சூரபத்மன் மீது படையெடுத்துச் சென்றபோது முருகப்பெருமான் தங்கிச் சென்ற ஸ்தலம் இது. அறுபடை வீடுகளுள் இது நான்காவது படை வீடு.
ஸ்வாமியாகிய சிவபெருமானுக்கு குருநாதராக இருந்து பிரணவம் உபதேசிக்க முருகன் எழுந்தருளிய மலை என்பதால் 'ஸ்வாமிமலை' எனப் பெயர் கொண்டது. 'ஏறு' போன்று முருகன் அமர்ந்ததால் இதை 'ஏரகம்' என்பர். 'ஏறு' என்றால் அழகு எனப் பொருள். கைகட்டி, வாய் புதைத்து ஒரு சீடனின் நிலையில் சிவபெருமானும், பிரணவத்தை உபதேசிக்கும் குருவாக முருகனும் அமர்ந்து யோகத்திலிருந்த ஸ்தலம் இது.
சாப விமோசனம் பெற இங்கு வந்த பூமி தேவி, விமோசனம் பெற்றதும், முருகனைப் பிரிய மனமில்லாமல் இங்கு நெல்லி மரமாக இருப்பதாக ஐதீகம்.
பிறவிக் குருடன் ஒருவன் உணவின்மையால் பட்டினி கிடந்து இங்குள்ள விநாயகரை வந்து தொழுதான். உடனே கண் கிடைக்கப் பெற்றான். இவனுக்குக் கண் கொடுத்தவரே 'நேத்ர விநாயகர்' எனப்படுகிறார்.
இந்திரனை எதிர்த்த அரிகேசன் எனும் அசுரனை வெல்ல வரம் வேண்டிய இந்திரன் இத்தலம் வந்து முருகனை வழிபட்டு வன்மை பெற்றான். அப்போது தனது ஐராவதத்தை இங்கு நிறுத்திவிட்டுச் சென்றதால், இங்கு முருகனுக்கு யானை வாகனமாக உள்ளது. முருகனின் பாத தரிசனம் அருணகிரிநாதருக்குக் கிடைக்கப் பெற்ற ஸ்தலம் இது.
இது அறுபடை வீடுகளுள் ஒன்று - அநாகத ஸ்தலம்.