தொழுநோய் கொண்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஒருவனுக்கு, விமோசனம் பெற ஒரு மந்திரத்தை உபதேசிக்கின்றார் முனிவர் ஒருவர். அந்த மந்திரத்தை விடாது சிரத்தையுடன் உச்சரித்து வந்தான் அவன்.
அவனது முன் பிரத்யட்சமான திருமாலிடம் - தான் செய்த பாவச் செயல்களையும், அதனால் அவஸ்தைப் படுவதையும் கூறி அழுதான் அந்த தொழு நோயாளி. முந்தைய ஜென்மத்தில் அவன் கொலை (ஹத்தி) செய்திருந்ததால் இப்படி அவதியுறுகிறான் எனக் கூறி, காவிரியின் ஸ்நான கட்டங்கள் அனைத்திலும் நீராடும்படியும், எங்கு நோய் விலகுகிறதோ, அங்கு விஸ்வரூப தரிசனம் தருவேன் எனவும் கூறி மறைந்தார் திருமால்.
பல ஸ்நான கட்டங்களில் நீராடிவிட்டு மூவலூர் அருகே வந்து நீராடியதும், தொழுநோய் மறைந்து, தேஜஸான மேனியைப் பெறுகிறான். அங்கிருந்து வடதிசையில் வானளாவ நின்று விஸ்வரூப தரிசனம் தருகின்றார் திருமால்.
நோய் நீங்கப் பெற்றவன் பிப்பலர் எனப் பெயர் பெறுகிறான். அவன் ஸ்நானம் செய்த கட்டம் பிப்பலர் கட்டம் எனப் பெயருற்றது.
அவனுடைய ஹத்தி நீங்க வடபால் கோடி காட்டியதாலும், அவனது கோடி பாவங்கள் விலகியதாலும், கோடிஹத்தி என அழைக்கப்பட்டு, பின்னர் காலப்போக்கில் கோழ்குத்தி, கோருஹத்தி என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது.