அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில் (திருப்பைஞ்சீலி)
God Name : நீலகண்டர்
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
பல்வேறு ஸ்தலங்களுக்கு சென்று இறைவனை தரிசித்துவிட்டு, திருப்பைஞ்சீலி நோக்கி வந்து கொண்டிருந்த அப்பர் பெருமான் களைப்பு மிகுதியினாலும், பசி - தாகம் மேலிட்டதாலும் சோர்வுற்ற போதிலும் விடாது நடந்து வந்து கொண்டிருந்தார். இங்கு கோவில் கொண்டுள்ள இறைவன், அவரது களைப்பைப் போக்க ஒரு பொய்கையையும் ஒரு பசுஞ் சோலையையும் தோற்றுவித்தார்.
பின்னர் ஒரு வயோதிக அந்தணர் வடிவில் வந்த இறைவன், பொதி சோறு சுமந்து கொண்டு, அப்பர் வரும் வழியில் நின்றார். களைப்பு நீங்க பொய்கையில் நீராட வைத்து, தான் கொண்டு வந்திருந்த சோற்றினை உண்ண வைத்து, குடிக்க நீரும் தந்து, அப்பரின் சோர்வை போக்கினார் இறைவன். செல்லுமிடம் எது? என்று அப்பரிடம் கேட்டறிந்த வயோதிக அந்தணர், தாமும் பைஞ்சீலிக்கு செல்வதாகக் கூறி, வழி நடத்தி, பைஞ்சீலியை அடைந்தவுடன் மறைந்து விட்டார் வயோதிக அந்தணர் வடிவிலிருந்த இறைவன்.
அப்பருக்கு சோறு தந்து வழிகாட்டி மறைந்த இடத்தில் சோறுடைத்த ஈஸ்வரன் சந்நிதி உள்ளது.
வசிஷ்ட முனிவர்க்கு நடராஜப் பெருமான் நடனக் காட்சி காட்டியருளிய ஸ்தலம். தென் கயிலாயம், மேலை சிதம்பரம் என்றெல்லாம் போற்றப்படும் ஸ்தலம்.
மார்க்கண்டேயனைக் காப்பாற்ற, திருக்கடையூரில் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு யமனை சம்ஹாரம் செய்தார் அல்லவா? இதனால் மக்கள் இறப்பின்றி, ஜனத்தொகை பெருகலாயிற்று. கிரமமாக நடக்க வேண்டிய காரியங்கள் நடைபெறவில்லையே என வருந்திய பிரம்மன், திருப்பைஞ்சீலி இறைவனிடம் வந்து முறையிட்டார். பிரம்மனின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், இவ்வாலயத்து தென்திசையிலுள்ள பாதாளத்தில் ஒரு பிலத்துவாரம் வழியாக யமனை வரவழைத்தார் இறைவன். யமனுக்கு உபதேசங்களை செய்து, மீண்டும் அவனது பணிகளைத் தொடருமாறு பணித்தார். அப்படி மீண்டு வந்த யமனே இங்கு சந்நிதி கொண்டுள்ளார் என ஸ்தல வரலாறு.
பழைய அம்பிகையின் திருவுருவம் பின்னப்பட்டமையால் புதிய திருவுருவம் ஒன்றை செய்து பிரதிஷ்டை செய்தனர். துறையூர் ஜமீன்தாரின் கனவில் தோன்றி தன்னை அப்புறப்படுத்த வேண்டாம் என்று பழைய அம்பிகை கூறியதால், இரண்டு திருவுருவங்களையும் பிரதிஷ்டை செய்துள்ளனர். அம்பிகை இத்தலத்தில் தவம் மேற்கொண்டிருந்தபோது, தேவலோக மங்கையர்கள் வாழை மரங்களாயிருந்து நிழலைத் தந்து கொண்டிருந்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
தேவாரத் திருத்தலம்.
மூலவர்: நீலகண்டர், அம்பாள்: விசாலாட்சி, நீள்நெடுங்கண்ணி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் நீலகண்டர். ஒளி வீசும் அழகிய தேஜோ மய லிங்கம்.
ஸ்வாமிக்கு ஞீலிவனேஸ்வரர், கதலி வசந்தர், மஹாதேவ பைஞ்சீலி உடையார், ஆரண்ய விடங்கர் ஆகிய பெயர்களும் உண்டு. ஸ்வாமி சந்நிதிக்கு இருபுறமும் உத்தர கயிலாய மூர்த்தி, தட்சிண கயிலாய மூர்த்தி என இரண்டு சோமாஸ்கந்த மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர்.
பெரிய கோபுர வாசலருகே, சோறுடைத்த ஈஸ்வரன் மறைந்ததாக ஐதீகம்.
27 நட்சத்திரங்களை வழிபடும் வகையில் 27 விளக்குகளை பின்புறமாக ஏற்றுகின்றனர்.
முத்துமலைத் தியாகர் பாம்பையும், மானையும் ஏந்தியக் கோலம். இட - வலமாக செதுக்கப்பட்டுள்ள வடிவம் என்பதால் கண்ணாடியில் பார்த்து வணங்கினால் நேராகத் தெரியும். ரத்ன சபையில் எழுந்தருளி நடம் புரியும் நடராஜ மூர்த்தி விசேஷ மூர்த்தியாக உள்ளார். வசிஷ்டருக்கு நடனக் காட்சி காட்டி அருளியவர். மஹாமண்டபத்தில் நடராஜருக்கு கற்பீடம் உள்ளது. இதற்கும் அபிஷேகம் உண்டு.
கோவிலிலுள்ள இரண்டு கொடிக்கம்பங்களை, பெரியாண்டவர் - சின்னாண்டவர் என்று குறிப்பிட்டு வணங்குகின்றனர். கொடிக்கம்பமருகே ஒன்பது குழிகள் உள்ளன. அதில் தினமும் விளக்கேற்றுகின்றனர். இந்த குழிகளே நவக்ரகங்களாக வணங்கப்படுகின்றன.
கிழக்கு பார்த்த சந்நிதியில் ஒரு அம்பிகையையும், தெற்கு பார்த்த சந்நிதியில் ஒரு அம்பிகையையுமாக இரண்டு அம்பிகைகள் எழுந்தருளி தரிசனம் தருகின்றனர். அம்பாள் விசாலாட்சி தெற்கு பார்த்த சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றாள். இவளே பிரதான அம்பிகை. கிழக்கு பார்த்த சந்நிதியில் பழைய அம்பிகை.
வடக்குப் பகுதியில் நீள் நெடுங்கண்ணி.
நான்காம் பிரகாரத்தில் பூங்காவனம் அருகில் மதிலை ஒட்டினாற் போல் பூமிக்கடியில் உள்ள சந்நிதியில் யமதர்மராஜன் எழுந்தருளியுள்ளார். பக்கத்தில் யம தீர்த்தம் இருக்கின்றது.
அம்மன் கோவிலுக்கும் ஸ்வாமி கோவிலுக்கும் இடையே கற்பாறையில் ஞீலி என்ற வாழை மரம் வளர்ந்திருப்பது அதிசயமே. குலைகள் உள்ள வாழை மரங்கள் விருட்சமாக உள்ளன. இவற்றை கோவிலின் உபயோகத்திற்கு பயன்படுத்தலாம். பிற காரணங்களுக்கு பயன்படுத்துவோர் நோய்வாய்ப்படுவர். ஞீலி வாழைக் கனிகளை இறைவனுக்கு நைவேத்தியம் செய்து முடித்ததும், தண்ணீரில் விட்டு விடுகின்றனர்.
இந்த வாழை மரங்களுக்கு கலசம் வைத்து பூஜித்து மலர் மாலை சூட்டி வழிபட்டால் திருமணத்தடை விலகும் எனவும், புத்ர பாக்யம் வேண்டுவோர்க்கு கை மேல் பலன் கிடைக்கும் எனவும் கோவிலின் சிவாச்சாரியார் கூறுகிறார்.
ராவணன் வாசல் எனப்படும் மூன்றாம் கோபுர வாசல் வழி சென்று, கீழ் நோக்கி செல்லும் ஒன்பது படிக்கட்டுக்களையும் கடந்து சென்று மூலவரை தரிசித்தால் கிரக தோஷம் நீங்குவதாக கூறுவர். நவகிரகங்கள் இத்தலத்தில் இல்லை.
ராஜ கோபுரத்திலிருந்து இரண்டாம் கோபுரம் போகும் வழியில் சூத முனிவரின் சமாதி இருப்பதாக கூறப்படுகின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.