புள் என்றால் பறவை (ஜடாயு), இருக்கு என்றால் ரிக் (வேதம்), வேள் என்றால் முருகன், ஊர் என்பது ஸ்தலத்தைக் குறிக்கும். சூரியன், ஜடாயு எனும் பறவை, ரிக்வேதம், முருகன் ஆகியோர் பூஜித்ததால் இவ்வூர் புள்ளிருக்கு வேளூர் எனும் பெயரை கொண்டது. சுவாமி வைத்தியநாதராக எழுந்தருளியிருப்பதால் வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் வினை தீர்த்தான் கோவில் எனவும் பெயர் கொண்டது.
தாரகாசுரப் போரில் முருகன் காயமடைந்தவர்களின் காயங்களைப் போக்க அம்மை-அப்பனை வேண்டினார் முருகப் பெருமான். சிவபெருமான் வைத்தியநாதராகக் கிளம்பி வந்தார். அம்பிகை கரங்களில் தைலமும், வில்வ மண்ணும், சஞ்சீவி மூலிகையும் கொண்டு தையல் நாயகியாக உடன் வந்தார்.
வைத்தியநாத சுவாமி தனது சூலத்தினால் ஒரு தீர்த்தம் உண்டாக்கினார். தாரகாசுரப் போரில் கீழே விழுந்துவிட்ட தேவர்களின் அங்கங்களில் இந்தத் தீர்த்தத்தைப் பெய்து, காயங்களை அகற்றிப் பொருத்தினார் சுவாமி. தேவர்கள் உயிர் பெற்றனர். இதுவே அங்க சந்தான தீர்த்தம்.
கயிலையிலிருந்து இத்தலம் வந்த பார்வதி பரமேஸ்வரர் அங்காரகனின் நோயைக் குணப்படுத்தினார். செங்குஷ்டம் தோன்றிப் பொலிவிழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அங்காரக பகவானின் நோயைக் குணப்படுத்தி, அங்காரகனை வணங்குபவர்களுக்கு எந்த நோயும் வராது என்ற வரமும் தந்தார் வைத்தியநாதர். தன்வந்திரிக்கு வைத்திய சாஸ்திரங்களைக் கற்றுக் கொடுத்துவிட்டு, தானே இங்கு நிரந்தரமாகத் தங்கி பக்தர்களை ரட்சிக்கிறார்.
சத்ரு சம்ஹாரம் செய்ய முருகன் இங்கு வேல் பெற்றதாகக் கூறப்படுகிறது. பங்குனி மாத பிரம்மோற்சவத்தின் 5ஆம் நாள், முத்துக்குமரன் வைத்தியநாதரைப் பூஜித்து, செண்டு பெறும் காட்சியை ஐதீகமாகக் கொண்டாடுகிறார்கள்.
அம்பாள் சந்நிதிக்கு எதிரிலுள்ள சித்தாமிர்த தீர்த்தம் மிகவும் விசேஷமானது. காமதேனு தன் பாலால் சுவாமிக்கு அபிஷேகம் செய்து, அது பெருகி வழிந்தோடி, இக்குளத்தில் கலந்திருப்பதாகக் குறிப்பு ஒன்று கூறுகிறது. சித்தர்கள் பலர் இந்தத் தீர்த்தத்தினால் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டுள்ளனர்.
இக்குளத்தருகே தவம் செய்து கொண்டிருந்த சதாநந்தர் எனும் முனிவரின் மீது, பாம்பால் துரத்தப்பட்ட தவளை ஒன்று பாய்ந்தது. தவத்திற்கு இடையூறு விளைவித்த பாம்பு-தவளை இரண்டும், இப்பகுதியில் இல்லாதிருக்கக் கடவது என்று சபித்தார். இன்றளவும் இக்குளத்தில் தவளைகளும், பாம்புகளும் இருப்பதில்லை.
ஆலயத்தின் கீழ்த்திசையில் பைரவ மூர்த்தியும், மேல்திசையில் வீரபத்திரரும், தெற்கே கற்பக விநாயகரும், வடவாயிலில் காளி தேவியும் காவல் புரிகிறார்கள்.
தேவாரத் திருத்தலம், நவக்கிரக ஸ்தலங்களுள் ஒன்று - அங்காரக ஸ்தலம்.
திருச்சாந்துருண்டை
வளர்பிறையில் மங்கலமான நாள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அங்க சந்தான தீர்த்தத்தில் மூழ்கி, நடுமண் எடுத்து, கோவிலின் விபூதி குண்டத்து விபூதியைச் சேர்த்து, சித்தாமிர்த நீர் கலந்து, பஞ்சாட்சர மந்திரம் ஓதி, பிசைந்து முத்துக்குமார சுவாமிக்கு முன்பாக உள்ள குழியம்மியில் போட்டு அரைக்க வேண்டும். பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து, தையல் நாயகி பாதங்களில் வைத்து வணங்க வேண்டும். இதுவே திருச்சாந்துருண்டை. (தயார் செய்த நிலையில் கிடைக்கிறது)