ஹிரண்யாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய மூன்று அசுரர்கள், தத்தம் பறக்கும் கோட்டைகளில் பறந்து கொண்டு அனைவரையும் துன்புறுத்தி வந்தனர். இவர்களின் ஆணவத்தை ஒடுக்கி புத்தி புகட்ட எண்ணி, சிவபெருமான் கோபாவேசமாகப் புறப்பட்டார்.
மேருமலையை வில்லாக்கி, வாசுகி பாம்பை நாண் ஆக்கி, விஷ்ணு அம்பாக மாற, முப்புரங்களை வெல்ல சிவபெருமான் வில்லேந்திய வீரனாக நின்ற எழிற்கோலம் காரணமாக திருவிற்கோலம் எனப் பெயர் கொண்டது இவ்வூர்.
தேரின் அச்சு முறிந்தபோது ரிஷப வடிவம் கொண்டு தாங்கிய திருமால் கரிய மாணிக்கப் பெருமாள் என்ற திருநாமத்துடன் இவ்வாலயத்தின் தெற்கில் கோயில் கொண்டுள்ளார்.
(முப்புராதிகளை அழிக்க சிவபெருமான் வில் ஏந்தி புறப்பட்ட இடம் திருவிற்கோலம். விற்கோலத்தைக் கண்டு தேவர்கள் மகிழ்ந்தது இலம்பையங்கோட்டூர் எனுமிடம். தேர் அச்சு முறிந்தது அச்சிறுப்பாக்கம் எனுமிடம். திரிபுராதிகளை எரித்தது திருவதிகை எனுமிடம்.)
கர்மவினையைக் கடந்து சிவகதி அடையும் விதத்தைப் பற்றி நைமிசாரண்யத்தில் தவமிருந்து வந்த ரிஷிகளிடையே விவாதம் நடைபெற்றது. தவமே உகந்தது என வசிஷ்டரும், அறமே சிறந்தது என கௌதமரும், தானமே பிரதானம் என காசிபரும், வாய்மை என பரத்வாஜரும் விவாதித்தனர். அப்போது அங்கு வந்த சூதக முனிவர் - ஞானத்தால் மட்டுமே ஈஸ்வர க்ருபை கிட்டும் எனவும், அந்த ஞானத்தை அடைய சிவ ஸ்தலங்களுக்குச் சென்று வழிபடுவதே உகந்தது என்றும் அறிவுரை கூறினார். அத்தகைய சிவஸ்தலங்களுள் மேன்மையானது கூவம்பதி என்று மேலும் எடுத்துரைத்தார் என ஸ்தல வரலாறு.
சித்திரையில் பிரம்மோற்சவம் கொண்டாடுகின்றனர். 6வது நாள் காளிக்கு அருளிய நிகழ்ச்சி, 10ம் நாள் காளி சிவபூஜை செய்வது, அவளுக்காகப் பெருமான் காப்பு நடனத்தை ஆடிக் காட்டுவதும் ஐதீகமாகக் கொண்டாடப்படுகிறது.
தேவாரத் திருத்தலம்.