கம்பம், பலி மண்டபம், மற்றும் டோலோற்சவ மண்டபம் காணலாம். நாழிக் கேட்டான் வாயில் வழியாக ராஜ மகேந்திரன் திருவீதியை (தபோ லோகம்) அடையலாம். விஷ்வக்சேனரை இங்கு சேவிக்கலாம். விஷ்வக்சேனரின் ஒருபுறம் விபீஷணனும் மறுபுறம் ஆஞ்சநேயரும் உள்ளனர். கீழ்ப்புறமாக உள்ள அர்ச்சுன மண்டபத்தில் பகல்பத்து உற்சவம் நடைபெறும். இங்கு சேரகுலவல்லி சந்நிதியும், டில்லி பாதுஷாவின் மகள் முகம்மதிய நாச்சியார் சந்நிதியும் உள்ளன. அர்ச்சுன மண்டபத்தை அடுத்து ரேவதி மண்டபமும், கிளி மண்டபமும் உள்ளன. கிளி மண்டபத்திலிருந்து விமானத்திலுள்ள பரவாசுதேவரை சேவிக்கலாம். முதல் பிரகாரத்தை (சத்ய லோகம்) என்பார்கள். தர்மவர்மன் வீதி ஏழு பிரகாரங்களுக்கு நடுவே உள்ள திருவிண்ணாழிச் சுற்றின் கோஷ்டத்தில் உள்ள தும்பிக்கை ஆழ்வாரும் யோக மாயையான துர்க்காவும் காப்பு செய்கின்றனர். 108 திவ்ய தேசங்களுள் தலையாயது - ஸ்வயம் வயக்த க்ஷேத்ரம் - பஞ்ச ரங்கங்களுள் ஒன்று - பூலோக வைகுந்தம்
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.