படைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த பிரம்மா, திலோத்தமையிடம் மோகம் கொண்டார். பிரம்மாவைத் தந்தை ஸ்தானத்தில் மதிக்கும் தேவகன்னிகையான திலோத்தமை, இந்த அடாத செயலைக் கண்டு ஓடத் தொடங்கினாள். துரத்திக் கொண்டு ஓடிய பிரம்மாவைச் சிவ கணங்கள் துரத்தின.
தனது செயலுக்காக வெட்கப்பட்டு வருந்திய பிரம்மா, இத்தலத்தில் அமர்ந்து சிவபூஜைகளைச் செய்து, பிராயச்சித்தம் வேண்டினார். ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களை இவ்விறைவன் அழித்ததால் இவ்வூர் திருச்சுரம் எனப் பெயர் கொண்டது. சுரம் என்றால் மலைகள் எனப் பொருள். நாளடைவில் திருச்சுரம் என்பது மருவி திரிசூலம் என்றானதாகக் கூறுவர்.
"வானவன் மா தேவி சதுர்வேதி மங்கலம்", "திருநீற்று சோழ நல்லூர்" ஆகிய பெயர்கள் கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளன. நான்கு வேதங்களும் நான்கு மலைகளாக நிற்க அதன் நடுவே அமைந்த கோயில் இது.