தேவர்களும் அசுரர்களும் விநாயகப் பெருமானை வழிபடாது பாற்கடலை கடையத் தொடங்கினார்கள். அதன் விளைவாக ஆலகாலவிஷம் வெளிப்பட்டது. உடனே தேவர்கள் கடல் நுரை பிள்ளையார் ஒன்றை உருவாக்கி பூஜித்தனர். ஆலகால விஷத்தை பரமேஸ்வரன் விழுங்கி தேவர்களை காப்பாற்றினார்.
அந்த கடல் நுரை பிள்ளையாரை தேவேந்திரன் தனது நித்ய பூஜா மூர்த்தியாக கொண்டு தினமும் வழிபட்டான். சாப விமோசன நிவர்த்தி பெற பூலோகம் வந்தபோது தன்னுடனேயே இந்த கடல் நுரைப் பிள்ளையாரையும் எடுத்து வந்தான். இத்தலத்திற்கு வந்தபோது இங்கு வைத்து அவரை பூஜித்தான். பின்னர் திரும்ப எடுக்க முடியாமல் போனது. இங்கேயே நிலை கொள்ள தீர்மானித்து விட்டார் பிள்ளையார் எனக் கருதி தேவலோகம் சென்றான் இந்திரன். விநாயக சதுர்த்தி தினத்தன்று ஆண்டுதோறும் வந்து வழிபட அனுமதி பெற்று சென்றான் இந்திரன்.
சிவராத்திரி தினத்தன்று நான்கு ஜாமங்களில், நான்கு ஸ்தலங்களில் சிவபூஜை செய்வதற்காக ஆதிசேஷன் பூலோகம் வந்தபோது, பாதாளத்திலிருந்து ஒரு பிலத்தின் (பள்ளத்தின்) வழியாக வந்தான். அந்த பிலத்தில் காவிரி ஆறு இறங்கி பாதாளம் சென்று விடுகிறது. ஒரு முடித்தலையோ (அரசன்) ஒரு சடைத்தலையோ (முனிவர்) பாதாளத்தில் இறங்கி உயிர்தியாகம் செய்தால், காவிரி வெளியே வரும் என அசரீரி கேட்கிறது. அருகேயுள்ள கொட்டையூரில் தவம் மேற்கொண்டிருந்த ஹேரண்ட முனிவர் தம்மையே தியாகம் செய்ய முன்வந்து பாதாள பிலத்தில் இறங்கினார். காவிரியும் மீண்டு வந்தது என ஸ்தல வரலாறு.
மகிஷனை சம்ஹாரம் செய்த ஹத்தி (தோஷம்) நீங்க, துர்கை இத்தலம் வந்து ஸ்வேத விநாயகரை வழிபட்டதாக கூறப்படுகிறது.
காவிரி மேலே பொங்கி வந்த இடம் மேலைக் காவேரி எனப்படுகிறது. ஹேரண்ட முனிவர் பிலத்தில் இறங்கியதும் காவிரி வலஞ் சுழித்து மேலே எழுந்தது. இதன் காரணமாக இவ்வூருக்கு திருவலஞ்சுழி எனப் பெயர் ஏற்பட்டது. காவிரி நதி வலஞ் சுழித்து ஓடி இவ்விறைவனை வழிபட்டதால் திருவலஞ்சுழி எனப் பெயர் கொண்டது.
தேவாரத்திருத்தலம்.