மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் ஆகிய மூன்றுமே சிறப்பாக இருக்கும் ஸ்தலம் இது. வேதியர்கள் மிகுந்து இருந்த தலம். அவர்கள் வேதம் ஓதும் ஒலியைப் பயின்று, அவற்றை திரும்பக் கூறுமாம் கிளிகள். காசிக்கு சமமான தீர்த்தச் சிறப்புகளைக் கொண்ட ஸ்தலம் எனப் போற்றப்படுகிறது.
அசுரனான சலந்திரனின் மகன் மருத்துவன், தேவர்களையும் முனிவர்களையும் வெறுப்பவன். இவன் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து ஒரு சூலாயுதத்தை வேண்டிப் பெற்றான். தேவர்களுக்கு சொல்லொண்ணா இன்னல்களைத் தர ஆரம்பித்தான். மருத்துவனின் கொடுமைகளுக்குப் பயந்து அவர்கள் மறைந்து வாழ்ந்தனர்.
அவதியுறும் தேவர்களைக் காக்க வந்த நந்தியிடம் போர் புரிந்த மருத்துவன், சூலாயுதம் துணைகொண்டு நந்தியின் கொம்புகளை முறித்து, காதுகளை அறுத்து, இம்சித்தான். நந்தியின் உடலில் ஒன்பது துளைகள் செய்து அனுப்பிவிட்டான். இதனையறிந்த சிவபெருமான் பெருங்கோபம் கொண்டார். அவரது கோபங்கள் ஒரு வடிவத்தைப் பெற்று அவர் முன் நின்றது. அந்தக் கோர உருவமே அகோர மூர்த்தி.
சிவபெருமானின் பஞ்ச முகங்களான - தத்புருஷம், வாமதேவம், ஸத்யோஜாதம், அகோரம் - இவற்றுள் அதோமுகமாய் மறைந்திருந்த அகோர முகத்திலிருந்து ஆவிற்பவித்தவர் அகோரமூர்த்தி.
அந்த வடிவம் அசுரனை சம்ஹாரம் செய்யப் புறப்பட்டது. அகோரமூர்த்தியின் வடிவத்தைக் கண்ட அசுரன் பயத்தால் நடுநடுங்கிப் போய், அகோரமூர்த்தியுடனேயே ஐக்கியமாகிவிட்டான். சரணடைந்த மருத்துவனை அகோரமூர்த்தியின் காலடியிலும், காயமடைந்த ரிஷப தேவரை சுவாமி சந்நிதியின் நிருத்த மண்டபத்திலும் காணலாம்.
பிரம்ம பிரளயம் ஏற்பட்டு பிரம்மா அழிவது இத்தலத்தில்தான். (அருகே பிரம்ம சமாதி உள்ளது). புதிய பிரம்மன் அம்பிகையிடம் சிருஷ்டித் தொழிலை புதிய பாடமாகக் கேட்பார். பிரம்மாவிற்கு வித்தையை உபதேசம் செய்ததால், 'பிரம்ம வித்யாம்பிகை' என்றொரு திருநாமம். 'வேயன்ன தோளி நாச்சியார்' என கல்வெட்டுகளில் உள்ளது.
திருநாங்கூரிலுள்ள மதங்காஸ்ரமத்தில், மதங்க முனிவர்க்கு மகளாகத் தோன்றி, திருவெண்காடரை நோக்கி தவமிருந்து, அவரையே மணந்தவள் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
சக்தி பீடங்களுள் இது பிரணவ பீடம்.
ஸ்ரீ ராமபிரான் கரன் என்பவனோடு போர் புரிவதை வர்ணிக்கும் வால்மீகி ராமாயணத்தில் சிவ சம்பந்தமான குறிப்பு - 'ஸ்வேத வனத்தில் ருத்ரனால் தகிக்கப்பட்டு அந்தகன் மாய்ந்தது போல்' என்று வருகின்றது. அந்த ருத்ரனே அகோரமூர்த்தியாக திருவெண்காட்டில் இருக்கின்றார். இந்த மேற்கோளிலிருந்து இத்தலம் மிகவும் பழமையானது என அறியலாம்.
விருத்திராசுரனைக் கொன்ற பாவம் தீரவும், பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெறவும், தேவேந்திரன் இவ்விறைவனை வழிபட்டு நற்கதி பெற்றான் என ஸ்தல வரலாறு கூறுகிறது. துர்வாசரிடம் பெற்ற சாபத்தைப் போக்கிக்கொள்ள ஐராவதம், இத்தலத்தில் ஆனைமடு எனும் தீர்த்தம் அமைத்து, இவ்விறைவனை வழிபட்டு சாபத்தைப் போக்கிக்கொண்டது. சுவேதகேது என்பவனுக்கு யம தூதர்களால் வரவிருந்த இடர்களைப் போக்கிய ஸ்தலம் இது. பட்டினத்தார் சிவதீட்சை பெற்ற ஸ்தலம். சூரிய-சந்திரர்கள், அக்னி ஆகியோர் வழிபட்ட ஸ்தலம்.
பெண்ணாகடத்தைச் சேர்ந்த அச்சுத களப்பாளர், புத்திர பாக்கியம் வேண்டி வழிபட்டார். இத்தலத்து அன்னையின் அருளால் மெய்கண்ட தேவரைப் பெற்றார்.
பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் அகோர மூர்த்திக்கு விசேஷ பூஜைகளும், மூன்றாவது ஞாயிறன்று மகாருத்ராபிஷேகம், விபூதி அலங்காரங்களும் நடைபெறும்.
கிழமைகளில் இவருக்கு உகந்தது ஞாயிற்றுக்கிழமை. இரவு மூன்றாம் ஜாமம் இவருக்கு உரியது. மோகனகீதப் பிரியன் என்பதால் இவரது சந்நிதியில் மோகன ராகம் மட்டுமே நாதஸ்வரத்தால் வாசிக்கப்படுகிறது.
மாசி மாதம் கிருஷ்ண பட்சம் திருதியை பூர்வபல்குனி நட்சத்திரம் - அகோரமூர்த்தியின் அவதார தினம்.
மாசி மகத்து பூர நட்சத்திர நாளில் அகோரமூர்த்திக்கு விசேஷ ஆராதனைகள், உற்சவங்கள் நடைபெறும். திருவெண்காட்டின் பெருவிழாவின் நான்காம் நாளான மாசி மகத்தன்று, இறைவன் காவிரி சங்கமத்திற்குச் சென்று, தீர்த்தமளிக்கின்றார். ஐந்தாம் நாள் விழாவில், மருத்துவனை சம்ஹாரம் செய்வதை ஐதீகமாகக் கொண்டாடுவர். பதினோராம் நாள் தெப்பம்.
தேவாரத் திருத்தலம், சக்தி பீடங்களுள் ஒன்று - பிரணவ பீடம், நவக்கிரக ஸ்தலங்களுள் ஒன்று - புதன் ஸ்தலம், சப்த வனங்களுள் ஒன்று - ஸ்வேத வனம்.