நான்கு வேதங்களையும் அசுரர்கள் கவர்ந்து சென்றபோது, விஷ்ணுமூர்த்தி இத்தலத்தில் நீர் வடிவாக நின்று இவ்விறைவனை வழிபட்டார் என்றும், தாமரை மலரின் நடுவே வேத வடிவாகத் தோன்றி சிவபெருமான் காட்சி தந்தார் என்றும், இதனால் 'வேத நாயகர்' - 'திருமறைநாதர்' என்ற பெயரைக் கொண்டார் என்றும் புராண வரலாறு கூறுகிறது.
ஹனுமனின் தந்தையான வாயு வழிபட்டதால் 'திருவாயுவூர்' எனப் பெயருற்று, நாளடைவில் மருவி 'திருவாதவூர்' என்றானது. வாத நோயினால் அவதிப்படுபவர்கள் இவ்விறைவனைப் பிரார்த்தித்து வேண்டிக்கொண்டால் குணமடைவர். இதனால் 'வாதவூர்' என்ற பெயர் வந்ததாகக் கூறுவர்.
நல்ல எண்ணெயும் பச்சைக் கற்பூரமும் கலந்து, மூலவருக்குத் தைலாபிஷேகம் செய்து, அந்த எண்ணெயைப் பயன்படுத்தினால் வாதப் பிடிப்பு, தீராத மூட்டுவலி ஆகியன நீங்கும்.
மாண்டவ்ய முனிவரின் சாபத்தைப் பெற்று கால் முடமாகிப் போன சனீஸ்வரன் இவ்விறைவனை வழிபட்டு சாப விமோசனம் அடைந்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது. இங்கு சனீஸ்வரன் ஒரு காலை மடக்கி வைத்து உட்கார்ந்த நிலையில் காணப்படுகிறார். முடக்குவாதம் நீங்க இவரை வழிபடுகின்றனர்.
பிரம்மாவின் ஆரணகேத யாகம் குறைவின்றி நடக்க அம்பிகை ஆசிர்வதித்தாள். இதனால் 'ஆரணவல்லி' என்ற பெயரையும் கொண்டாள்.
அசுரர்களுக்கு அடைக்கலம் தந்த பிருகு முனிவரின் மனைவி, அவர்களை திருமாலிடம் ஒப்படைக்க மறுத்ததால், முனிவரின் மனைவியின் சிரசை தனது சக்ராயுதத்தால் திருமால் துண்டித்தார். இதனால் சாபம் பெற்று, இவ்விறைவனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
கபில முனிவரின் வீரஹத்தி தோஷம் நீங்கப் பெற்ற ஸ்தலம் இது. முதல் யுகத்தில் ஆதித்தனும், இரண்டாம் யுகத்தில் சந்திரனும், மூன்றாம் யுகத்தில் அக்னியும், நான்காம் யுகத்தில் வரதராஜனும் வழிபட்ட ஸ்தலம் இது.
மாணிக்கவாசகரும், கபிலரும் பிறந்த ஸ்தலம் இது.
பிரம்ம தீர்த்தம், சிவ தீர்த்தம், அக்னி தீர்த்தம், பைரவர் தீர்த்தம், வாயு தீர்த்தம், கபில தீர்த்தம் ஆகிய ஏழு வகையான தீர்த்தங்கள் இங்கு உள்ளன.
சங்காபிஷேகம் செய்யும் முறை இங்குதான் தோன்றியது என்கிறார் சோமசுந்தர பட்டர்.
கோவிலுக்கு முன்னால் உள்ள பெரிய ஏரிக்கு 'விஷ்ணு தீர்த்தம்' எனப் பெயர். இதன் மதகில் உள்ள சட்டத்தில் புருஷா மிருகம் சிலை ஒன்றைக் காணலாம். ஏரியைத் தூய்மைப்படுத்தவும், ஊரைக் காக்கவும் இருக்கும் சிலை இது.
நூறு தேங்காய்களையும் வேறு சில பொருட்களையும் சுட்டெரித்துக் கருப்பாக்கிப் பொடி செய்து, புருஷா மிருகத்தின் மீது பூசி அதைக் கருப்பாக்கினால், பெய்யாத மழையும் பெய்யும் என ஐதீகம். சிவராத்திரியன்று அதற்குத் திருவிழா நடைபெறுகிறது.