அன்னை பார்வதி தேவி விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களையும் பொத்தினாள். அகிலம் முழுவதும் இருள் சூழ்ந்தது. அப்படி ஏற்பட்ட இருட்டு அத்தனையும் ஒன்று சேர்ந்து, ஓர் அரக்கனாக உருவெடுத்தது. இருட்டு என்பதை அந்தகாரம் என்பர். எனவே அரக்கன், அந்தகாசுரன் எனப் பெயர் கொண்டான். தவம் செய்து பிரம்மாவிடம் வரங்கள் பல பெற்று, எல்லோரையும் இம்சிக்கலானான்.
அவனை அடக்க வந்த பூத கணங்கள், நந்தித் தேவர் மற்றும் சப்த மாதர்கள் யாவரும் அவனிடம் தோற்றுப் போயினர். இறந்த அரக்கர்களைப் பிழைக்க வைத்துக் கொண்டிருந்தார் சுக்ராச்சார்யார். சுக்ராச்சார்யாரைத் தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார் சிவபெருமான்.
அவனது அட்டகாசங்களுக்கு ஒரு முடிவு கட்டவும், நீண்ட போரை ஒரு முடிவுக்கு கொண்டு வரவும் எண்ணிய சிவபெருமான், தனது வலது தோளிலிருந்து ஒரு சக்தியைத் தோற்றுவித்தார். அந்த சக்தியே சிவனின் அம்சமான வடுக தேவர் என்பர்.
அந்த சக்தி அசுர படைகளை அழித்தது. பின்னர் சிவபெருமான், அந்தகாசுரனைத் தனது சூலத்தால் குத்தித் தூக்கினார். அசுரனின் ரத்தம் கீழே சிந்தி விடாமல் இருக்க காளிதேவி அதை ஒரு பாத்திரத்தில் பிடித்தாள். அப்போது 64 பைரவர்களும், 64 பைரவிகளும், மாத்ரு கணங்கள், டாகினி-யோகினி தேவதைகள், வாஸ்து புருஷன் ஆகியோர் தோன்றியதாக ஐதீகம்.
சூலத்தில் தொங்கி, ரத்தம் முழுவதும் இழந்து, உயிருக்கு போராடும் தருவாயில், அந்தகாசுரன் தன் தவறை உணர்ந்து பணிந்து நின்றான். அவனை மன்னித்து பூதகணங்களின் தலைவனாக ஏற்றுக் கொண்டார் சிவபெருமான், என ஸ்தல வரலாறு. (சூலத்தை ஏந்திய ருத்ரனுக்கு கங்காளன் என்று பெயர்).
சுந்தரரும், சேரமானும் கயிலாயம் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்ற சேதியை அறிந்தவுடன், ஒளவையார் தன்னால் போகமுடியவில்லையே என்ற ஆதங்கத்தில் அவசரமாகவும், வருத்தம் தோய்ந்த தொனியிலும், பிள்ளையாருக்குப் பூஜைகளைச் செய்தார். காரணத்தைக் கேட்டறிந்த பிள்ளையார், சுந்தரரும் சேரமானும் கயிலாயம் போகும் முன்பே, தாமே ஒளவையாரைத் தமது தும்பிக்கையால் கயிலாயத்தில் கொண்டு சேர்த்தார். இதனால் பெரியானை கணபதி எனப் பெயர் கொண்டார்.
பாரி வள்ளலின் மகள்களுக்குத் திருமணம் நடந்த இடம். 63 நாயன்மார்களுள் ஒருவரான மெய்ப்பொருள் நாயனார் ஆட்சி புரிந்த ஊர்.
தமது வடிவத்துள் ஐக்கியப்படுத்திக் கொண்ட சுக்கிரனை, அவனது தோஷத்தை நீக்கி வெளியே விட்டார் சிவபெருமான், என்பதால் சுக்கிர தோஷ பரிகார ஸ்தலம் என்பர். சூரிய தோஷம் இருப்பவர்கள் அதினின்று விடுபட இங்குள்ள சிவசூரியனைப் பூஜிக்கின்றனர்.
தேவாரத் திருத்தலம் - அஷ்ட வீரட்டானங்களுள் ஒன்று - மகாபைரவ ஸ்தானம்.