யாகங்களின் தலைவனான சிவபெருமானை புறக்கணித்து விட்டு தட்சப்பிரஜாபதி, பெரிய யாகம் ஒன்றை செய்தான்.
எடுத்துக் கூறிய ததீசி முனிவர் மற்றும் நந்தியின் பேச்சைக் கேட்காமல் தன்னிச்சையாக யாகத்தை தொடர்ந்தான் தட்சன். இதை தடுக்க வந்த தாட்சாயிணியும் அவமானப்படுத்தப்பட்டாள்.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணின் கோபாக்னியிலிருந்து தோன்றிய வீரபத்ரர் (மஹா அஸ்திரத் தேவர்) யாகசாலைக்கு வந்து, சிவனுக்குரிய அவிர்பாகத்தை தரும்படி கோரினார். அதை தர மறுத்தான் தட்சன்.
ருத்ர மூர்த்தியானார் வீரபத்ரர்.
யாகசாலைக்கு வந்திருந்தவர்கள் பயந்து ஓடினார்கள். அனைவரையும் விரட்டிய வீரபத்ரர் மீது, சக்ராயுதம் வீசினார் விஷ்ணு. அதை பறித்து பதக்கமாக்கி தனது மார்பில் அணிந்து கொண்டார் வீரபத்ரர்.
பகன் எனும் சூரியனுக்கு கண்கள் பறி போயின. பூஷன் எனும் சூரியனுக்கு பற்கள் உடைந்தன. யமனின் கால்கள் வெட்டுப்பட்டன. நிருதி மற்றும் வருணன் இருவரது தோலும் கிழிபட்டன. இந்திரன் குயில் வடிவம் எடுத்து தப்பி ஓடி விட்டான். யாகசாலை முழுவதையும் அழித்து, பின்னர் தட்சனது தலையை வெட்டி வீழ்த்தினார் வீரபத்ரர்.
பார்வதி-பரமேஸ்வரன் ரிஷபாரூடராக தோன்றினார். எஞ்சி நின்றவர்கள் அவரிடம் மன்னிப்பு வேண்டினர். எல்லோருக்கும் மீண்டும் உயிர் வரச் செய்தார் சிவபெருமான். யாகப்பசுவாக நின்ற செம்மறி ஆட்டின் தலையை வெட்டி தட்சனின் உடலில் பொருத்தி, அவனை உயிர்ப்பித்தார் வீரபத்ரர்.
தட்சனை சம்ஹாரம் செய்ததால் இத்தலத்திற்கு தட்சபுரி என்றும் இறைவனுக்கு தட்சபுரீஸ்வரர் என்றும் பெயர் வந்தன. தட்சன் யாகம் செய்த யாகக் குண்டம் இருந்த இடத்தில், இப்போது திருக்குளம் உள்ளது. உத்திரவேதி தீர்த்தம் என்று பெயர்.
அஷ்ட வீரட்டானங்களுள் ஒன்று - தேவாரத் திருத்தலம்.