ஸ்தல வரலாறு - தாயுமானவ சுவாமி திருக்கோயில்
திருச்சிராப்பள்ளி எனப்படும் திருச்சி, ஆதியில் சிற்றம்பூர் என்றே அழைக்கப்பட்டதாம். பிராமி கல்வெட்டுகளில் கூபககுஹ அதாவது கிணற்றுக் குகை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிரா என்ற சமண முனிவர் கல்படுக்கைகள் அமைத்து அதில் இறைவன் பள்ளிகொண்டதால் சிராப்பள்ளி என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுவதுமுண்டு.
ராவணனின் உறவினனான திரிசரன் என்பவன் முன்பு இப்பகுதியை ஆண்டு வந்தான். திரிசரன் என்றால் மூன்று தலைகளையுடையவன் என்று பொருள். இதனால் திரிசிரபுரம் எனப் பெயர்கொண்டு ஆங்கிலேயர் காலத்தில் டிரிச்சினாப்பள்ளி என்றழைக்கப்பட்டதாகவும் கூறுவர். திரிசரன் என்ற அரசன் அத்தலத்து இறைவனை வழிபட்டுப் பூஜித்தான் என்பது வரலாறு.
ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் ஏற்பட்ட போட்டியில், கயிலாயத்தின் மூன்று பகுதிகளைப் பிரித்தெடுத்த வாயுதேவன் அவற்றை பெருங்காற்றால் வீசிப் பறக்கடித்தான். அவை மூன்றும் திருக்காளத்தி, திரிகோணமலை (இலங்கை), திருச்சிராப்பள்ளி ஆகிய மூன்று தலங்களில் வந்து விழுந்தன. இதனால் இத்தலத்தைத் தென்கயிலாயம் எனப் போற்றுவர்.
உறையூர் நந்தவனத்துச் செவ்வந்தி மலர்களைக் களவாடியவனைத் தண்டிக்காத பராந்தக சோழனைப் பற்றி சாரமாமுனிவர் இறைவனிடம் முறையிட்டதால், கிழக்கு முகமாக இருந்த சிவன் மேற்கு முகமாகத் திரும்பி உறையூரை மண்மாரி பொழிந்து அழித்த வரலாற்றின் தொடர்பாக, கிழக்கு வாசல் பகுதி தெரியும் வண்ணம் நிலை மட்டுமே உள்ளது. மேற்கு முகமாக மூலவர் காட்சி தருகிறார்.
பூம்புகாரைச் சேர்ந்த ரத்னகுப்தர் எனும் வணிகர், தன் மகள் ரத்னாவதியை, திருச்சியைச் சேர்ந்த தனகுப்தனுக்கு மணம் முடித்து வைத்தார்.
ரத்னாவதி கர்ப்பமுற்று பிரசவத்திற்காகத் திருச்சியில் இருந்தபோது, அவளுக்கு உறுதுணையாக இருக்க நினைத்த அவளது தாய், மருந்து - எண்ணெய் போன்ற பொருட்களோடு ஊரிலிருந்து புறப்பட்டாள். அப்போது காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடியது. நகருக்குள் வர முடியாமல் அவதியுற்றாள் தாய்.
பிரசவவலி வேதனை கொண்ட ரத்னாவதி, இங்குள்ள இறைவன் செவ்வந்திநாதரிடம் காப்பாற்றும்படி வேண்டினாள். அவள் மீது இரக்கம் கொண்ட செவ்வந்திநாதர், அவளது தாயின் வடிவத்திலேயே வந்து பிரசவம் பார்த்து, தாய்க்கும் சேய்க்கும் செய்ய வேண்டிய உதவிகளைச் செய்தார்.
பின்னர் நிஜத்தாய் வந்து சேர்ந்ததும், தனது சுயரூபத்தைக் காட்டி மறைந்தார். ஒரு தாயாக இருந்து பிரசவம் பார்த்துக் காப்பாற்றியதால் தாயுமானவர் என்ற திருநாமம் கொண்டார்.
தடாகத்திலுள்ள தாமரை மலரில், சிறிய பெண் குழந்தையாகத் தோன்றிய உமையவளை, காத்யாயன முனிவர் எடுத்து வளர்த்து வந்தார். அவளது கூந்தலில் நறுமணம் வீசியதால் மட்டுவார்குழலி எனப் பெயரிட்டார். மட்டு என்றால் தேன் என்ற பொருளும் உண்டு. தேன் நிறைந்த மலர்களைச் சூடியவள் என்பதால் இந்தப் பெயர் பொருத்தமானதே. மட்டுவார்குழலி இவ்விறைவனை வழிபட்டுப் பூஜித்து அவரையே மணம் புரிந்தாள் என ஸ்தல வரலாறு.
தலம் வரலாறு - உச்சிப் பிள்ளையார் கோயில்
ராவண சம்ஹாரத்திற்கு உதவியாக இருந்தவர்களுக்கு, தமது அன்பையும், பாராட்டுதல்களையும், பரிசுகளையும் தந்துகொண்டிருந்த ஸ்ரீ ராமர், தமது வம்சாவழியினர் வழிவழியாக வழிபட்டு வந்த தமது குலதெய்வமான ஸ்ரீ ரங்கநாதர் விக்ரகத்தை விபீஷணனுக்குக் கொடுத்தார்.
இலங்கை செல்லும் வரை வழியில் எங்கும் கீழே வைக்கலாகாது என நிபந்தித்திருந்தார். அப்படி வைக்க நேர்ந்தால், வைத்த இடத்திலேயே பிரதிஷ்டையாகிவிடும் என எச்சரித்திருந்தார்.
விக்ரகத்துடன் அயோத்தியிலிருந்து புறப்பட்ட விபீஷணன், வெகுதூரப் பயணத்திற்குப் பின், இவ்வூருக்கு அருகில் காவிரி பிரவாகமாக ஓடுவதைக் கண்டதும், அதில் குளிக்க ஆசைப்பட்டான். அவனுக்கு அந்த ஆசையை உண்டாக்கிய விநாயகர், ஒரு பாலகன் வடிவில் எதிரில் போய்க்கொண்டிருந்தார். சிறுவனை அழைத்த விபீஷணன் தான் குளித்துவிட்டு வரும் வரை விக்ரகத்தைக் கையில் வைத்திருக்குமாறும், தரையில் வைக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டான்.
சம்மதித்த சிறுவன் பாரம் தாங்க முடியாத நிலை ஏற்பட்டால், மூன்று முறை கூப்பிடுவேன், நீங்கள் வந்து வாங்கிக்கொள்ளவில்லை என்றால், தரையில் வைத்துவிடுவேன் என்ற நிபந்தனையுடன் விக்ரகத்தைப் பெற்றுக்கொண்டான்.
காவிரிக் குளியலின் ஆனந்தத்தில் மூழ்கியிருந்த விபீஷணனுக்கு திடீரென சிறுவனின் நிபந்தனை ஞாபகத்திற்கு வரவே அவசர அவசரமாகக் கரைக்கு வந்தான். அங்கே விக்ரகம் தரையில் வைக்கப்பட்டிருந்தது. நான் மூன்று முறை அழைத்தேன் நீங்கள் வரவில்லை, பாரம் தாங்க முடியாததால், கீழே வைத்துவிட்டேன் எனக் கூறி சிறுவன் மலையுச்சிக்கு ஓட்டம்பிடித்தான்.
தரையில் வைக்கப்பட்ட விக்ரகம் நிலைகொண்டுவிட்டது. விபீஷணன் எவ்வளவோ முயன்றும், அதை அசைக்கக்கூட முடியவில்லை. எம்பெருமான் அங்கேயே சயனித்துவிட்டார். இதனால் கோபம் கொண்ட விபீஷணன், சிறுவனைத் துரத்திக்கொண்டு மலைக்கோட்டை உச்சி வரை வந்து, சிறுவனைப் பிடித்து, அவனது தலையில் குட்டிவிட்டான். அடுத்த கணம், சிறுவன் விநாயகராக மாறி விபீஷணனுக்கு ஆசி வழங்கினார். விபீஷணன் குட்டியதால் ஏற்பட்ட வடு இன்றளவும் பிள்ளையார் தலையில் உள்ளது.
இங்கிருந்தபடியே இலங்கையைப் பார்த்து அனுகிரகம் செய்யும் விதத்தில் தென்திசை நோக்கியே விக்ரகத்தை வைத்துள்ளதாகவும், அவர் கோயில் கொண்ட இடம் ஸ்ரீரங்கம் எனப்படும் என்றும் கூறி மறைந்தார் விநாயகர் எனத் தலம் வரலாறு.