ஸ்தல வரலாறு (பெரிய மலை): மகாவிஷ்ணுவின் அவதாரங்களிலேயே பெருமை வாய்ந்ததான நரசிம்ம அவதாரம் பக்தன் பிரஹ்லாதனுக்காக தோன்றியது. அந்த அவதாரக் காட்சியை பார்க்க ஆசைப்பட்ட சப்த ரிஷிகள், இங்கு கடுந்தவம் புரிய முற்பட்டனர். அவர்கள் தவம் செய்ய ஆரம்பித்து ஒரு நாழிகைக்குள் ப்ரத்யட்சமானார் நரசிம்மர். கடிகா எனும் சொல்லுக்கு ஒரு நாழிகை எனப் பொருள். ஒரு நாழிகைப் பொழுதில் தரிசனம் கிடைத்ததாலும், ஒரு நாழிகையேனும் இத்தலத்தில் வழிபட்டால் முக்தி கிடைப்பதாலும், இத்தலத்திற்கு கடிகாசலம் என்றும் திருக்கடிகை என்றும் பெயர் வந்தது. கடிகா என்றால் தமிழில் பூஞ்சோலை என்றும் பொருளுண்டு. "வண்டு வளங்கிளரும் நீள் சோலை வண்பூங்கடிகை" என்று பேயாழ்வார் பாடியுள்ளார்.
ஊர்க்கோவில் (அடிவாரம்): பக்தனுக்கு உசிதமானவற்றை தருபவன் என்பதால் பக்தோசிகன் எனப் போற்றுகின்றனர்.
ஸ்தல வரலாறு (சிறிய மலை): இந்திரத்யும்னன் என்ற மன்னன், அரக்கர்களுடன் போர் புரிந்து வெற்றி அடைய நரசிம்மரின் அருளை வேண்டினான். ஆஞ்சநேயரிடம் தனது சங்கு, சக்கரங்களை கொடுத்து, அரக்கர்களை அழித்து, அரசருக்கு உதவுமாறு பணித்தார் நரசிம்மர். அதன்படி அரக்கர்களை அழித்து இந்திரத்யும்னனுக்கு உதவுகிறார் ஆஞ்சநேயர். மலையிலுள்ள தடாகத்தில் சங்கு, சக்கரங்களை அலம்பி, அதை திரும்ப ஒப்படைக்க, நரசிம்மரிடம் சென்றார் ஆஞ்சநேயர். அதை ஆஞ்சநேயரே தன் வசம் வைத்துக்கொண்டு சிறிய மலையில் எழுந்தருளி, தரிசிக்க வரும் பக்தர்களை ரட்சிக்குமாறு, கூறி விட்டார் நரசிம்மர் என ஸ்தல வரலாறு. அந்த தடாகம் சக்ர தீர்த்தம் எனும் பெயரில் உள்ளது. சின்ன மலையடிவாரத்திலுள்ள கொண்டபாளையத்தில் நிறைய சத்திரங்கள் உள்ளன. பிரார்த்தனைக்காரர்கள் இங்கு ஒரு மண்டலம் தங்கி, பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றனர். 108 திவ்ய தேசங்களில் ஒன்று.