ஆந்திர பிரதேசத்தில் இருந்து புறப்பட்டு க்ஷேத்ராடன யாத்திரையில் இருந்த நாராயண தீர்த்தருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அவரது குருஸ்வாமியின் யோசனையின் பேரில் திருவையாறு அருகேயுள்ள பூபதிராஜபுரம் எனப்பட்ட வரகூர் நோக்கி புறப்பட்டார். அவரை வழி மறித்து திசை திருப்பி நடுக்காவேரிக்கு அனுப்பி வைத்தார் ஆதிசேஷன்.
நடுக்காவேரி எனும் ஊரிலுள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் ஓரிரவு தங்கினார் ஸ்ரீ நாராயண தீர்த்தர். மறு நாள் விடியற்காலையில் வராஹம் ஒன்று தோன்றி நடக்க ஆரம்பித்தது. அதனை பின் தொடர்ந்து சென்ற நாராயண தீர்த்தர் இவ்வூருக்கு வந்து சேர்ந்தார். வராஹம் கோவிலுக்குள் மறைந்தது. நாராயண தீர்த்தரின் தீராத வயிற்று வலியும் குணமானது.
வராஹ வடிவில் ஸ்வாமி, நாராயண தீர்த்தரை இங்கு அழைத்து வந்ததால் இவ்வூர் வராகபுரி என்றும் வரகூர் என்றும் பெயர் கொண்டது. பூபதிராஜன் எனும் சோழ மன்னன் ஆண்டதால் பூபதிராஜபுரம் என ஆதியில் வழங்கப்பட்டது.
ஆதியிலிருந்தே இங்கு சேவார்த்திகளுக்கு சேவை சாதித்து வந்த ஸ்ரீநிவாச வெங்கடேசப் பெருமாள், நாராயண தீர்த்தருக்கு லட்சுமி நாராயணனாக காட்சி தந்ததால், இங்கு மூலமூர்த்தியாக லட்சுமிநாராயணப் பெருமாள் எழுந்தருளியுள்ளார்.
இத்தலத்திற்கு வரவழைக்கப்பட்ட நாராயண தீர்த்தரைக் கருவியாகக் கொண்டு, தனது அவதாரம் முதல் திருக்கல்யாணம் வரை கிருஷ்ண லீலா தரங்கிணியாக பாடக் கேட்டு மகிழ்ந்தாராம் ஸ்வாமி. பாகவதத்தின் தசமஸ்கந்தத்தை பாடலாகவும், இசையாகவும், வசன நடையாகவும் கலந்து நாராயண தீர்த்தர் படைத்த படைப்பே ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி எனக் கூறப்படுகிறது.
நாராயண தீர்த்தர் கிருஷ்ண லீலா தரங்கிணியை பாடிக் கொண்டிருக்கும்போது, மூலஸ்தானத்திலிருந்து திரைக்குப் பின்னால் ஜல் - ஜல் என சலங்கை ஒலி கேட்குமாம். திரைக்குப் பின்னால் ஸ்ரீ கிருஷ்ணர் ஆடிக் கொண்டிருப்பாராம். அதற்கேற்ப தாளம் கொட்டிய ஆஞ்சநேயரே, மண்டபத் தூணில் இடம் பெற்றுள்ள தாளம் கொட்டி ஆஞ்சநேயர்.
ஆவணி மாதம் காயத்ரி ஜப தினத்தன்று தொடங்கி கோகுலாஷ்டமி வரை ஒவ்வொரு நாளும் கிருஷ்ண பகவானின் லீலைகளையும் ருக்மணி கல்யாணத்தையும் ஆடிப்பாடி கொண்டாடுகிறார்கள். ரிக், யஜூர், சாம, அதர்வண வேத பாராயணங்கள் தினமும் தொடர்ந்து நடைபெறும்.
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்திக்கு மறு நாள் வரகூரில் உறியடி உற்சவம் தொடங்கும். இது மிகவும் பிரசித்தமான ஒன்று. வெண்ணைத் தாழி அலங்காரத்தில் ஸ்வாமி புறப்பாடு. நின்ற திருக் கோலத்திலிருந்த ஸ்வாமியை தவழும் வடிவத்தில் மாற்றி விடுவார்கள். வெண்ணையும் பாலும் தளும்பும் வெள்ளிக்குடத்தை இடக்கையால் அணைத்திருப்பார்.
ஒவ்வொரு குடும்பத்தினர் மற்றும் ஒவ்வொரு கோத்திரக்காரர்கள் சேர்ந்து ஆளுக்கொரு வேலையை எடுத்துக் கொண்டு சரிவர செய்வார்கள். வழுக்கு மரத்திற்கு - வெந்தயக் கூழ், புளியங்கொட்டைக் கூழ் மற்றும் விளக்கெண்ணெய் பூசும் வேலையை சிறுவர்கள் செய்கின்றனர். ஐந்தாறு நாட்கள் தொடர்ந்து பூசிய வழுக்கு மரம், உறியடி மூங்கிலருகே நடப்படும். ஊரே கல்யாணக் களை கட்டி விடும். "உறியடி கோவிந்தா" என்று உரக்க கோஷம் போட்டுக் கொண்டு உற்சாகமாக கிளம்பி விடுகின்றனர்.
இரவெல்லாம் விழித்துக் கொண்டிருந்து உறியடி விளையாட்டைத் தொடர்வார்கள். வழுக்கு மரத்தில் ஏறி பிரசாதத்தை கையில் எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். அத்தனை சிரமமான காரியம்.
கடுங்கால் (காளந்தி நதி) எனும் சிற்றாற்றின் கரையில் வெண்ணைக் குடத்துடன் தவழ்ந்த கிருஷ்ணனை வெங்கடேசப் பெருமாளாக அலங்காரம் மாற்றி விடுவார்கள்.
நாராயண தீர்த்தருக்கு ஸ்வாமி தரிசனம் தந்த ஸ்தலம். நாராயண தீர்த்தர் முக்தி அடைந்த ஸ்தலம்.