அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் (திருப்பட்டூர்)
God Name : மூலவர்: பிரம்மபுரீஸ்வரர், சிறப்பு மூர்த்தம்: பிரம்மா
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
தனக்கும் ஐந்து தலைகள் இருப்பதால், தான் சிவபெருமானுக்கு நிகரானவன் என்ற இறுமாப்பும் செருக்கும் கொண்டார் பிரம்ம தேவன். இந்த செய்கையினால், சிவபெருமானால் தண்டிக்கப்பட்டு தனது ஐந்தாவது தலையையும், படைப்புத் தொழிலையும் இழந்தார் பிரம்மன்.
இழந்த ஆற்றலை திரும்பப் பெறும் முயற்சியில், திருமாலின் யோசனைப்படி, திருப்பிடவூர் எனப்படும் இந்த திருப்பட்டூருக்கு வந்து, மகிழ மரத்தடியில் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். மேலும் நந்தவனம் ஒன்றை அமைத்து அதில் 12 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்தார். பிரம்ம தீர்த்தம் எனும் தீர்த்தம் ஒன்றை உண்டாக்கினார்.
இவரது தவத்தினால் மகிழ்ந்து பிரத்யட்சமான சிவபெருமான் பிரம்மன் கோரிய வரத்தை தந்ததால் பிரம்மபுரீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். சிவபெருமானுடன் சேர்ந்து கொண்டு, பிரம்மனுக்கு அருளியதால் அம்பாளுக்கு பிரம்ம சம்பத் கௌரி என்ற திருநாமம்.
பிரம்மன் தனது ஆணவத்தை தொலைத்துவிட்டு, தவத்தில் மூழ்கியதால், படைப்புத் தொழிலை செய்யும் அதிகாரத்தை மீண்டும் வழங்கிய சிவபெருமான், கர்ம விதியால் கஷ்டப்படுபவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டால், விதி இருப்பின் விதி கூட்டி அருளுக என்ற நிபந்தனையையும் விதித்தார். அதன்படி இங்கு வரும் பக்தர்களின் தலைஎழுத்தை திருத்தி எழுதுகிறார் பிரம்மன்.
தங்களது பிறந்த நாள் அல்லது பிறந்த நட்சத்திர தினத்தன்று, பிரம்மாவிற்கு மஞ்சள் காப்பு செய்து, தர்ப்பை கிரீடம் சூட்டி, 108 புளியோதரை உருண்டைகள் நைவேத்தியம் செய்து வழிபட்டால், நம் தலை எழுத்தை மாற்றி, நற்கதி அருள்வார் பிரம்மா.
வியாழக்கிழமைகளில் காலை 6.00 மணிக்கும் மற்ற நாட்களில் காலை 8.00 மணிக்கும், பிரம்மாவிற்கு அபிஷேகம் நடக்கின்றது.
மூலவர்: பிரம்மபுரீஸ்வரர், சிறப்பு மூர்த்தம்: பிரம்மா, அம்பாள்: பிரம்ம சம்பத் கௌரி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் பாலிப்பவர் பிரம்மபுரீஸ்வரர். சுயம்பு லிங்க மூர்த்தம். உயரமான பாணம் கொண்ட அழகான திருமேனி. மேலே தாரா பாத்திரம், திருவாசி மற்றும் நாகாபரணம் அலங்கரிக்கின்றது. பங்குனி மாதம் 15, 16, 17 தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் லிங்கத்தின் மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. கிழக்கு பார்த்த சந்நிதி.
ருத்ராட்சப் பந்தலின் கீழ் எழுந்தருளியுள்ள நந்தியம்பெருமான் வெகு அழகு. பிரதோஷ நாயகனான இவர் அமர்ந்திருக்கும் மண்டபத்து தூண்களில் நரசிம்ம மூர்த்தியின் அவதார சிற்பங்கள் இருப்பது கூடுதல் சிறப்பு. பிரதோஷ வேளையில் நந்தியம்பெருமானையும் நரசிம்ம மூர்த்தியையும் சேர்ந்தே தரிசிக்கும் பாக்கியம் நமக்கெல்லாம் கிட்டுகிறது.
மாசாத்தனார் எனப்படும் அய்யனார் கையில் ஓலைச்சுவடிகளை ஏந்தியபடி தரிசனம் தருகின்றார். இவருக்கு வஸ்திரம் சாத்தி, புளியோதரை நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்யும் பக்தர்கள் ஏராளம்.
மூலவர்க்கு வடபுறமாக உள்ள தனி சந்நிதியில் எழுந்தருளி அருள் புரியும் பிரம்ம சம்பத் கௌரி மிகுந்த வரப்பிரசாதி. பிரம்மனுக்கு அவர் இழந்த செல்வங்களை எல்லாம் திரும்ப வழங்கியதால் பிரம்ம சம்பத் கௌரி என்ற திருநாமம் கொண்டார். கிழக்கு பார்த்த சந்நிதி.
திருப்பட்டூரை சுற்றியுள்ள கிராமங்களின் விவசாயிகள் ஆடி மாத சமயத்தில் முளைப்பயறு எடுத்துக் கொண்டு வந்து பிரம்ம சம்பத் கௌரியின் சந்நிதியில் வைத்து வழிபட்டு ஊர்வலமாக எடுத்துச் சென்று நடவு நடுகின்றனர்.
அம்மன் சந்நிதியருகே தாயுமானவர் சந்நிதி உள்ளது.
மூலஸ்தானத்தின் வடபுறம் உள்ள பெரிய சந்நிதியில் பிரம்ம தேவர் எழுந்தருளியுள்ளார். தாமரை மலர் மீது பத்மாசனமிட்டு அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றார். கையில் கமண்டலம் வைத்துள்ளார். மிக பெரிய திருவுருவம். ஆறு அடி உயரமும் ஆறரை அடி சுற்றளவும் கொண்ட திருமேனி. கிழக்கு பார்த்த சந்நிதி. மஞ்சள் காப்பில் ஜொலிக்கும் அழகான திருவுருவம். பக்தர்கள் மஞ்சள் அரைத்து தருகின்றனர். நமது தலை எழுத்தை மாற்றி எழுதி நற்கதி அருளக் கூடிய வரப்பிரசாதி. வியாழக்கிழமை தினங்களில் கூட்டம் அலை மோதும்.
பிரம்மா சந்நிதி அருகே, உட் பிரகாரத்தில், பதஞ்சலி முனிவரின் ஜீவ சமாதி காணலாம். பதஞ்சலி முனிவர் லிங்க உருவில் உள்ளார். இங்கு அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்கின்றனர். அருகே பாதாளேஸ்வரர் சந்நிதி இருக்கின்றது.
பிரகார வலச்சுற்றில் கற்பக விநாயகர், பழமலைநாதர், கந்தபுரீஸ்வரர், காலபைரவர், நடராஜர், சூரியன், நர்த்தன கணபதி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
வள்ளி - தெய்வயானை உடனாய ஸ்ரீ சுப்ரமண்யர் அழகுற எழுந்தருளியுள்ளார். இடது கரத்திற்கு கீழே முகம் காட்டி அசுரமயில் இடம் பெற்றுள்ளது. (வலது கரத்துக் கீழே முகம் காட்டி இருந்தால் தேவமயில்). சூரபத்மனை அழிக்க புறப்பட்டபோது, படைகளுடன் இங்கு தங்கி சிவபூஜை செய்து, வெற்றி பெற்றுச் சென்ற ஸ்தலம் எனக் கூறப்படுகிறது. ஸ்ரீகந்தபுரீஸ்வரர் லிங்கத் திருவுருவாக காட்சி தருகிறார்.
உடுக்கை, பாசம், அங்குசம், அமிர்த கலசம் கொண்டுள்ள சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி கொண்டு மேற்கு பார்த்து எழுந்தருளியிருக்கும் கால பைரவர் திருவுருவம், பார்த்துக் கொண்டே இருக்கத் தூண்டும் அழகு. இடுப்பில் சுற்றியுள்ள நாகம் அமிர்த கலசத்தை தாங்கிக் கொண்டிருப்பது போன்று வடிக்கப்பட்டுள்ளது நேர்த்தி. தேய்பிறை அஷ்டமியின் ராகு கால வேளையில், 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் வகையில் 27 மிளகுகளை ஒரு துணியில் கட்டி, அகல் விளக்கில் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி, செவ்வரளி மாலை மற்றும் வடைமாலை சாத்தி, தயிர் சாதம் நைவேத்தியம் செய்து பிரார்த்திக்கின்றனர். வேர்க்கடலை பர்பி அல்லது உருண்டை நைவேத்தியம் செய்யலாம். இப்படி 6 வாரங்கள் தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு தோஷ நிவாரணம், எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுதலை, இழுபறியாக இருக்கும் கோர்ட் கேஸ்களிலிருந்து நல்ல தீர்ப்பு ஆகிய நற்பலன்கள் கிடைக்கும்.
ஸ்தல விருட்சமான மகிழ மரத்தடியில் உள்ள சந்நிதியில் கைலாஸநாதர் எழுந்தருளியுள்ளார். பதினாறு பட்டைகளுடன் கூடிய அழகான லிங்கத் திருமேனி. ஆறடி உயர ஆஜானுபாகு தோற்றம். ஷோடஸ லிங்கம் என்பர். ஆவுடையார் மீது இல்லாமல் தனித்து இருப்பது விசேஷம். பிரம்மா பிரதிஷ்டை செய்த லிங்கம். ஆலய வளாகத்திலுள்ள நந்தவனத்தில் பிரம்மா பிரதிஷ்டை செய்த 12 சிவலிங்கங்களுள் பலர் தனி சந்நிதி கொண்டுள்ளனர். ஏகாம்பரேஸ்வரர், அருணாசலேஸ்வரர், மண்டூக நாதர், ஜம்புகேஸ்வரர், காளத்தி நாதர், சப்தரிஷீஸ்வரர், சுத்த ரத்னேஸ்வரர் ஆகிய லிங்கங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.