சிவசாரூபம் (அதாவது சிவனைப் போன்ற வடிவம்) பெறவேண்டி திருமால் இத்தலம் வந்து சிவபெருமானைக் குறித்து தவம் இருந்தார். பிரத்யட்சமான சிவபெருமான், இத்தலத்திற்கு திருஞானசம்பந்தர் வந்து பதிகம் பாடும்போது சிவசாரூபம் அடையலாம் எனக் கூறினார். சிவனடியார்களின் பெருமையும், சிவ நாமமும் சிவசாரூபத்தைப் பெற்றுத் தரும் என்பதை அனைவர்க்கும் புரிய வைக்கவே திருமால் தொடர்ந்து தவம் மேற்கொண்டார். ஞானசம்பந்தர் இங்கு வந்து பதிகம் பாடியதும் திருமால் சிவசாரூபம் பெற்றார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
ஞானசம்பந்தரின் பாடலைக் கேட்டு உருகிய திருமால், தனது வடிவத்திலிருந்து விடுபட்டு சிவலிங்க வடிவம் பெற்று ஓதஉருகீசர் எனத் திருநாமம் கொண்டு தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளார்.
தெருமுனையில் இப்பாடலை உற்றுக் கேட்ட முத்தீஸ்வரர் கோவிலொன்றும் உள்ளது. கிழக்கு கோடியில் நின்று கொண்டு ஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் சரிவர காதில் விழாததால், சிவபெருமான் இங்கு எழுந்தருளி உற்றுக் கேட்டாராம். இதனால் உற்றுக் கேட்ட முத்தீஸ்வரர் என்ற பெயர் வந்தது.
1400 ஆண்டுகளாக இருக்கும் மிகப் பழமையான கோயில். 'தளி' என்றால் கோவில். மேற்கு நோக்கி இருக்கும் தளியில் கோவில் கொண்ட ஈஸ்வரன் என்பதால் மேற்றளீஸ்வரர். 'திரு' சேர்த்து திருமேற்றளீஸ்வரர் என்பர். இதன் பொருள் புரியாமல் நாளடைவில் மருவி தெருமேட்டீசர் என்றாக்கி விட்டனர். தேவாரத் திருத்தலம்.