திருத்தணிகை அருள்மிகு சுப்ரமண்ய சுவாமி திருக்கோவில் (திருத்தணி)

God Name : அருள்மிகு சுப்ரமண்ய சுவாமி

Call : +91-

வடக்கே பச்சரிசி மலை (வெண்மை), தெற்கே பிண்ணாக்கு மலை (கருமை) என இம் மலையின் இரு மருங்கிலும் மலைத் தொடர்கள் உள்ளன. பக்தர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுவதால் 'க்ஷிணிகாசலம்' என்றும், செல்வங்களை வாரி வழங்குவதால் 'பூரணகிரி' என்றும் பெயர் கொண்டது. சூரபத்மனை போரில் வென்று, போர் முடித்த சினம் தணிந்து இருக்கும் இடம் என்பதால் 'தணிகை மலை' எனப் பெயர் கொண்டது. ஸ்ரீ சுப்ரமண்யர் தானே தேர்ந்து எடுத்து அமர்ந்த மலை. சினம் தணிந்து இருக்கும் ஸ்தலம் என்பதால் இங்கு சூர சம்ஹார நிகழ்வை நடத்திக் காட்டுவதில்லை. தெய்வயானையின் திருமணத்தின் போது, சீதனமாக இந்திரன் தந்த ஐராவதமே இங்கு நிற்கின்றது. தன்னிடம் இருக்கும் செல்வம் குறைய ஆரம்பிப்பதாக இந்திரன் முறையிட்டதால், ஐராவதத்தை தேவலோகம் பார்த்து நிற்க சொன்னதாக கூறுவர். தெய்வயானையின் திருமணத்தின் போது, சீதனமாக தந்த பெரிய சந்தனக் கல்லில், தினமும் சந்தனம் அரைத்து ஸ்வாமிக்கு சாத்துகின்றனர். இதை 'ஸ்ரீ பாதரேணு' என்பர். பக்தர்களுக்கு இதை பிரசாதமாக தருகின்றனர். இன்றளவும் இது தேயாமல் இருப்பது அதிசயம். சூரபத்மனால் கொள்ளையடிக்கப்பட்ட சங்கநிதி - பதும நிதி செல்வங்களை, முருகன் மீட்டு, சிறிது காலம் தணிகை மலையில் வைத்திருந்து, பின்னர் இந்திரனுக்கே திருப்பி அனுப்பியதாக கூறுவர். திருமாலிடமிருந்து சக்ராயுதத்தை கைப்பற்றிய தாராசூரன், அதை திருமால் மீதே ஏவ, அதை தடுத்து தன் மார்பில் தாங்கிய முருகன், அதை திருப்பி திருமாலிடமே ஒப்படைத்தார். சக்கரம் பதிந்த தழும்பு மார்பில் உள்ளது. சிறைப்படுத்தப்பட்ட பிரம்மன் மீண்டும் ஸ்ருஷ்டி வல்லமை பெற தவமிருந்த ஸ்தலம். அவர் உண்டாக்கிய பிரம்ம தீர்த்தமும், பிரம்மேஸ்வரர் எனும் லிங்கமும் மலைப் பாதையில் காணலாம். சரஸ்வதி தீர்த்தம், சரஸ்வதீஸ்வரர், விஷ்ணு தீர்த்தம், இந்திரன் உண்டாக்கிய இந்திர நீலச்சுனை போன்ற தீர்த்தங்களை மலையில் காணலாம். இந்திர நீலச்சுனை தீர்த்தம் முருகனின் அபிஷேகத்திற்காக மட்டுமே. பக்தர்கள் நீராட அனுமதி இல்லை. இந்த சுனையை இந்நாளில் செங்கழுநீர் ஓடை என்பர். இதில் மலரும் நீலோத்பவ மலர் பூஜைக்கு பயன்படுத்தப்படுகிறது. அறுபடை வீடுகளுள் ஒன்று - அநாகத ஸ்தலம்.
மலை அடிவாரம்: முருகப்பெருமான் உண்டாக்கிய தீர்த்தம் ஒன்று உள்ளது. இதனை குமார தீர்த்தம்/சரவணப்பொய்கை என்று கூறுவார்கள். இதன் கரையில் முருகன் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து, ஞான சக்தி வேல் பெற வேண்டியதாக ஐதீகம். சிவலிங்கத்தின் திருநாமம் ஸ்ரீ குமாரேஸ்வரர். வைகாசி விசாகத்தில் இந்த தீர்த்தத்தில் நீராடி, சகல தோஷங்களும் நீங்குவதாக நம்பிக்கை. ஊரின் பல பகுதிகளை சத்திரங்களும், மடங்களும் ஆக்ரமித்து இருப்பதால், மடம்கிராமம் என்று ஆதி காலத்தில் குறிப்பிடுவார்களாம். தணிகை மலை: ஓர் ஆண்டின் மொத்த நாட்களைக் குறிக்கும் விதமாக 365 படிக்கட்டுக்கள் கொண்ட மலை. ஏறும் நடை பாதையும், வாகனங்களில் செல்ல வசதியான பாதையும் கொண்டுள்ள மலை. மலை மீதுள்ள கோவிலில், முருகன் சந்நிதிக்கு வடக்கே, ஆபத்சகாய விநாயகர் எழுந்தருளியுள்ளார். யானையாக வந்து தம்பிக்கு உதவியவர். இவரை தரிசித்த பின்னரே முருகனை தரிசிக்க செல்வார்கள். இரண்டாம் பிரகாரத்தில் - காமாட்சி அம்மன் உடனாய ஏகாம்பரேஸ்வரர், குமாரேஸ்வர லிங்கம், நவ வீரர்கள் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். ஒரு லட்சம் ருத்ராட்சங்களைக் கொண்டு உருவாக்கிய ருத்ராட்ச மண்டபத்தில் ஆறுமுக சுவாமி எழுந்தருளியுள்ளார். உற்சவ மூர்த்திகளை தரிசித்து, பின்னர் பஞ்சாட்சர படிகளேறி, முதல் பிரகாரம் போகலாம். முதல் பிரகாரத்தில் ஸ்ரீ பாலமுருகன் சந்நிதி. ஆருத்ரா தரிசனத்தன்று, வெந்நீர் அபிஷேகம் செய்வார்கள். மூலவர் சந்நிதி சற்று பின்னடங்கியும், வள்ளி - தேவசேனா சந்நிதிகள் சற்று முன்புறமாகவும் 'ஓம்' என்ற எழுத்தின் அமைப்பில் உள்ளது. மூலஸ்தானத்தில் ஞானக் கடவுளான தணிகைநாதன் - வலக்கரத்தில் வேலாயுதம் கொண்டும், இடக்கரத்தை ஊரு ஹஸ்தமாக தொடையில் வைத்தும், கடம்ப மாலை அணிந்தும், சாந்த ஸ்வரூபியாக தரிசனம் தருகின்றார். தென்புறமாக வள்ளியம்மையும், வடபுறமாக தெய்வயானையும் தனித்தனி சந்நிதிகள் கொண்டுள்ளனர். மயில் வாகனத்திற்கு பதிலாக யானை வாகனம் உள்ளது. தேவலோகத்தை பார்த்தப்படி நிற்பதாக ஐதீகம். காதர் எனும் நவாப்பின் துன்பங்களை அகற்றியதால், நன்றிக்கடனாக காதர் கட்டி தந்த நவாப் வாத்ய மண்டபம் மற்றும் காதரீஸ்வரர் கோவில் காணலாம். தங்கத்தேர் மற்றும் வெள்ளித்தேர் இருக்கின்றன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.