ஸ்தல வரலாறு - உச்சி பிள்ளையார் கோவில்
ராவண சம்ஹாரத்திற்கு உதவியாக இருந்தவர்களுக்கு - தமது அன்பையும், பாராட்டுதல்களையும், பரிசுகளையும் தந்து கொண்டிருந்த ஸ்ரீ ராமர், தமது வம்சாவளியினர் வழிவழியாக வழிபட்டு வந்த தமது குலதெய்வமான ஸ்ரீ ரங்கநாதர் விக்ரகத்தை விபீஷணனுக்கு கொடுத்தார்.
இலங்கை செல்லும் வரை வழியில் எங்கும் கீழே வைக்கலாகாது என நிபந்தனை விதித்திருந்தார். அப்படி வைக்க நேர்ந்தால், வைத்த இடத்திலேயே பிரதிஷ்டை ஆகிவிடும் என எச்சரித்திருந்தார்.
விக்ரகத்துடன் அயோத்தியிலிருந்து புறப்பட்ட விபீஷணன், வெகு தூர பயணத்திற்குப் பின், இவ்வூருக்கு அருகில் காவிரி பிரவாகமாக ஓடுவதைக் கண்டதும், அதில் குளிக்க ஆசைப்பட்டான். அவனுக்கு அந்த ஆசையை உண்டாக்கிய விநாயகர், ஒரு பாலகன் வடிவில் எதிரில் போய்க் கொண்டிருந்தார். சிறுவனை அழைத்த விபீஷணன் தான் குளித்து விட்டு வரும் வரை விக்ரகத்தை கையில் வைத்திருக்குமாறும், தரையில் வைக்கக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டான்.
சம்மதித்த சிறுவன் பாரம் தாங்க முடியாத நிலை ஏற்பட்டால், மூன்று முறை கூப்பிடுவேன், நீங்கள் வந்து வாங்கிக் கொள்ளவில்லை என்றால், தரையில் வைத்து விடுவேன் என்ற நிபந்தனையுடன் விக்ரகத்தைப் பெற்றுக் கொண்டான்.
காவிரிக் குளியலின் ஆனந்தத்தில் மூழ்கியிருந்த விபீஷணனுக்கு திடீரென சிறுவனின் நிபந்தனை ஞாபகத்திற்கு வரவே அவசர அவசரமாக கரைக்கு வந்தான். அங்கே விக்ரகம் தரையில் வைக்கப்பட்டு இருந்தது. நான் மூன்று முறை அழைத்தேன் நீங்கள் வரவில்லை, பாரம் தாங்க முடியாததால், கீழே வைத்து விட்டேன் எனக் கூறி சிறுவன் மலையுச்சிக்கு ஓட்டம் பிடித்தான்.
தரையில் வைக்கப்பட்ட விக்ரகம் நிலை கொண்டு விட்டது. விபீஷணன் எவ்வளவோ முயன்றும், அதை அசைக்கக் கூட முடியவில்லை. எம்பெருமான் அங்கேயே சயனித்து விட்டார். இதனால் கோபம் கொண்ட விபீஷணன், சிறுவனை துரத்திக் கொண்டு மலைக்கோட்டை உச்சி வரை வந்து, சிறுவனைப் பிடித்து, அவனது தலையில் குட்டி விட்டான். அடுத்தகணம், சிறுவன் விநாயகராக மாறி விபீஷணனுக்கு ஆசி வழங்கினார். விபீஷணன் குட்டியதால் ஏற்பட்ட வடு இன்றளவும் பிள்ளையார் தலையில் உள்ளது.
இங்கிருந்தபடியே இலங்கையை பார்த்து அனுக்கிரகம் செய்யும் விதத்தில் தென் திசை நோக்கியே விக்ரகத்தை வைத்துள்ளதாகவும், அவர் கோவில் கொண்ட இடம் ஸ்ரீரங்கம் எனப்படும் என்றும் கூறி விநாயகர் மறைந்தார் என ஸ்தல வரலாறு.