சத்யலோகத்தில் தாம் நித்ய ஆராதனை செய்து கொண்டிருந்த திருமாலைக் காணாது, பிரம்மதேவர் அவரைத் தேடி பூலோகம் வந்தார். பிரம்மாவின் பக்தியை சோதிக்க வேண்டியே திருமால் இங்குள்ள கதம்ப மரத்தில் ஐக்கியமாகி இருந்தார். அதைத் தெரிந்து கொண்ட பிரம்மன், தமது கமண்டல நீரால் கதம்ப மரத்திற்கு திருமஞ்சனம் செய்தார். பெருக்கெடுத்து ஓடிய திருமஞ்சன நீரே கதம்ப தீர்த்தம் எனப்படுகிறது. பின்னர் திருமாலை வழிபட்டு நற்பலன்கள் பெற்றார்.
பிரம்ம தீர்த்தம் எனப்படும் கதம்ப தீர்த்தக் கரையில் கதம்ப முனிவர் அமர்ந்து கடுந்தவம் புரிந்தார். பிரத்யட்சமான பரந்தாமன், முனிவரை இத்தலத்திலேயே இருந்து கொண்டு சேவித்திருக்கும்படி பணித்தார்.
பிரம்ம தேவருடைய தலையைக் கொய்ததால் தோஷம் கொண்ட சிவபெருமானின் கையில் பிரம்ம கபாலம் ஒட்டிக் கொண்டது. ஒட்டிக் கொண்ட கபாலத்துடன் பல க்ஷேத்ரங்களுக்கு தீர்த்த யாத்திரை மேற்கொண்ட சிவபெருமானின் பிட்சா பாத்திரமாகிய கபாலம் நிறையாமல் குறைவாகவே இருந்தது. எப்போது பிட்சா பாத்திரமாகிய கபாலம் நிறைகிறதோ, அப்போது கபாலம் கையை விட்டு அகலும் என்பது சாப விமோசனம்.
இத்தலத்தை அடைந்தபோது பெருமாள், தனது தேவியான லட்சுமியை நோக்கி, பிட்சை இடுமாறு கூறினார். தாயார் பிட்சையிட்டதும், எப்போதும் நிறையாதிருந்த பிரம்ம கபாலம் நிறைந்து வழிந்தது. இதனால் தாயார் பூரணவல்லி எனும் திருநாமம் கொண்டாள். கபாலமும் கை நழுவியது. தட்சனைக் கொன்ற தோஷமும் சேர்ந்து நீங்கியது. இதனால் இறைவனுக்கு பிட்சாடனர் என்றும், இந்த ஊருக்கு பிட்சாண்டார் கோவில் எனவும் பெயர்கள் வந்தன.
ஜனகர் இத்தலத்தில் பெரிய யாகம் ஒன்றை செய்தார். அப்போது யாகத்திற்காக வைத்திருந்த அவிர் பாகத்தை நாய் ஒன்று புசித்து விட்டதால், புதியதாக அவிர் செய்து யாகத்தை தொடர்ந்தார். அதனால் ஏற்பட்ட தோஷம் நீங்க, ஸ்ரீமந் நாராயணன் ஐக்கியமாகியிருந்த கதம்ப மரத்தை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார் எனவும் கூறப்படுகிறது.
கதம்ப தீர்த்தம் கொண்டதால் கதம்பனூர் என்ற பெயரைக் கொண்டிருந்து, பின்னர் மருவி கரம்பனூர் என்றானதாக கூறுவர்.
சிவகுருவாக - தட்சிணாமூர்த்தியும், விஷ்ணு குருவாக - வரதராஜரும், பிரம்ம குருவாக - பிரம்மனும், சக்தி குருவாக - சௌந்தர பார்வதியும், ஞான குருவாக - தண்டபாணியும், அசுர குருவாக - சுக்ரனும், தேவ குருவாக - ப்ரஹஸ்பதியும் சேர்ந்து சப்தகுரு (7) ஸ்தலமாக விளங்குகிறது.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று.