கோவிலின் எல்லையை மிதிக்கும் இடத்தில் தூண்டுகை விநாயகர் சந்நிதி கொண்டுள்ளார். இவரை தரிசித்து ஆசி பெற்ற பின்னரே ஆலயத்துள் செல்வது பக்தர்களின் வழக்கம்.
கல்மலையில் ஐம்பதடி உயரமுள்ள ஒரு பகுதியைக் குடைந்து மூலஸ்தானத்தை நிர்மாணித்துள்ளனர். மூலஸ்தானத்தில் மூலவராக சுப்ரமண்யசுவாமி எழுந்தருளியுள்ளார். நான்கு திருக்கரங்களைக் கொண்ட அழகிய திருமேனி. இவருக்கு செந்திலாண்டவர் என்ற பெயரும் உண்டு.
அபய - வரத கரங்களாக இரண்டும், சிவனை அர்ச்சிக்க புஷ்பங்களைக் கொண்ட கரம் ஒன்றும், உத்ராட்ச மாலையை ஏந்திய கரம் ஒன்றுமாக தவக் கோலத்தில் காணப்படுகிறார்.
மூலவர் சந்நிதியில் போத்திகள் அர்ச்சகராக இருக்கின்றனர். பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதம் தருகின்றனர்.
மூலஸ்தானத்தை சுற்றியுள்ள பாம்பறை (சுரங்கம்) இருட்டாக உள்ளது. இதில் முருகன் பூஜித்த பஞ்ச லிங்கங்களை தரிசிக்கலாம். இதை சந்தனாசல குகை என்றும் கூறுவார்கள். குகைக்குள் இருக்கும் பஞ்ச லிங்கங்கள் பஞ்ச பூதங்களை குறிப்பதாகும்.
சூரியனாலும் தெய்வயானையாலும் பூஜிக்கப்பட்ட சக்தி லிங்கமான ஜகந்நாத லிங்கத்தை முருகன் பூஜித்துக் கொண்டிருப்பதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. இவற்றுடன் ஆறுமுகநயினார் பூஜிக்கும் ஆன்மலிங்கம், மற்றும் ஜெயந்திநாதர் சந்நிதியிலுள்ள சந்திர லிங்கம் சேர்த்து முருகப்பெருமான் அஷ்டலிங்கங்களை பூஜிப்பதாக கொள்ளலாம்.
மகா மண்டபத்தில் பார்வதி தேவியையும், கரியமாணிக்க விநாயகரையும் தரிசிக்கலாம்.
அர்த்த மண்டபத்தை வீர மகேந்திரனும் வீர பாஹுவும் இரு பக்கங்களிலும் காத்து நிற்கின்றனர்.
மணியடி எனப்படும் மயில் மண்டபத்து நடுவே ஆறுமுக நயினார் இரு தேவியர்களுடன் காட்சி தருகின்றார். கிழக்கே ஜெயந்திநாதர், அலைவாய் உகந்த பெருமான் மற்றும் ஷண்முகரின் உற்சவ மூர்த்திகளை தரிசிக்கலாம்.
ஷண்முக விலாஸ மண்டபத்திற்கு சற்று தொலைவில் நாழிக் கிணறு இருக்கின்றது. ஸ்கந்தபுஷ்கரிணி என்றும் கூறுவர். முருகன் சிவபூஜை செய்யும் முன், அபிஷேகம் செய்வதற்காக தனது வேல் கொண்டு உருவாக்கிய தீர்த்தம் எனக் கூறப்படுகிறது. இதில் நீராடிய பிறகே கடலில் குளிக்க வேண்டும் என நியதி.
இந்த மண்டபத்திற்கு முன்னால் கடல் பரந்து விரிந்து காணப்படுகிறது. அலைகளின் இழுப்பு, கொந்தளிப்பு ஏதுமின்றி அமைதியாக இருக்கும். பயமின்றி நீராடலாம்.
ஷண்முக விலாஸத்திலிருந்து பிரதான ஆலயம் வரை வழி நெடுக சிற்ப வேலைப்பாடுகளையுடைய தூண்களைக் காணலாம்.
முதற் பிரகாரத்தை சிவிலி மண்டபம் என்பார்கள். இதில் சித்தி விநாயகர் எழுந்தருளி ஆசி வழங்குகிறார். மேற்கே 108 சிவலிங்கங்களை தரிசிக்கலாம். வடக்கே மிகப் பெரிய திருமேனியுடன் வல்லப விநாயகர். அடுத்து கொடிமரம்.
சிவிலி மண்டபத்தில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட சுப்ரமண்யரின் திருவுருவம் அழகாக உள்ளது. மயில் மீதமர்ந்து அசுரனை தனது வேலால் தாக்கும் கோலத்தில் காணப்படுகிறார். மார்பில் வேல் தாங்கிய சூரபத்மனின் சிலை எதிரே உள்ளது. அவன் ஏவிய சேவல் ஒன்றும் காணப்படுகிறது.
சிவிலி மண்டபத்தின் வடக்குப் பகுதியில் பள்ளிகொண்ட பெருமாள், ஸ்ரீநிவாசர், கஜலட்சுமி ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். மலையிலிருந்து குடையப் பெற்ற சிலாவடிவங்கள்.
இரண்டாம் பிரகாரத்தில் வீரமார்த்தாண்டனும் வீர சேகரியும் காணப்படுகின்றனர். கிழக்கு நோக்கியபடி குமரவிடங்க பெருமான் காட்சி தருகிறார். தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் அழகாக இருக்கின்றது. யாகசாலை மண்டபம், அழகிய பாலசுப்ரமண்யர், வள்ளியம்மை ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர்.
வடமேற்கே தெய்வயானை சந்நிதி கொண்டுள்ளார்.
ஆத்மலிங்கம், மனோன்மணி, பானுகேசுவரர், உமா மகேஸ்வரர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருமூலநாதர், காளத்தீஸ்வரர், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மை, சங்கரலிங்கர், அருணகிரிநாதர் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர்.
பிரகாரத்து சுவரின் துவாரம் வழியாக காது வைத்துக் கேட்டால் கடல் அலை ஓசை கேட்கும். இடும்பன் சந்நிதி முன்பாக நின்றால் இதமான குளிர் காற்று வீசுவதை உணரலாம்.
ஆலயத்தின் வடக்கே மணற்குன்று ஒன்று கடற்கரையோரமாக உள்ளது. இதைக் குடைந்து உருவாக்கிய கருவறையில் வள்ளி, தத்தாத்ரேயர் ஆகியோரின் திருவுருவங்களை பார்க்கலாம். வள்ளிக் குகையின் அடிப்பாகத்தை கடலலைகள் வந்து அலைக்கின்றன. வள்ளி தெய்வயானைக்கு பயந்து ஒளிந்து கொண்ட குகை என்பர்.
காலை 5.10 சுப்ரபாதம், காலை 5.35 விஸ்வரூபம், மதியம் 12 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை.
மாலை 5.00 - 5.30 சாயரட்சை தீபாராதனை, இரவு 7.45 மணிக்கு ராக்கால தீபாராதனை.
அறுபடை வீடுகளுள் இரண்டாவது - தேவார வைப்புத் தலம்.