மகாபலி சக்ரவர்த்தியின் கொட்டத்தை அடக்க திருமால் வாமன வடிவம் கொண்டு மகாபலியிடம் சென்று, தான் தியானம் செய்ய சிறிதளவு நிலப்பரப்பு வேண்டும். ஆதலால் மூன்றடி மண் தானமாகத் தரும்படி கேட்டார். சக்ரவர்த்தியும் மூன்றடி மண் தானமாகத் தர சம்மதித்தார்.
தன் காலால் மூன்றடி மண் அளந்துகொள்வதாகக் கூறிய வாமனன், திரிவிக்ரம வடிவம் கொண்டு, ஒரு திருவடியால் மேலுலகத்தையும், மற்றோர் திருவடியால் பூலோகத்தையும் அளந்துவிட்டு, மூன்றாவது அடிக்கு இடமில்லை என, மகாபலியின் சிரசில் வைத்து, அவனை பாதாளம் சேர்த்ததாக புராண வரலாறு.
பெருமாளின் திருவடியின் கீழே அகப்பட்டுக் கொண்ட பலி சக்கரவர்த்தி, திரிவிக்ரம கோலத்தை தரிசிக்க முடியவில்லையே என வருந்தி, பிரார்த்தனை செய்ததால் இத்தலத்தில் உலகளந்த பெருமாள் கோலத்தை காட்டியதாக ஸ்தல வரலாறு. அப்போதும் பலி சக்ரவர்த்தி முழுமையாகப் பார்க்க முடியவில்லையே என ஆதங்கப்பட்டதால் ஆதிசேஷ வடிவில் காட்சி தந்தாராம்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று.