இந்திராதி தேவர்கள் ஒருங்கே கூடி நடத்திய மிகப் பெரும் யாகத்தை நடத்தி எஜமானனாக செயல்பட்ட விஷ்ணு செருக்குற்று, தேவர்களை அடக்கி ஆளலாம் என எண்ணினார். இத்தலமருகே வந்ததும் அவரது வலிமை ஒடுங்கியது. வில்லைத் தரையில் ஊன்றி அதன் மீது தலை சாய்த்து அயர்ந்து தூங்கி விட்டார்.
பிரஹஸ்பதியின் யோசனைப்படி தேவர்கள் கறையான் வடிவம் கொண்டு பூமியைக் குடைந்து கொண்டு சென்று, பெரிய புற்றை உருவாக்கி வில்லின் நாணை அறுத்து விட்டனர். வில் நிமிர, விஷ்ணுவின் தலை தெறித்தது. பாதாளத்திலிருந்து பரமன் புற்றிடங்கொண்டு, சிவலிங்கமாக காட்சி தந்தார் என ஸ்தல வரலாறு.
இதனால் இறைவனுக்கு புற்றிடங்கொண்டார், வன்மீகநாதர் என்றெல்லாம் திருநாமங்கள். அஸ்வினி தேவர்களைக் கொண்டு அறுபட்ட தலையைப் பொருத்தச் சொல்லி, திருமாலை மீண்டும் எழச் செய்ததாகவும் வரலாறு.
'ஹ்ரு' என்றால் போக்குகிறது எனப் பொருள். 'ஹ்ரு' என்ற பதத்திலிருந்து தோன்றியது 'ஹரன்'. அதாவது அரன். அரனை அடையும் மார்க்கம் என்ற பொருளில் 'அரனெறி' என்றாகி, திருமூலட்டானத்தையும் வன்மீகநாதரையும் குறிப்பதாக ஸ்தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரநெறி என்பது வேறு.
வருணனிடம் வளர்ந்து வந்த திருமகள், மது-கைடப அசுரர்களை வென்ற திருமாலின் பெருமைகளை கேட்டறிந்து, அவரையே மணக்க விரும்பி, திருமூலட்டானம் எனும் இத்தலத்தை அடைந்து, தவம் மேற்கொண்டாள். பிரத்யட்சமான இறைவன் அவள் கோரிய வரத்தை தந்தருளினார். மேலும், தனது பெயரிலேயே இத்தலம் விளங்க வேண்டும் என்று கோரியதால், இத்தலம் கமலாலயம் என்று அழைக்கப்படுகின்றது.
தனக்கு ஒரு அழகிய மகன் வேண்டுமென்று ஆசை கொண்ட திருமால், சிவபெருமானை வேண்டி, கடுந்தவம் மேற்கொண்டார்.
உனக்குப் பிறக்கும் புத்திரன் விதியால் அழிவான் என சபித்து விடுகிறாள் உமையவள். அதன் பின்னர் திருமால் செய்வதறியாது திகைத்து யோசித்ததில் ஒரு எண்ணம் உருவாயிற்று. சிவபெருமான் - உமா தேவியார் - குமரன் ஆகிய மூவரையும் ஒரே ஆசனத்தில் அமர வைத்து பூஜித்தார். இதனால் மகிழ்ந்து, ஐயன் - அம்பிகை - குமரன் ரிஷபத்தின் மீது காட்சி தந்தனர். சினம் குறைந்த பார்வதி, விதியால் அழியும் மகன் நெற்றிக் கண்ணனால் மீண்டும் உயிர் பிழைப்பான் என வரமளித்தாள். (அந்த மகன் மன்மதன்) சஹ-உமா-ஸ்கந்த கோலம் - இதுவே சோமாஸ்கந்தர் எனப்படுகிறது.
இந்த சோமாஸ்கந்தர் திருமேனியை, திருமால் தன் நெஞ்சக் கோவிலில் நிறுவி வழிபட்டு பூஜித்து வந்தார்.
மூச்சுக்காற்றை உள்ளிழுத்தலும் வெளிவிடுதலும் நிகழும்போது, அதற்கேற்றவாறு பெருமானும் அசைந்து ஆடுவதே அஜபா நடனம் ஆகும். அதாவது, எந்த சப்தமுமில்லாமல் மென்மையாக ஆடிக் கொண்டிருப்பது.
தனது நெஞ்சத்தில் கோவில் கொண்ட சோமாஸ்கந்தரின் திருவுருவத்தை தேவசிற்பி விஸ்வகர்மாவிடம் விளக்கி, அழகிய வடிவமாக வடித்து பூஜித்து வந்தார்.
தேவலோகத்தில் அடுக்கடுக்காக ஏற்பட்ட பிரச்னைகளிலிருந்து விடுபடவும், அசுரர்களிடமிருந்து விடுபடவும், திருமாலின் உதவியை நாடினான் இந்திரன். தான் பூஜித்து வந்த சோமாஸ்கந்தரின் வடிவமான தியாகேசரை இந்திரனுக்குக் கொடுத்தார் திருமால். தியாகேசரை தேவலோகத்தில் எழுந்தருளச் செய்து பூஜித்து வந்தான் தேவேந்திரன்.
பிறிதொரு சமயம் வலன் எனும் அசுரன் தேவலோகத்தின் மீது படையெடுத்தான். அவனை வெற்றி கொள்ள முடியாமல் தோற்றுப் போன இந்திரன், திருவாரூரை ஆண்ட தனது நண்பனான சோழ சக்ரவர்த்தியின் உதவியை நாடினான். குரங்கு முகம் கொண்டதால் முசுகுந்த சக்ரவர்த்தி என்ற பெயரையுடைய சோழன், மாபெரும் வீரன். போரில் வலனை தோற்கடித்து ஓடச் செய்தான்.
பரிசாக எது வேண்டுமானாலும் கேள், தருகிறேன் என்று முசுகுந்தனிடம் கூறிய இந்திரனிடம், தியாகேசரை தரும்படி வேண்டினான் முசுகுந்தன். தியாகேசனை பிரிய மனமில்லாத இந்திரன், "இது திருமால் வழிபடும் மூர்த்தம், அவரது ஒப்புதல் இல்லாமல் தரமுடியாது" எனக் கூறி திருமாலிடம் போனான். திருமாலும் சம்மதித்து விட்டார்.
கடைசியாக ஒரு தந்திரம் செய்ய முனைந்த இந்திரன், ஆறு தியாகேசரின் திருவுருவங்களைச் செய்து அசலான அஜபா தியாகேசனோடு வைத்து, "இந்த ஏழில் உனக்கு வேண்டிய தியாகேசரை எடுத்துக்கொண்டு போ" எனக் கூறினான்.
உண்மையான சிவபக்தனான முசுகுந்தன், அசல் தியாகராஜரின் திருவுருவத்தை அடையாளம் காட்டி, 'வா' என அழைத்தான். முசுகுந்தனின் திறமையை மெச்சிய இந்திரன் தனது தவறை உணர்ந்து, அந்த ஏழு திருவுருவங்களையும் முசுகுந்தனுக்கே தந்து விட்டான்.
ஏழு தியாகேசர் திருவுருவங்களுடன் பூலோகம் வந்த முசுகுந்த சக்ரவர்த்தி, விஷ்ணு பூஜித்த அஜபா தியாகராஜரை மாசி மாத ஹஸ்தத் திருநாளன்று திருவாரூரில் பிரதிஷ்டை செய்தான். மற்ற ஆறு திருவுருவங்களை மற்ற ஆறு ஊர்களில் பிரதிஷ்டை செய்தான். இந்த ஏழு ஊர்களையும் சேர்த்து சப்த விடங்க ஸ்தலங்கள் என்று கூறுவார்கள்.
'விடங்க' என்றால் - கை புனையாது தோன்றியது, உளி கொண்டு செதுக்கப்படாதவை என்று பொருள்.
திருமகளும், நிலமகளும் வழிபட்டு வரம் பெற்றதால் திரு ஆரூர் எனப் பெயர் கொண்டது. மனு நீதி சோழன், பசுவுக்கு நீதியை வழங்க, தனது மகன் வீதி விடங்கனை தேர்காலில் கிடத்தி, தேரை அவன்மீது ஓட்டியபோது, தியாகப் பெருமானே விடை மீது தோன்றி காட்சியளித்து உயிர்ப்பித்தார் என ஸ்தல வரலாறு.
ஆடகேஸ்வரத்தின் தென் பாகத்தில் ஸ்தல விருட்சமான பாதிரி மரம் இருக்கின்றது. இதனடியில் இரண்டு தந்தங்களும் இல்லாத பிள்ளையாரை தரிசிக்கலாம்.
விடங்க ஸ்தலங்கள் ஏழினுள் மூலாதாரமாக விளங்கும் ஸ்தலம். சக்தி பீடங்களுள் ஒன்றாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களுள் பிருத்வி (மண்) எனவும் போற்றப்படும் தலம். இத்தலத்தில் பிறந்தவர்கள் முக்தி அடைவார்கள். மனு நீதி சோழனுக்கு இறைவன் காட்சி தந்த ஸ்தலம்.
தேவாரத்திருத்தலம் - சக்தி பீடம் - சப்த விடங்க ஸ்தலங்களுள் பிரதானமானது - பஞ்ச பூத ஸ்தலங்களுள் பிருத்வி.