முதலாம் ராஜராஜ சோழனின் மனைவியான த்ரைலோக்கிய மாதேவியின் பெயரில் நிர்மாணிக்கப்பட்ட ஊர் என்பதால் த்ரைலோக்கிய மாதேவி சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டு தற்போது மருவி திருலோக்கி என்றானது.
பாப விமோசனம் வேண்டி இத்தலத்திற்கு வந்த குரு பகவான், த்ரைலோக்ய சுந்தரேஸ்வரருக்கு, பசு நெய்யால் விளக்கேற்றி, கொன்றை மாலை அணிவித்து, முல்லைப் பூவால் அர்ச்சித்து, தயிரன்னம் நைவேத்யம் செய்து வழிபட்டார். இத்தலத்தில் தவம் மேற்கொண்ட குரு பகவானுக்கு, மார்கழி திருவாதிரை நாளன்று, சுந்தரேஸ்வரர் அகிலாண்டேஸ்வரியை ஆலிங்கனம் செய்தவாறு, ரிஷபாரூடராய் காட்சி தந்து, குருவிற்கு பாப விமோசனம் நல்கினார் என ஸ்தல வரலாறு.
சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாகி, நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதனுக்கு உயிர்பிச்சை தருமாறு வேண்டி நின்ற ரதி தேவி, த்ரைலோக்கிய சுந்தரரை வழிபட்டு மீண்டும் கணவனைப் பெற்றாள் என ஸ்தல வரலாறு. (எரித்தது - கொற்கையில், உயிர் பெற்றது திருலோக்கியில்)
5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் எனவும் ராஜேந்திர சோழன் திருப்பணிகள் செய்துள்ளான் எனவும் குறிப்பொன்று கூறுகிறது.
தேவார வைப்புத்தலம்